சிவபாதசேகரன்
பரமேசுவரனின் எத்தனையோ நாமங்களில் பசுபதி என்பதும் ஒன்றாகும். வேதத்தின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்ரீ ருத்ரத்தில் பசுபதயே என்ற மந்த்ரம் வருகிறது. கன பாராயணம் செய்யும்போது ,"பசுபதயே ச ச பசுபதயே" என்று வரும்போது மெய் சிலிர்க்கும். கரூர், ஆவூர் , திருக்கொண்டீசுவரம் ஆகிய இடங்களில் மூலவருக்குப் பசுபதீசுவரர் என்ற பெயர் வழங்கப்படுவதைக் காணலாம். ஆவூர்க் கோயிலைப் பசுபதீச்சரம் என்று குறிப்பிடுகிறார் திரு ஞான சம்பந்தப் பெருமான். " ஆவூர்ப் பசுபதீச்சரம் பாடு நாவே " என்பது அவரது வாக்கு .
உயிர்கள் யாவும் பசுக்கள் எனக் குறிக்கப்படுவன. அவ்வுயிர்கள் யாவற்றையும் படைத்தும்,காத்தும்,அருளியும், தன்னிடமிருந்து மறைத்தும்,நிறைவாக இளைப்பாற்றியும் ஐந்தொழில்களைச் செய்து வருவதால் சிவபெருமான் அவற்றிற்குப் பதியாக ( தலைவனாக)க் கொள்ளப்படுகிறான் .இதன் காரணமாகவே பெருமானுக்குப் பசுபதி என்ற பெயர் ஏற்பட்டது. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத்திலும் அப்பெயரே நிலவுகிறது. பசுபதித் திருவிருத்தம் என்ற பெயரில் ஒரு திருப்பதிகமே அருளிச் செய்துள்ளார் திருநாவுக்கரசு நாயனார்.
உலகத்துயிர்களுக்குப் பொதுப் பெயராக பசு என்று வழங்கப்பட்டாலும் சிறப்பாக அது அனைத்துத் தேவர்களும் தங்கி அருள் புரியும் பசுவுக்கு மட்டும் உரியதாக உள்ளது. சிவபிரான் விரும்பி ஏற்கும் பால் ,தயிர் , நெய், கோமயம், கோசலம் ஆகியவற்றைத் தருவதால் அப்பிராணியை மட்டுமே பசு என்று அழைக்கிறோம். " ஆன் ஐந்தும் ஆடினான் காண் " என்கிறது தேவாரம். பசு நெய்யை ஏற்கும் பிரான் ஆவதால் நெய்யாடியப்பர் என்ற திரு நாமம் திருநெய்த்தானம் என்ற தலத்தில் வழங்கப்படுகிறது. சண்டேசுவரப் பெருமானால் ஆநிரைகள் பாலை அபிஷேகமாக ஏற்ற பெருமானுக்குப் பால் உகந்த நாதர் என்ற திருநாமம் திரு ஆப்பாடி என்ற தலத்தில் உள்ளது. பசு வடிவம் ஏற்று அம்பிகையே பாலால் அபிஷேகம் செய்த பல தலங்கள் வரிசையில் தனது கால் குளம்பு ( கோகுரம்) இடறியதால் பெருமான் வெளிப்பட்டு அருளிய திருக்கோழம்பமும் அவ்வடிவம் நீங்கப்பெற்ற ஆவடுதுறையும் குறிப்பிடத்தக்கவை. அங்கெல்லாம் முறையே கோகுரேசுவரர் என்றும், கோ முக்தீசுவரர் என்றும் என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு இருக்கும்போது அவன் ரிஷபாரூடனாக வெள்ளை விடை ( ரிஷபம்) ஏறி வருகிறான் இதையே சம்பந்தரும் தனது முதல் பதிகத்தில் " விடை ஏறி " என்று பாடுகின்றார். காளையும் பசு வர்க்கத்தைச் சேர்ந்தது. பசுக்களை மேய்க்கும் போது பாலகனான விசார சருமர் ( இவரே பின்னர் சண்டீசர் ஆனார்) ஆனிரைகளைக் கண்டவுடன், அவற்றை " விடைதேவர் குலம் " என்றே கருதினார் என்று பெரிய புராணம் கூறும். பசுவின் பெருமையைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் ,
"தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள்
எல்லாம் என்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர்
கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்தும் தம்முடைய
அல்லவோ நல் ஆனினங்கள் "
என்று விளக்கமாக அருளிச் செய்துள்ளார்.
ஒரே வரியில் ரிஷபத்தையும் பசுவையும் நினைவு படுத்தும் ஒரு அரிய சொல்லாட்சியைத் தேவாரப் பனுவல்கள் காட்டுவது , மிக்க நயம் விளைவிக்குமாறும் , சிந்தைக்கு விருந்தாகவும் இருப்பதைக் காணலாம்.
திருமறைக்காட்டில் தங்கிய காலத்தில் ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் பலவற்றுள், " சிலைதனை" எனத் துவங்கும் பதிகமும் ஒன்றாகும். அதில் ஒரு பாடலில் பெருமானை, " உயர் பசுபதியதன் மிசை வரு பசுபதி" எனக் குறிப்பிடுவது நயம் மிக்க பகுதியாம்.
உலகியலில் நாம் பதி என்றால் பெண்ணின் மணாளனைக் குறிப்பதாகவே பொருள் கொள்கிறோம். தெய்வங்களையும் உமாபதி, லக்ஷ்மி பதி என்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே இங்குப் பசுவின் பதியாவது காளை ஆவதைக் கருத வேண்டும். தெய்வத்தன்மை வாய்ந்த பசுவின் மணாளன் தெய்வமே பவனி வரும் காளையின் பதியாதல் காண்க. ஆகவேதான் இப்பாடலில் " பசுபதி அதன் மிசை வரு பசுபதி " என்று மிக அற்புதமாகக் காட்டுவார் நற்றமிழ் ஞானசம்பந்தர்
இப்பொழுது முழுப் பாடலையும் நோக்குவோம்;
கதி மிகு களிறது பிளிறிட
உரிசெய்த அதிகுணன் உயர் பசு
பதி அதன்மிசை வரு பசுபதி
பலகலையவை முறைமுறை உணர்
விதியறி தருநெறி யமர்முனி
கணமொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபுணர்கள் வழிபட வளர்
மறைவனம் அமர்தரு பரமனே.
யானையை உரித்துப் போர்த்தவனும்,விடையின் மேல் எழுந்தருளும் பசுபதியும் அதிகுணனும் ஆகிய பரமனின் இடமாவது, பல்வேறு கலைகளை முறையாகக்கற்றவர்களும், விதி வழி நின்று சிவநெறிப்படித் தவம் செய்யும் முனிவர்களும் நிறைந்து விளங்கும் திருமறைக்காடு ஆகும் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும். சகல புவனாதிபதியான பசுபதியைப் போற்றும் அருமையான பாடல் இது.
பசுபதி என்ற சொல்லை ஒட்டிப் பல சுவையான கருத்துக்களும் தகவல்களும்.
ReplyDeleteஅருமையான ஆழமான விளக்கம்!
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅற்புதம் ஐயா.
ReplyDeleteஎங்கள் ஊயில் அமைந்துள்ள எம்பெருமானுக்கும் பசுபதீஸ்வரர் என்ற நாமமே.
எங்கள் கிராமத்தில் ஏனைய வீடுகளிலும் பசு உள்ளது. எங்கள் ஊர் மக்களின் வாழ்வாதாரமும் இதுவே. ஆகையால் எங்கள் ஆஸ்தான ஐயர் பெருமக்கள் இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என நாமம் வைத்தார்கள்.
அருள்தரும் அலங்காரவல்லி அம்மை உடனுறை பசுபதீஸ்வரர் அனைத்து வளங்களையும் வழங்க வேண்டுமோ ஆக.
🙏🙏🙏🙏🙏
சிவா திருச்சிற்றம்பலம்