Thursday, August 27, 2020

மறவாது கல் எறிந்த சாக்கியர்

 


உலகம் தோன்றிய காலம் தொட்டே உயிர் வாழ்வதற்குத் தேவைப்பட்டது உணவே ஆகும். இன்றளவும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்களுக்கு அதுவே அடிப்படைத் தேவை ஆகிறது. பறவைகளும் விலங்குகளும் தங்களது பாதுகாப்புக்காகக் கூடுகளை ஆங்காங்கே அமைத்துக் கொள்வதுபோல் மனிதனும் பின்பற்றினான். ஆனால் மனிதன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. உடுக்க உடையையும் வசிக்கக் கூரை உள்ள வீட்டையும் ஏற்படுத்திக் கொண்டான்.எவ்வாறாயினும் உணவும் உறக்கமும் இன்றியமையாதனவாகப் போய் விட்டன.   

ஒரு காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது மனிதன் உணவைத் தேடும்படி இருந்தது. கிடைத்த காய்களையும் கனிகளையும் புசித்துப்  பசியைப் போக்கிக் கொண்டான். நாளடைவில் தானே பயிரிட்டு அத்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான். அப்படியும் இயற்கையின் ஒத்துழைப்பு விவசாயத்திற்கு இன்றளவும் தேவைப்படுகிறது. இப்போதோ தேவைக்கு அதிகமாகவே புசித்து வருகிறான்.உணவையும் சேமித்து வருகிறான். இருந்த இடத்திலிருந்தே உணவைத் தருவித்துக் கொள்கிறான். இதற்கிடையில் பசித்தோருக்கு அன்ன தானமும் செய்கிறான். 

 மாணிக்க வாசகரோ , " உண்டு உடுத்து இருப்பதானேன் " என்று பாடுகிறார். மானுட வாழ்க்கை என்பது  உண்பதிலும் உடுப்பதிலும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் முழுக் கவனத்தைச் செலுத்துகிறது என்பதால் மகான்கள்,                   " வேண்டேன் மானுட வாழ்க்கை" என்று பாடினர். இவ்வாறு ஆக்கைக்கே இரை தேடுவதில் காலம் கழிவதால் மானுடப் பிறப்பை அவர்கள் விரும்பவில்லை. வட மாநிலத்தில் வசித்து வரும் ஒரு இல்லத்தரசியார் தனது வேண்டுதல் நிறைவேறுதல் பொருட்டுப் பல்லாண்டுகளாகப் பழங்களையும் பாலையும் உண்டு வருகிறார் என்ற செய்தி அண்மையில் வெளியாகியது. 

தேவ லோகத்தில் நிலையே வேறு.அவர்கள் கண் இமைக்கமாட்டார்கள். நிலத்தில் பாதம் தோய நடக்க மாட்டார்கள். சுயம்வரத்தில் வந்த தேவர்களுக்கு இவ்வாறு காணப்பட்டதால் தோற்றம் ஒன்றானாலும், கண் இமைத்தலானும் கால்கள் காசினியில் தோய்தலாலும் உண்மையான நளனை எளிதே கண்டறிந்து மாலையிட்டாள் தமயந்தி என்று நளவெண்பா மூலம் நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட நிலை இறைவனது உண்மை அடியார்களுக்கும் கிடைக்கும். மீண்டும் பிறவாது சிவலோகத்தே என்றும் இருக்கலாம். மீண்டும் பிறந்து அரிசிச் சோற்றை வேளா வேளைக்குத் தேடும் நிலை ஏற்படாது. 

நாம் உண்ணும் உணவு இறைவனது அருட் கொடை என்ற எண்ணம் முதலில் ஏற்பட வேண்டும். " பயிர் காட்டும் புயலானும்" என்றும் " பாரதனில் பயிர் ஆனான் காண் " என்றும்  திருமுறைத் தொடர்கள் இதையே காட்டுகின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக உண்பதற்கு முன்பாகப் பெருமானுக்கு மலரிட்டு அர்ச்சித்து விட்டு, நைவேத்தியம் செய்ய வேண்டும் என்ற நியமம் பூண்டு வாழ்ந்தனர் நமது முன்னோர். கிராமங்களில் வாழும் பலர் இன்றைக்கும் உச்சிக் கால மணியின்  ஒலி அருகிலுள்ள ஆலயத்தில் எழுப்பப் படுவதைக் கேட்ட பிறகே தமது இல்லங்களில் உணவு உண்பதை மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறு செய்யாதோருக்கு விளையும் தீமைகளை அப்பர் பெருமான் , " உண்பதன் முன் மலரிட்டு உண்ணாராகில்  "                             " பிறப்பதற்கே  தொழிலாகி இறக்கின்றாரே" என்பார். 

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சாக்கிய நாயனார் என்பவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சிவபெருமான் பால் ஈர்க்கப்பட்டுப் பெருமானை மலரிட்டு வழிபட்டு வந்தார். ஒருநாள் மலர்கள் கிடைக்காமல் போகவே, அருகாமையில் இருந்த கற்களைக் கொணர்ந்து அவற்றைக்  கொண்டு வழிபட்டார். இச்செயலை நியமமாகவே கொண்டு உறுதியுடன் கல்லெறிந்து வழிபட்ட பின்னரே உண்பது என்று பேரன்பு கொண்டு ஒழுகினார். இதனைச் சேக்கிழார் பெருமான், " உறுதி வரச்  சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து " என்கிறார். 

காஞ்சிக்கு அருகிலுள்ள திருச் சங்கமங்கையில் வாழ்ந்து இவ்வாறு கல்லெறிந்து அளவற்ற அன்போடு நாயனார் வாழ்ந்து வரும் வேளையில் ,           " பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் " என்ற உறுதியோடு நின்றார் என்கிறது பெரிய புராணம். " சிவ நன்னெறியே பொருள் ஆவது " என்ற உணர்வு கொண்டார் சாக்கியர். இந்த ஞானம் அவருக்கு " சிவன் அருளாலே உணர்ந்து அறிந்த" தாகத் தெய்வத் சேக்கிழார் காட்டுவார். மேலும் " அன்பினால் மறவாமை தலை நிற்பார் " என்று புராணம் கூறுவதால் இந்நிலையிலிருந்து அவர் ஒருபோதும் விலகியது இல்லை என்பது தெளிவாகிறது. கல் இருந்ததையும் மனம் பதைப்போடு தான் செய்தார் எனக் காட்டுகிறது பெரிய புராணம். " கல் கண்டு அதனைப் பதைப்போடும் எறிந்தார் " என்பதைக் காண்க. அதனை இறைவன் மலர்களாகவே மனமுவந்து ஏற்றான் என்பதை, இளம் புதல்வர்கள் இகழ்ந்த செயல் செய்தாலும் பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு ஏற்பதுபோல " நீள் சடையார் தாம் மகிழ்வார் " என்று பக்திச்  சுவையோடு வருணிக்கிறார் சேக்கிழார் பெருமான். இவ்வளவுக்கும் புத்த பிட்சுக்களுக்கான துவர் ஆடையைத் தவிர்க்காமல் இதனைச் செய்து வந்தாராம். மற்றவர்கள் அதனைக் கல் என்றாலும் சிவபிரான் அதனை மலராகக் கொண்டான் என்பதை, " அல்லாதார் கல் என்பார் ; அரனார்க்கு அஃது அலர் ஆமால்  " என்ற உயரிய வரிகள் இதனைத் தெரிவிக்கின்றன. 

சிவத்தொண்டுக்குப் பலன் கிட்டும் காலம் ஒரு நாள் வந்தது. நாயனாரது பெருமையை உலகோர் அறியும்படி இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான். அன்றையதினம் நாயனாருக்கு கண் அயர்ச்சி மேலிடச் செய்தான். இந்தக் கட்டத்தில் தான் பெரிய புராணத்தை நாம் ஊன்றிப் படிக்க வேண்டும்.  அங்கு ஒருநாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் " என்பதைச் சிலர் கல் எறிந்து இறைவனை வழிபடும் முன்பாகவே உணவு உண்டார் என்று தவறாகப் பொருள் கொள்வதைப்  பார்க்கிறோம். உண்ணப் புகுதல் என்பது உண்டு விட்டதைக் குறிக்காது. அதற்கான ஏற்பாடுகளுடன் அதற்கு ஆயத்தமாதல் என்பதே பொருள். அந்த அயர்ச்சியும் அருள் காரணமாக இறைவன் தந்தருளியதேயாம். 

இந்த அயர்ச்சியும் சில நிமிடங்களே நீடித்திருக்கக் கூடும். நியமத்தின்  பயனாக அந்நிலையிலிருந்து மீண்டெழுந்த நாயனார், " எங்கள் பிரான் தன்னை எறியாது அயர்ந்தேன் யான் "  என்கிறாரே தவிர, உண்டேன் என்று சொல்லவில்லை. அத்துடன் நில்லாது, உடன் எழுந்து, " பொங்கிய காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு " சிவலிங்கப் பிரான் முன்படைந்து கல்லினால் எறிந்து வழிபட்டார். 

இன்னும் ஒன்றையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும். உண்ட பின்னர் வழிபாடு  செய்யலாம் என்று இராமல் , முன் வினையால் ஏற்பட்டதே உண்டி என்பதால் அதனை ஏற்காது ஒழிந்து, தான் அயர்ந்து விட்டதால் நியமம் தவறியதோ என்று  வேட்கை மிகுந்தபடி, பெருமானிடம் ஓடி வந்தாராம். இதனையும் சேக்கிழார் வாக்கிலேயே அறிவது உத்தமம்:

" கொண்டதொரு கல்லெடுத்துக் குறி கூடும் வகை எறிய

உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடிவரும் வேட்கையோடும் 

கண்டருளும் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால் 

தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியோடும் தோன்றினார்."   

தன்னை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வரும் சாக்கிய நாயனாருக்கு முன்பு சிவபெருமான் உமாதேவியுடன் விடை மேல் எழுந்தருளி அவரைச் சிவலோகத்தே இருத்தினான். அவரது அன்பை ஈசனைத் தவிர யாரால் அறிய முடியும் என்று கூறி, சாக்கிய நாயனார் புராணத்தை நிறைவு செய்கிறார் தொண்டர் சீர் பரவ வந்த தெய்வச்  சேக்கிழார்.

" கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார் 

  நெல்லினால் சோறு உண்ணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் "

 என வரும் அப்பர் பெருமானது குறுக்கை வீரட்டப் பதிக வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.

.( பிற்குறிப்பு: சரிவர பொருள் கொள்ளாமல் நாயனார் கல்லெறியாமல் உணவு உண்டார் என்று விக்கிப்பீடியாவில் பின்வருமாறு வெளியிட்டிருப்பதை நமது முகநூல் அன்பர் சுட்டிக் காட்டியதன் பயனாக எழுந்ததே இக்கட்டுரை. அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்: தவறு திருத்தப்பட வேண்டும் என்றும் எண்ணுகிறோம்:

" One day he forgot to do his austerities and started consuming food. " ) 

 " மறவாது  கல் எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்" - சுந்தரர் தேவாரம்   


 
2 comments:

  1. Your write up puts the anecdote in context. Blogs being public domains, writers will do well to learn and appreciate well the content for its context, latent meaning before publishing their articles.

    ReplyDelete

  2. மிகவும் அருமையான வரி....நெல்லினால் சோறு உண்ணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்

    ReplyDelete