உதாரணங்களாகச் சிலவற்றைப்பார்ப்போம். உமையம்மை மயிலுருவில் பூஜை செய்த ஊர்களாக மயிலாப்பூர்,மயிலாடுதுறை ஆகிய ஊர்களின் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு பூஜித்தது எந்த யுகத்திலோ ---, யாமறியோம். அதற்கு முன்னர் அவை எப்பெயர்களால் வழங்கப்பட்டிருக்கக் கூடும் என்பது நமது அறிவுக்கு அப்பாற்பட்டது.
தமிழில் அமைந்துள்ள தலபுராணங்களில் தலச் சிறப்பு என்ற பகுதி இருப்பது சமய அன்பர்கள் அறிந்ததே. அப்பகுதியில் தலத்தின் பெயர்களும் அவற்றின் பெயர்க்காரணங்களும் , அப்பெயர்களை உச்சரிப்பதால் பெறும் பயன்களும், அங்கு செய்யப்படும் தானச் சிறப்பும், வசிப்போர் பெறும் பேறும் விரித்துக் கூறப்பெறும்.
மதுரை மாநகருக்குஉரிய பலபெயர்களுள் ஆலவாய் என்பதும் ஒன்று. திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களாவன மதுரைக் காண்டம்,கூடற் காண்டம்,ஆலவாய்க் காண்டம் என்பதாம். அவற்றுள் , மதுரைக் காண்டத்திலுள்ள தலச் சிறப்பில் வரும் பாடல் ஒன்றில் , திருவாலவாய் என்ற பெயரைச் சொல்லக் கேட்டால் அறம் பெறுவர் என்றும்,அப்பெயரை நினைத்த மாத்திரத்தில் செல்வம் பெறுவர் என்றும், கூறப்பட்டுள்ளது:
" திருவாலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர்
செல்வம் ஓங்கும்
திருவாலவாய் என்று நினைத்தவரே பொருள் அடைவர் "
என்பது அவ்வினிய பகுதி.
திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனது அரசவைக்குச் சென்றபோது, மன்னன் அவரிடம் எந்த ஊரிலிருந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்டவுடன், தனது ஊரின் பன்னிரண்டு பெயர்களையும் அமைத்துப் பதிகங்கள் பாடினார் என்று பெரிய புராணம் காட்டும். எடுத்துக்காட்டாக அவற்றுள் ஒரு பதிகத்தின் முதற்பாடலைக் காண்போம்:
" பிரமனூர்(1) வேணுபுரம்(2)புகலி(3)வெங்குரு(4)ப் பெருநீர்த் தோணி
புர(5) மன்னு பூந்தராய் (6) பொன்னஞ் சிரபுரம் (7) புறவம்(8) சண்பை(9)
அரன் மன்னு தண் காழி(10) கொச்சைவயம் (11) உள்ளிட்டங் காதியாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமல(12) நாம் பரவுமூரே"
இப்பாடலில் பன்னிரண்டு பெயர்களும் வருவது போலவே அப்பதிகத்தின் பிற பாடல்களிலும் அப்பெயர்கள் சக்கரம் போன்று சுழன்று வருவது சிந்தையை மகிழ்விப்பதாம். இவை யாவும் காரணப் பெயர்களே.
இதே போன்று ஊர்களைக் கொண்டே அமைக்கப்பெற்றுள்ள முழுப் பதிகங்களைத் தேவார மூவரும் அருளிச் செய்துள்ளனர்.
தலப்பெயர்களை நாவால் உரைப்போர்க்குக் கிட்டும் பலன்களை நாவுக்கரசர் அருளியவாறு காண்போம்:
" ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து
அமர் உலகம் ஆளலாமே "
" வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில்
வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே."
நம் இல்லங்களிலும் ஊர்ப்பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுகிறோம். சிதம்பரம் , அண்ணாமலை, பழநி, செந்தில் திருப்பதி ஆகியவை சில எடுத்துக்காட்டுக்கள்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது தாய் வழிப் பாட்டியார் சொல்லித் தந்ததை நினைவு கூறுகிறேன். இரவு படுக்கப்போகும் முன்பு சில நாமாக்களைச் சொல்லவேண்டும் என்பதே அது.
அதாவது," சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்" என்பது.
அதனை ஒரு உபதேசமாகக் கருதி இன்றளவும் சொல்லி வருகிறேன்.
இவ்வாறு தலங்களின் பெயர்களைச் சொல்வதில் இன்னும் சில தலங்களையும் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களாவது உறங்கச் செல்லும் முன்பு தியானிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாயிற்று. அந்த எண்ணத்தின் விளைவே பின் வரும் சேர்க்கை. இருமொழிப் பயிற்சி இல்லாதவனின் அறியாமையைப் பொறுத்து பிழை இருப்பின் திருத்தி அருளுமாறு பெரியோர்களை வேண்டுகிறேன்
ஜோதிர்மய ஸ்தோத்ரம்
சிவபாதசேகரன்
" சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்"
கும்பேசம் தாருகேசம் வீதி விடங்கம் ஜோதிர்மயம்
விச்வேசம் ராமேசம் அமரேசம் ஜோதிர்மயம்
ஹாலாஸ்யம் கச்சபேசம் பைரவேசம் ஜோதிர்மயம்
கடம்பவனேசம் கபாலிம் பஞ்சநதம் ஜோதிர்மயம்
மல்லிகார்ஜுனம் மதங்கேசம் மாத்ருபூதம் ஜோதிர்மயம்
நாகேசம் நடனபுரீசம் முக்தீசம் ஜோதிர்மயம்
பல்லவனீசம் பார்வதீசம் பக்ஷிதீர்த்தம் ஜோதிர்மயம்
ஜடாயுபுரீசம் ஜம்புகேசம் ஜகதீசம் ஜோதிர்மயம்
ஸ்வயம்புநாதம் ஸ்வயம்ப்ரகாசம் சுந்தரேசம் ஜோதிர்மயம்
வதான்யேசம் வைத்யநாதம் வடாரண்யம் ஜோதிர்மயம்
ஒருமுறை காஞ்சிப் பெரியவர்களிடம் துவாதச லிங்க க்ஷேத்ரங்களை மட்டுமே ஜோதிர்லிங்கம் என்கிறோமே என்று கேட்டதற்கு , " எல்லா லிங்க மூர்த்திகளுமே ஜோதிர்லிங்கங்களாகக் கருதப் பட வேண்டியவைகளே . ஏனென்றால் பிரம விஷ்ணுக்களிடையே அக்னி வடிவில் தோன்றி லிங்கோத்பவம் ஆனதால் அம்மூர்த்தம் ஜோதிர் லிங்கமாக எல்லா ஸ்தலங்களிலும் மூலஸ்தானமாக விளங்குகிறது என்று விளக்கம் தந்தார்கள்.
மிக நன்று. மேலும் விரிவுபடுத்தி பத்திரிகைகளில் பிரசுரித்தால் பலர் நன்மை அடைவர். சிறந்த முயற்சி
ReplyDeleteகுருபாதம் நள்ளாற என நம் வினை நாசமே
ReplyDeleteஜோதிர் மயம் பாடல்கள் வரிகள் மிகவும் நன்று....
ReplyDelete