Tuesday, September 20, 2011

"நாம் வணங்கும் கடவுள்"

குபேரன் , சிவபெருமானின் நண்பன் என்று புராணங்கள் மூலமாக அறிகிறோம். குபேரனின் செல்வக் குவியல்களை சங்கநிதி , பதும நிதி என்று பெயரிட்டு அழைப்பார்கள். சில சிவாலயங்களில் பூத கணத் தோற்றத்துடன் இவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அணைக்குடி சிவாலயத்தின் நுழைவு வாயிலின் இரு புறமும் இவை காணப்படுகின்றன. சிவ பூஜையும் சிவாலய தரிசனமும் தொடர்ந்து செய்பவர்களுக்கு சிவனருளால் இவை கிடைக்கும் என்பதை இவை காட்டுகின்றன போலும் . "எத்திசைக் கனகமும் ,பைம்பொன் மாளிகையும் " கிடைக்கும் என்றுதானே திருமுறைகளும் சொல்கின்றன. "அளித்துப் பெரும் செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" என்று அப்பர் சுவாமிகளும் பாடியிருக்கிறார்.


இங்கே ஒரு கேள்வி எழுகிறது. தெய்வ பக்தி இல்லாதவர்களிடத்தும் செல்வம் புரள்கிறதே எனக் கேட்கலாம். முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இப்பிறவியில் தெய்வ பக்தி இல்லாதவர்களாக இருக்கக் கூடும். அவர்களும் அவர்களது செல்வமும் மங்கக்கூடியவை. சிவனடியார்களாக இல்லாத அவர்கள் ஒருக்கால் தம்மிடம் இருக்கும் சங்கநிதியையும் பதும நிதியையும், தந்து, இவ்வுலகையும் வான் உலகத்தையும் ஆள்வதற்காகத் தந்தாலும் நான் அப்படிபட்டவரையும் அந்த நிதியையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டேன் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.


"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியோடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில்..."


இதில் மாதேவர் என்பது, மகாதேவனாகிய பரமேச்வரனைக் குறிக்கும். மாதேவர்க்கே என்று படித்தால் மகாதேவனுக்கு மட்டுமே மீளா அடிமை ஆவதை இந்த ஏகாரம் காட்டுவதாகக் கொள்ளலாம். மாதேவர்க்கு ஏகாந்தர் ஆகில் என்றும் சிலர் பிரித்துப் பொருள் கொள்வார்கள்.


அடுத்து வருவதுதான் ஒப்புயர்வற்ற கருத்து. ஒரு புலையன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வடமொழியில் இவனை சண்டாளன் என்பார்கள். பசுவை உரித்துத் தின்னும் தொழிலை மேற்கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டான். அவன் தனது அங்கம் எல்லாம் குறுகி ஒழுகக்கூடிய தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும் கங்காதரனாகிய சிவபெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர் பெருமான்.


"அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே."


என்பது இந்த அற்புதமான தேவாரப் பாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் பாகு பாடு இல்லாமல் சிவனடியார் என்ற ஒன்றையே மனதில் கொண்டு அவருக்கு அடிமையாவதே தூய்மையான அன்பு என்று ஸ்வாமிகள் இதன் மூலம் நமக்கு உபதேசிக்கிறார்.


"ஒருவன் சண்டாளனாக இருந்தாலும் "சிவ" என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பானேயானால் அவனோடு பேசு. அவனோடு வசி. அவனோடு சாப்பிடு." என்கிறது முண்டகோபனிஷத். அப்பரின் இத்திருத்தாண்டகமும் இதனை ஒட்டியே அமைந்திருக்கிறது. அடியார்க்கு அடியவன் ஆவதைக் காட்டும் இதுபோன்ற பாடலைத் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண்பது அரியதாகும்.


பின் குறிப்பு: முதல் பாராவில் கருவூர் தேவர், கங்கைகொண்ட சோழபுரத்துப்

பெருமான் மீது பாடிய திருவிசைப்பாவில் இருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ள பகுதி, "எண்டிசைக் கனகம் , பற்பதக்குவையும் பைம்பொன் மாளிகையும்" என்று இருக்க வேண்டும். சுட்டிக் காட்டிய சென்னை அன்பர் திரு மணி அவர்களுக்கு நன்றி.

கடைசி பாராவில் , தருமபுரம் ஆதீன வெளியீடான (1963 ) திருநாவுக்கரசர் தேவாரம் (ஆறாம் திருமுறை,குறிப்புரையுடன்) என்ற நூலில் பக்கம் 708 ல் முண்டக உபநிஷத்தில் வருவதாகக் கூறப்படும் மேற்கோள் , அந்த உபநிஷத்தில் காணப்படவில்லை. ஒருக்கால், வேறு நூலில் காணப்படலாம். இதனைச் சுட்டிக் காட்டிய பெங்களூர் அன்பர் ஸ்ரீ கணேஷ் அவர்களுக்கு நன்றி.

Thursday, July 28, 2011

கங்கையும் நங்கையும்

கங்காதேவியானவள் கடுமையான வேகத்துடன் உலகை அழிப்பதுபோல் பாய்ந்து வந்தபோது, புவனாதிபதியான சிவபெருமான் , அவளது சீற்றத்தைத் தடுத்துத் தனது திருச்சடையில் ஏற்றதால் கங்காதரன் எனப்பட்டார். கங்கை வந்த வேகம் என்ன! அவளை அநாயாசமாகத் தடுத்த லாவகம் தான் என்னே! திருஞான சம்பந்தர் சொல்வதைக் கேளுங்கள்.


" கடுத்து வரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர்"
என்கிறார். அதாவது, கங்கையைத் தடுத்தபோது அவரது சடைமுடி ஒன்று கூட அசையவில்லையாம்.


கங்கையைச் சிரத்தில் ஏற்றத்தைக் கண்டு உமாதேவி, சுவாமியிடம் ஊடல்
கொண்டாளாம். அவளது கோபத்தைத் தீர்க்கவேண்டி, சடையில் இருப்பது கங்கை நதி என்றும், உலகைப் பேரழிவிலிருந்து காப்பதற்கே தாம் அவ்வாறு அதனை ஏற்றதாகவும் சொல்லி அவளை சமாதானம் செய்ய முயல்கிறார் பரமன்.


அப்பர் பெருமானோ இன்னும் ஒரு படி மேலே சென்று, இக்காட்சியினை
விவரிக்கிறார். சுவாமியின் விளக்கத்தால் அம்பிகை சமாதானம் அடைந்தவளாகக் காணப்படவில்லை. இவர்தான் ஆடல்,பாடல் எல்லாவற்றிலும் வல்லவர் ஆயிற்றே. கான ந்ருத்த சங்கரர் என்று ஒரு பெயரும் உண்டு அல்லவா? கானத்தால் உமையை சமாதானப் படுத்த முயலுகிறார். அதுவும் சாம கானம பாடி அவளது ஊடலைத் தீர்க்க விழைகிறார். உடனே அந்த கானத்திற்கேற்ப ஆடவும் செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான வருணனை, அப்பர்பெருமானின் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகத்தில் ஒரு பாடல் மூலம் நமது சிந்தையை மகிழ்விக்கிறது. இதோ அப்பாடல்:


சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்கவேண்டிப்
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே.


இந்த ஆதி தம்பதிகளின் ஊடல் காட்சி, பல சோழர்கால ஆலயங்களில் கருவறைச் சுவற்றில் சிற்ப வடிவில் காணப் படுகிறது. இதனை, கங்கா விசர்ஜன மூர்த்தி எனப் பெயரிட்டு அழைப்பர். பேரளத்திற்கு அருகில் உள்ள திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயத்தில் அற்புத வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் வடிவழகையே மேற்கண்ட படத்தில்(நன்றி: தினமலர்) காண்கிறீர்கள். பெருமான், கோபம கொண்ட அம்பிகையின்
முகவாயைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்ப முயல்கிறார். இச்சிற்பத்தை ஒருபுறம நின்று பார்த்தால், அம்பிகையின் முகத்தில் ஊடலால் வந்த கோபமும், மறுபுறம்நின்று பார்த்தால், ஊடல் தீர்ந்தவளாகவும் காணப்படுகிறாள். இத்தெய்வீகக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.நேரில் சென்று தரிசித்துக் கண் பெற்ற பயனைப் பெற வேண்டும்.

Thursday, February 10, 2011

"பசுங்கிளி சொல் துதிக்க"

மாசி மகம் என்றவுடன் கும்பகோணம் நினைவுக்கு வரும்.இதோடு புராணத் தொடர்புடைய தலங்களாகக் குடவாயில் (குடவாசல்), பாணபுரீச்வரர் கோயில் (கும்பகோணம்), அபிமுகேச்வரர் ஆலயம்,அம்ருத கலசனாதர் கோயில் (சாக்கோட்டை) ஆகியவற்றைக் குறிப்பிடுவார்கள். இவற்றில் குடந்தையிலிருந்து மன்னார்குடி செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது சாக்கோட்டை என்ற ஊர். இது தேவார காலத்தில் கலயநல்லூர் எனப் பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள அமிர்தகலச நாத ஸ்வாமியின்மீதுசுந்தரர் ஒரு அற்புதமான பதிகம் பாடியிருக்கிறார். அதில் ஒவ்வொரு பாடலிலும் சிவ பராக்ரமமும்லீலைகளும் கூறப்பட்டுள்ளது. பக்திமணமும்,தமிழ் மணமும் சேர்ந்து நம்மைப் பரவசப்படுத்துவது இப்பதிகம்.

பிரம்ம-விஷ்ணுக்களால் காணமுடியாத அக்னிமலையாகவிளங்கியவன் சிவ பெருமான் என்பதால் ,

"மாலயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் "

என்று பாடினார். அடுத்ததாக, இறைவனின் முடிமீது இருக்கும் வன்னி, சந்திரன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

"வன்னி மதி சென்னிமிசை வைத்தவன்" என்றதால், பெருமானது கருணை விளக்கப்படுகிறது. இனி, பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியபோது, எல்லா உலகங்களும், தேவர்களும் பிற உயிர்களும் அதனால் அழிய நேரிட்டபோது, அனைவருக்கும் அடைக்கலம் தந்து அதனை உண்டு தனது கண்டத்தில் வைத்த பரம கருணையை,

" மொய்த்து எழுந்த வேலை விடம் உண்ட மணிகண்டன்" என்றார். வேலை என்பது கடல் என்று பொருள் தரும்.

மலவாதனைகளுக்கு அப்பாற்பட்ட விமலனாகவும் விருஷபா ரூடனாகவும் திகழ்வதை, " மெய்யா , விமலா, விடைப் பாகா" என்றார் மாணிக்கவாசகர். சுந்தரரும் இதனை,

"விடை ஊரும் விமலன்" என்று சிறப்பித்தார்.

இந்த ஸ்தலத்தில் அமிர்தவல்லி என்ற பெயர் கொண்டு அம்பிகை விளங்குகிறாள். இவ்வாறு அம்பிகையோடு காட்சி தருவதை,

"உமையவளோடு மேவிய ஊர்வினவில்" என்று சொல்லிவிட்டு அந்த ஊரின் சிறப்புக்களை அழகாக வர்ணிப்பார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

இங்கு உள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் தாம் கேட்ட துதிகளைத் திரும்பச் சொல்வதால், தாமும் துதிக்கின்றன.

"சோலை மலி குயில் கூவக் கோல மயிலாலச்

சுரும்பொடு வண்டு இசைமுரல பசுங்கிளி சொல் துதிக்க"

என்பது அந்த வருணனை.

இனி வருவது பாடலின் மகுடம் போன்ற ஒப்பற்ற கருத்து. அந்த ஊரில் வசிக்கும் அடியார்கள், காலையிலும், மாலைக் காலத்திலும் மனம் கசிந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பதைச் சொல்வதால் நாமும் அவ்வாறு இரு வேளையிலும் இறைவனை மறவாது, நெக்குருகிக் கசிந்து வழிபட வேண்டும் என்றும் உணர்த்தப்படுகிறது.

"காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து

கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் கானே"

அண்மையில் இந்தப் பாடலைக் கலயநல்லூர் அமிர்தகலசநாத சுவாமியைத் தரிசித்துவிட்டுப் பாடிய பின்னர், அம்பாள் சன்னதிக்குச் செல்லும்போது, பிராகார மதிலை ஒட்டிய மரங்களில் இருந்து சுமார் ஐந்து கிளிகள் சப்தமிட்டன. உடனே, சுந்தரர் அருளிய இப்பாடலில் வரும் "பசுங்கிளி சொல் துதிக்க" என்ற வரிகள் நினைவுக்கு வரக் , கண்கள் பனித்தன.

Tuesday, December 28, 2010

துன்பம் தீர வழி

உலகத்தில் பிறந்துவிட்டால் துன்பங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடுநடுவில் வரும் இன்பங்கள் அவற்றைத் தற்காலிகமாக மறக்கச் செய்கின்றன. "இன்பமுண்டேல்துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை" என்று சுந்தரர் தேவாரத்தில் வரும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழியை மகான்கள் மட்டுமே காட்ட முடியும். ஏனென்றால் , அவர்கள் உலகம் உய்வதற்காகவே அவதரித்தவர்கள். "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" எனக் கூறி அபயம் அளித்தவர்கள். எளிய வழியைக் கூறி அடைக்கலம் காட்டியவர்கள். கடுமையான தவ வாழ்க்கையை எல்லோரும் பின்பற்றி இறைவனை அடைவது கடினம் ஆதலால் இறைவனது நாமங்களைச் சொல்வதாலும் அவன் உறையும்தலங்களின்பெயர்களைக் கூறி சிந்திப்பதாலும் துன்பங்கள் நீங்கப் பெறலாம் என்று உபதேசித்தவர்கள்.

திருவெண்காடு என்ற சிவ ஸ்தலம் , முக்தி அளிக்க வல்ல தலங்களுள் ஒன்று. இதன் பெயரைக் கூறிய மாத்திரத்தில் தீராத வினைகள் எல்லாம் தீரும் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள். வினைகளால் ஏற்படுவது துன்பமும் நோயும். அவை நீங்க வேண்டுமானால் , " சந்திரசேகரா,கங்காதரா" என்று சிவ நாமாக்களைச் சொல்ல வேண்டும் என்று உபதேசிக்கிறார் ஞான சம்பந்தப் பெருமான். ஆனால் இவற்றை உள்ளம் உள்கி நெகிழ்ந்து ,கண்ணீர் மல்க சொல்வோமானால் சிவனருள் பெறலாம் என்பதை,
" பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளும் தலைவன்..."
என்கிறார். அப்படிப்பட்ட அன்பர்களுக்கு இறைவன் எளியவனாகி அருள் வழங்குகிறான். உலகம் உய்ய நஞ்சை உண்டவனே என்றும் உமைபங்கா என்றும் கண் முத்து அரும்பக் கழல் அடிகளைத் தொழு அடியார்கள் , துன்பங்களாலும் கவலைகளாலும் கரைந்து உழலும்போது, அஞ்சேல் என்று அருள் செய்வான். இவ்வாறு , ஒரு நாள் இரண்டு நாள் அல்ல; பல நாட்கள் சிவ நாமாக்களைச் சொல்லி வரவேண்டும். கிளிகள் சொன்னதையே திருப்பிச் சொல்வதுபோல சிவ நாமங்களைத் திருப்பித்திருப்பி ஆயுட்காலம் முழுவதும் சொல்ல வேண்டும். திருவெண்காட்டில் வேத பாட சாலைகளில் இருந்த கிளிகள் , தாங்கள் தினமும் கேட்கும் வேதங்களையே திருப்பிச் சொல்கின்றன என்பார் சம்பந்தர்.
அரன்நாமம் கேளாய் என்று உபதேசித்த ஆசார்யமூர்த்திகள், அதைச் சொல்வதன் மூலம் துன்பம் நீங்கிப் பெருவாழ்வு பெறலாம் என்று இந்த ஊர்ப் பதிகத்தில் அருளி இருப்பதைக் காட்டும் பாடல் வருமாறு:

நாதன் நமை ஆள்வான் என்று நவின்றேத்தி
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்
வேதத்துஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

என்பது அந்த அற்புதமான பாடல் வரிகள். இங்கு ஏதம் என்பது துன்பம் என்று பொருள் படும். இறைவனது நாமங்களைச் சொல்பவர்க்கு ஏதம் ஏதும் இல்லை என்பது இதனால் அறியப்படுகிறது. "உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே" என்று சுந்தரர் அருளியதுபோல், நாக்கு தழும்பு ஏறும்படி நாதன் நாமத்தைச் சொல்லிவருவோமாக.

Sunday, October 24, 2010

பூந்துருத்திப் புண்ணியன்

ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் ஒரு சமயம் தருமபுர ஆதீனத்திற்குச் சென்றிருந்தபோது , அங்கிருந்த வேத பாடசாலை மற்றும் ஆகம பாடசாலைகளைப் பார்த்துவிட்டு , தேவார பாடசாலைக்கு விஜயம் செய்த போது, பாடசாலை ஆசிரியராக இருந்த ஸ்ரீ வேலாயுத ஓதுவாமூர்த்திகள் ஏதோ காரியமாக மடத்தின் வேறு பகுதிக்குச் சென்றிருந்தார்கள். பாடசாலை குழந்தைகளிடம் மிக்க மகிழ்ச்சியுடன் உரையாடிய ஸ்ரீ பெரியவர்கள், ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் தேவாரத்தில் இருந்து ஒரு திருத்தாண்டகம் பாடிக்காட்டுமாறு ஒரு மாணவனிடம் கேட்டார்கள். உடனே அவன், திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி மீது அப்பர் பெருமான் பாடிய திருத் தாண்டகப் பதிகத்திலிருந்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். அவன் பாடிய அப் பாடலின் முதல் இரு வரிகள் பின்வருமாறு:
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை
கடுநரகம் சாராமே காப்பான் தன்னை

யாரிடமும் கற்காமலேயே எல்லாக் கலைகளையும் மெய் ஞானத்தையும் உபதேசித்தவன். தனது அடியார்களை நரகம் புகாமல் காப்பவன் என்பதே அந்த வரிகளின் பொருள். அம்மாணவனுக்கு பயம் காரணமாக மேற்கொண்டு ஞாபகம் வரவில்லை. ஆனால் பெரியவர்களோ, அந்த இரண்டு வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடுமாறு கேட்டுக் கொண்டதால், அச்சிறுவனும் அதையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்தான். மெய்மறந்து பெரியவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்ததை அங்கு வந்து சேர்ந்த பாடசாலை ஆசிரியர் பார்த்துப் பரவசப்பட்டவராக, மீதி வரிகளையும் பாடிக்காட்டினார். இந்நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ தருமபுரம் சுவாமிநாத ஓதுவாமூர்த்திகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அத்தகைய தாண்டகப் பாடல்களில் இருந்து ஒன்றை இங்கு சிந்திப்போமாக:

இப்பாடல் திருவையாற்றிற்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தி ஸ்ரீ புஷ்பவநேச்வர சுவாமி மீது பாடப்பெற்றது. சத்திய ச்வரூபனான மூர்த்தியை பொய்யிலி என்று அழைக்கிறது இப்பதிகம். புண்ணிய மூர்த்தியாகவும் வர்ணிக்கிறது .


கடுமையான வேகத்துடன் வந்த கங்கையைத் தனது ஜடையில் தாங்கி கங்காதரன் ஆனவன் என்பதை,

"நில்லாத நீர் சடைமேல் நிர்ப்பித்தானை"
என்றார்.

அவன் அருளாலே மட்டும் அவன் நினைவு நமக்கு வரும். இதனை,
" நினையா என் நெஞ்சை நினைவித்தானை "
என்றார்.

கற்க முடியாதன எல்லாவற்றையும் கற்பிப்பவன் அக்கடவுள் என்பதை,
" கல்லாதான எல்லாம் கற்பித்தானை "
என்றார்.

கண்டு அறியாதன எல்லாவற்றையும் அப்பெருமானே காட்டுபவன் என்பதை,
" காணாதன எல்லாம் காட்டினானை"
என்றார்.

பரம கருணையினால் என்னைத் தொடர்ந்து வந்து, அடியவனாகக் கொண்டு , சொல்லாத பொருள்கள் எல்லாவற்றையும் சொன்னான் என்பதை,
" சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத் தொடர்ந்து
இங்கு அடியேனை ஆளாக்கொண்டு "
என்றார்.

அப்புநிதனே, எனது பொல்லாத சூலைநோயையும், பிறவி நோயையும் தீர்த்தவன் என்பதை,
" பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்தி கண்டேன் நானே"
என்றார்.

முழுப் பாடலையும் இப்பொழுது காண்போமாக:

" நில்லாத நீர் சடைமேல் நிர்பித்தானை
நினையா என் நெஞ்சை நினைவித்தானை
கல்லாதான எல்லாம் கற்பித்தானை
காணாதன எல்லாம் காட்டினானை
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத்
தொடர்ந்திங்கு அடியேனை ஆளாக்கொண்டு
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே."

என்பது பதிகத்தின் முதல் பாடல்.
இதுபோன்ற பக்திச் சுவை மிக்க பாடல்களை ஏராளமாக நமக்கு அருளியுள்ளார்கள் அருளாளர்கள். அவற்றை பாராயணம் செய்யும் பாக்கியத்தை எல்லோருக்கும் சிவனருள் கூட்டுவிக்க வேண்டும்.

Monday, August 16, 2010

சிவலோகம் ஆளலாம்


நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் அடிக்கடி வரும். சொர்க்கம் , நரகம் என்பதெல்லாம் உண்மையிலேயே உண்டா அல்லது வெறும் கற்பனையா ; யார் பார்த்துவிட்டு வந்து சொன்னார், என்பதே அது.ஒருவருக்கு நடந்ததை அவரே சொல்லிவிட்டுப் போயிருந்தால் அதை அகச்சான்று என்றும் , பிற்காலத்தில் வந்தவர் அதைப் பற்றி சொல்லியிருந்தால் புறச்சான்று என்றும் சொல்வார்கள். மூவர் தேவாரத்தில் அகச்சான்றுகளாகத்தெரியவரும் செய்திகள் ஏராளம்.

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது பதினெட்டாவது வயதில் ஆப்த சிநேகிதரான சேரமான் பெருமாள் நாயனாருடன் திருவஞ்சைக்களத்தில் தங்கியிருந்தார். அங்கு கோயில் கொண்டுள்ள அஞ்சைக்களத்து அப்பரிடம் பதிகம் மூலம் உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துத் தனக்குச் சிவலோகம் தந்தருளுமாறு வேண்டவே, சுவாமியும் தேவலோகத்திலிருந்து வெள்ளை யானையை அனுப்பி அதில் சுந்தரரை ஏறி வரும்படி அருளினார். இறைவனது அருளை வணங்கியவாறு சுந்தரர் அதில் அமர்ந்தவுடன் அந்த யானை ஆகாய வீதியில் கிளம்பியது. அந்த நிலையிலும் உலகத்தவர்களுக்கு உபதேசம் செய்கிறார் குருநாதர். தனக்குக் கிடைத்த பேரருள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பெரும் கருணை, தேவாரப் பதிகமாக வெளிப்படுகிறது. "தான் எனை முன் படைத்தான்" என்ற அப்பதிகத்தில் தனக்கு வெள்ளையானை தந்தருளிய கருணையைப் போற்றுவதோடு தன்னை இந்திரன்,திருமால்,பிரமன் முதலியோரும் எதிர்கொண்டு அழைப்பதைக் குறிப்பிடுகிறார். வேத மந்திரங்களும் ஆகமங்களும் அடியார்களும் முழங்கும் ஓசை எங்கும் கேட்கிறது. இவ்வாறு யானை ஏறி வரும் மகான் யார் என்று இறைவனை முனிவர்கள் கேட்க அதற்கு, எனது பரம பக்தன் நம்பியாரூரன்" என்று ஸ்ரீ பரமேச்வரன் பதில் சொன்னதாகப் பதிகத்தில் வருகிறது.

பூலோகத்தில் பிறந்து சிவபக்தி செய்யும் அனைவருக்கும் சிவலோகம் கிடைக்கும் என்று சுந்தரரின் இந்தப் பதிகம் உறுதியாகக் கூறுகிறது. இதற்கு அவர் சொல்லும் பிரமாணம் என்ன தெரியுமா? தானே இது சத்தியம் என்பதைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறார். இதோ அவ்வினிய வரிகள்:

மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணு லகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே.

நொடித்தான் மலை என்பது கயிலாய மலையைக் குறிக்கும். சிவ பெருமானுக்கு வாழையடி வாழையாக மீளா அடிமைசெய்யும் வம்சத்தில் பிறந்த அடியார்கள் சிவலோகம் பெறுதல் உண்மை என்பதை சுந்தரரின் இந்த அகச்சான்று உறுதி செய்கிறது. இதில் சந்தேகம் வேண்டாம். "சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே" என்ற அவரது தேவார அடிகள் இக்கருத்துக்கு உறுதுணை ஆவதை மனத்தில் கொண்டு ஆடி சுவாதி நன்னாளில் குருநாதரின் பாத கமலங்களை வணங்கிச் சிவத்தொண்டு ஆற்றுவோமாக.

Tuesday, May 18, 2010

சபாநாதனிடம் ஒரு கேள்வி


காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சந்தேகம். பகவானின் உருவம் செக்கச்செவேல் என்று இருப்பதாக வேதமும் புராணங்களும் சொல்கின்றன அல்லவா? ஸ்வர்ண மயமானவன் என்று ஸ்ரீ ருத்ரமும் செம்மேனி எம்மான் என்று தேவாரமும் ,தாமரைக்காடு போன்ற மேனியன் என்று திருவாசகமும் சொல்வதை சில உதாரணங்களாகக் காட்டலாம். இப்படி இருக்கும்போது, காரைக்கால் அம்மையார் பகவானிடமே தனது சந்தேகத்தை கேட்கிறார்.


"சித் சபையில் அனவரதமும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டு இருப்பவனே, உனது இடது கையில் அக்கினியை ஏந்திக்கொண்டு பேய்கள் ஆடும் காட்டில் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறாய். அந்த அக்னிக்கு உன் சிவந்த கை பட்டதனால் சிவந்த நிறம் வந்ததா; அல்லது அக்னியை ஏந்தியதால் உன் கை சிவந்ததா? எனக்கு இதனைச் சொல்லவேண்டும்" என்கிறார்.


ஈச்வரனிடம் அபாரப் பிரேமை உடையவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றும்.சுவாமி எதுவும் சாப்பிடாமல் காட்டு விலங்குகளுக்கு நடுவில் இருக்கிறாரே என்று நினைத்தாராம் கண்ணப்ப நாயனார். தான் கொண்டு வந்த நைவேதியத்தை பிள்ளையார் சாப்பிடவில்லையே என்று தன தலையை மோதிக்கொண்டாராம் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி. ஒரு சமயம் தஞ்சாவூருக்குச் சென்றிருந்த காஞ்சி பெரியவர்கள், பங்காரு காமாட்சிக்கு நிறைய நகைகள் சார்த்தப்பட்டு இருந்ததைப் பார்த்து, "அம்பாளுக்குக் கழுத்து வலிக்காதா " என்று கவலைப்பட்டாராம். நடராஜ மூர்த்திக்கு அலங்காரம் செய்யும்போது அக்னி ஏந்திய கரத்தில் புஷ்பத்தைச் சார்த்தும்போது, அந்த புஷ்பம் அக்னி ஜ்வாலையில் கருகி விடுமே என்றுகூட நினைக்கத்தோன்றும். இதெல்லாம் பகவானைக் கல்லாகவோ,பஞ்சலோக விக்கிரகமாகவோ பார்க்காதவர்களுக்கு ஏற்படும் நிலை. அதேபோல அவனது ஒவ்வொரு செயலும் மகான்களது பார்வையின் மூலம் நமக்கு மேலும் விளக்கத்தைக் கொடுக்கும்.


இனி, அம்மையார் அருளிய அற்புதத் திரு அந்தாதி என்ற நூலில் வரும் இந்தப் பாடலைக் காண்போம்:

அழல் ஆட அங்கை சிவந்ததோ

(அழல் = நெருப்பு; அங்கை= உள்ளங்கை)

அங்கை அழகால் அழல் சிவந்தவாரோ - கழல் ஆடப்

பேயாடு கானில் பிறங்க அனல் ஏந்தித்

(பேயாடு கானில்- பேய்கள் ஆடும் காட்டில்;பிறங்க-விளங்கும்படி)

தீ ஆடுவாய் இதனைச் செப்பு.

(செப்பு= சொல்வாயாக.)

என்பது இந்த அழகிய வெண்பா.

பகவானது ஸ்வரூபத்தில் லயிக்கும் இப்படிப்பட்ட பக்தி நமக்கும் ஏற்படவேண்டும் என்று அவனைப் பிரார்த்திப்போமாக.