Thursday, May 8, 2014

சிந்தையும் சிவமும்

காலை வேளைகளில் பலர் அருகிலுள்ள பூங்காக்களிலும், சாலைகளிலும் நடைப் பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்கிறோம். டாக்டர் சொல்லியிருப்பார்- "  Conscious walk" முக்கியம் என்று. அப்படியானால் , நடப்பதை மட்டுமே அல்லவா கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்? ஆனால் பலர்  நண்பர்களோடு அளவளாவிக்கொண்டும், பாட்டுக் கேட்டுக் கொண்டும், அக்கம்பக்கத்தில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டிருப்பர். சுருக்கமாகச் சொன்னால் , கண்கள் நடைபாதையை அடையாளம் காட்டியதைக் கொண்டு,கால்கள் அவ்வழியில் செல்கின்றன. வாயோ வம்பளந்து கொண்டிக்கிறது. காதோ பாட்டுக் கேட்பதில் லயித்திருக்கிறது. ஆகவே, மனம்,மெய்(உடல்),வாக்கு என்ற மூன்றும் வெவ்வேறு காரியங்களை அப்போது செய்து கொண்டிருக்கின்றன.
மனம் என்பதை இங்கு சிந்தனை என்று எடுத்துக்கொள்ளலாம். மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றையும் பரமேச்வரனிடத்தில் அர்ப்பணித்து விடுவார்கள் மகான்கள். " ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" என்று சிதம்பரத்தில் நடராஜப் பெருமானைத் தரிசித்த சுந்தர மூர்த்தி சுவாமிகளின் நிலையைக் காட்டுகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான். கண்டவுடன் சிந்தையில் அது ஒன்றே மேலோங்கியிருக்கிறது.  கண்களில் ஆனந்த நீர் அருவியாகப் பொழிகிறது. மாறிலாத மகிழ்ச்சி மலர்கிறது. நிறைவாக, வாய் அப்பெருமானைத் துதிக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் பார்க்காத,,கேட்காத,பேசாத  பேரின்ப நிலை!

சிந்தையில் சிவத்தைத் தவிரப்  பிறிதொன்றை நினையாத மாணிக்கவாசகரது அனுபவத்தை அவரது திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது. அவரது சிந்தனை சிவபெருமானிடம் லயப்படுகிறது. கண்களால் அக்கண் பெற்ற பயனாகப் பெருமானது பாத மலர்களையே காண்கிறார். வாயால் வந்திப்பதும் அம்மலர்ப்பாதங்களைத்தான். இவ்வாறு ஐம்புலன்களை  அவனுக்கே அர்ப்பணம் செய்வது என்பது எளிதான காரியமா? அந்தப் பக்குவமும் இறைவன் தந்தால்  அல்லவா சாத்தியம் ஆகமுடியும்!  அதை எவ்வாறு அருளுகிறான் என்று பார்ப்போமா?  இந்த ஊன் உடம்பின் உள் புகுந்து எலும்பெல்லாம் உருக்கி.எலும்புத் துவாரங்கள் தோறும் உலப்பிலாத ஆனந்தத் தேனைச் சொரிந்து கருணையினால் ஆட்கொள்கிறான்.

மாறிலாத மாப்பெருங் கருணையாளனாகிய இறைவனோ மலை போன்றவன். கடல் போன்றவன். சிவந்த மேனியன். அந்த செம்மை நிறத்தை எவ்வாறு வருணிப்பது?  செந்தாமரை மலருக்கு ஒப்பிட்டால் அதுவும் மிகக் குறைவாகத் தோன்றுகிறது. செந்தாமரை மலர்கள் மலர்ந்த காடு போன்றது அம்மலர்த் திருமேனி என்று சொன்னால் ஓரளவு ஆறுதல் தருகிறது. இப்படிப்பட்ட ஒப்பற்றவன் ஒன்றும் பற்றாத அடியேனை ஒரு பொருட்டாக ஆட்கொண்டு தன்னையே தந்ததை  எவ்வாறு புகழ்வேன் என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
  கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி      
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர                
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மாலமுதப்பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டும் இலித் தனியனேற்கே..

என்பது அம்மணிவாசகம்.
    

Thursday, April 17, 2014

பித்தன் என்றே பாடுவாய்

பித்தன் என்ற வார்த்தைக்குப் பேரருளாளன் என்று பொருள் கூறுவார்கள் . உலகில் நாம் காணும் பித்தர்களைப் போல் அல்லாமல் அருள் காரணமாகவே பித்துப் பிடித்ததுபோல் அடியார்களிடம் தோன்றி இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவனாக, தோன்றாத் துணையாக, சொன்னவாறு அறிபவனாக , அருள் சுரக்கும் துறையாக, கேளாமலே அருள் வழங்கும் தன்னிகரற்ற வள்ளலாக , வெளித் தோற்றத்தில், உலகத்தவர் பேணாத பொருள்களைப் பேணுபவனாகத்  தியாகராஜனாக  விளங்குவதால் "பித்தன்" என்ற பெயர் பரமேச்வரன் ஒருவனுக்கே உரியதும், பெருமை தருவதும், ஆகிய சொல் ஆகும். இப்பெயரைக் கொண்டுதான் சுந்தரர் முதலில் பாடத் தொடங்கினார். அதுவும் பெருமானே, அவ்வாறு பாடுமாறு அடியெடுத்துக் கொடுத்தான். சம்பந்தரும் எருக்கத்தம்புலியூர் பதிகத்தில், " பித்தா பிறைசூடி" என்று பாடியிருக்கிறார். ஆனால் பித்தன் என்ற சொல் முதலாவதாக வைக்கப்பெற்று சுந்தரர் வாயிலாக ஒரு திருமுறையே உதயமாயிற்று.

முன்பு நம்மைப் பித்தன் என்று பேசினாய் இப்போது அதையே துவக்கமாகக்கொண்டு பாடுக என்று அருட்கட்டளை இட்டான் பரமன். பேசுதலைக் காட்டிலும் பாடுதல் சிறப்பு வாய்ந்தது. கீதம் வந்த வாய்மையால் மிகப்பாடும் அடியார்கள் பெறும் பேற்றை அளவிட முடியாது.

பிறை சூடிய கருணை அடுத்ததாக எடுத்து உரைக்கப்படுகிறது. எவரும் அடைக்கலம் தராத நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனை சிரத்தில் ஏற்று சந்திரசேகரனாக  அருளியதால் "பிறை சூடீ" என்றார் சுந்தரர். அனை த்து உயிர்களுக்கும் அவன் ஒருவனே பெருமான் ஆனதால் பெருமானே  என்றும் அருள் நிதி தர வரும் ஆனந்த மலையாகத் திகழ்வதால் "அருளாளா" என்றும் விளித்தார்.

எந்த வகையில் பார்த்தாலும் உன்னை அடியேன் மறந்ததே இல்லை. "ஏற்றான் மறவாதே நினைக்கின்றேன்" என்றார் நாவலூர் நம்பிகள். உலகியலில் பற்று விட்டவர்க்கே இந்நிலை சித்திக்கும். இறைவனைப் பற்றிய நினைவு அறவே வராதவர்களும், அவ்வப்போது வருபவர்களும், ஆபத்துக் காலத்தில் வருபவர்களும் கொண்ட இவ்வுலகத்தில் இறைவனது நினைவே முற்றிலுமாக இருப்பவர்கள் அருளாளர்கள் மட்டுமே. "மறவாதே நினைக்கின்றேன்" என்று சுந்தரரும் , "இரவும் பகலும் பிரியாது வணங்குவன்" என்று அப்பரும் , "நனவிலும் கனவிலும் நம்பா உன்னை மனவிலும் வழிபடல் மறவேன்" என்று சம்பந்தரும், "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்று மணிவாசகரும் அருளியமை காண்க.

இனி வரும் பகுதி மிகவும் நயம் மிக்கது. "மனத்து உன்னை வைத்தாய்" என்று பிரித்துப் பொருள் கொண்டால், அவன் அருள் இருந்தாலன்றோ அவன் அருள் கிடைக்கும் என்ற  சித்தாந்த உண்மை வெளிப்படுகிறது. என் மனக்கோயிலில் நீங்காது உறையுமாறு அருள் வைத்தாய் எனப் பொருள் கொண்டால் பேரின்பம் பயக்கிறது. வெளிப்படையாகப் பொருள் கொண்டால், திருவெண்ணெய் நல்லூர் அருட் துறையை கோயிலாக வைத்தாய் எனக் கொள்ளலாம். இது, "கோலக்காவும்      கோயிலாக்  கொண்டான்" என்பது போல.

"வைத்தாய்ப் பெண்ணை " என்று பிரிக்கும்போது , ஒருபாகமாகப் பெண்ணை (உமாதேவியை) வைத்தாய் எனக் கொண்டு மகிழலாம். அதுவேயல்லாமல், "பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் " எனப் பிரித்துப் பொருள் நோக்கினால், பெண்ணை ஆற்றின் தென்புறம் உள்ள திருவெண்ணெய் நல்லூர் என்று பொருள்படும்.

அருட் துறை என்பது அத்தலத்து ஆலயத்திற்கான சிறப்புப் பெயர். அருள் பிரவாகிக்கும் துறை அல்லவா அது? முற்றிலும் பொருத்தமான பெயர் வேறு எதுவும் இருக்க முடியாது. சுவாமிக்கும் கிருபாபுரீச்வரர்  என்றே பெயர் வழங்கப்படுகிறது.

உனக்கு மீளா ஆட்செய்வதே அல்லாமல் உனது அடிமை இல்லை என்றோ உனக்கு ஆட்செய்ய  மாட்டேன் என்றோ இனிக் கூறவும் இயலுமோ என்று நெக்குருகிப் பாடுகின்றார் நம்பியாரூர் .

இத்தனை நயங்களையும் உள்ளடக்கிய பாடலை அதன் பொருட்சுவையை  உணர்வதோடு, தெய்வத் தன்மையையும் இணைத்துக்  கசிந்து பாடும் போது பெறும் இன்பமே அலாதி தான்!  

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய்ப் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே."

Monday, March 3, 2014

சிவபுரம் நினைவோம்

லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கும் இடத்தில் சரஸ்வதி கடாக்ஷம் இருப்பது மிகவும் அரிது என்பார்கள். ஏழ்மையில் வாடிய புலவர்கள் ஏராளம். வெற்றித்திருமகள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். ஆனால் இந்த மூன்று தேவியர்களின் அருளும் ஒரே இடத்தில் இருக்கும்படியாகச் செய்யும் சிவத்தலம் சிவபுரம் என்பது. கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சாக்கோட்டை என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.

சிவபுரத்தை மனத்தால் நினைத்தாலே, அலைமகள்,கலைமகள், மலைமகள் ஆகிய மூன்று தேவியர்களின் அருளும் கிடைத்துவிடும் என்கிறார் சம்பந்தர். “ “சிவபுர நினைபவர் திருமகளோடு திகழ்வரே” என்றும், “சிவபுர நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே” என்றும், “சிவபுரமது நினைபவர் செயமகள் தலைவரே” என்றும் கூறுவதால் அறியலாம். அது மட்டுமல்ல. நமது இடர்களைக் களைய வல்ல தலமும் இது. இந்தப் பிறவியில் எதிர்ப்படும் துன்பங்களை மட்டுமல்ல. அடுத்த பிறவியில் வரக்கூடிய துன்பங்களையும் நீக்கும் அருள் மிகுந்த தலமாக இது விளங்குவதை, “இருமையும் இடர்  கெடுமே” என்பார் ஞானசம்பந்தர்.
இத்தலத்தின் மீது அவர் பாடிய தேவாரத் திருப்பதிகத்தில் னகரம் எவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது பாருங்கள்.

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நட(ம்) நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமை உடையவனே.
என்பது அந்த அருந்தமிழ்ப் பாடல்.

திருமால் வெள்ளைப் பன்றியாகப் பலகாலம் சிவபூஜை செய்த அருமையான தலம் இது. இச்செய்தியை ஆச்சார்ய மூர்த்திகள் இருவரும் தம் பதிகங்களில் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்பர் பெருமானது திருப்பாடலை இங்கு சிந்திப்போமாக.

சிவபெருமானே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றான். 
நிலமாகவும்,நிலத்தில் விளையும் பயிராகவும்,அப்பயிருக்குக் காரணமான நீராகவும், நீரை (கங்கையை) ஏற்கும் சடையை உடையவனாகவும், செங்கோல் வேந்தன் என்று  மக்கள் புகழ்வதையே பரிசாகக் கொள்ளும் அரசனுக்கு அப்பெயர் விளங்கக் காரணமாகவும், பிறைபோன்ற கோரப்பல் உடைய வெள்ளைப்பன்றி வடிவில் திருமால் பலகாலம் பிரியாமல் வழிபட்ட பெருமையை உடையவனாகவும், தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் சிவன் எனவும் அப்பெருமான் விளங்குகின்றான். இப்படிச் சொல்லும் அப்பரின் திருத்தாண்டகத்தை இப்போது முழுவதும் காண்போம்:

பாரவன் காண் பாரதனில் பயிர் ஆனான் காண்
   பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியில் நின்ற
நீரவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண்
   நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப்பன்றி
   பிரியாது என்றும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீருடைய தேவர்க்கெல்லாம்
   சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

ஆர்யாம்பிகையும் சிவகுருநாதரும் அருள் வழங்கும் சிவபுரத்தைத் தரிசித்து நலம் யாவும் பெறுவோமாக.          

Saturday, February 8, 2014

கசிந்த மனம்

பரமேச்வரனுக்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள் ! அவனது பெருமைகளை அவனே அறியமாட்டான் என்கிறார் மாணிக்கவாசகர். அவன் எதைச் செய்தாலும் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. கங்கையையும் சந்திரனையும் ஏற்ற முடியில் வன்னி, எருக்கு, கொன்றை, ஊமத்தை ஆகியமலர்களைச் சூடிக்கொள்வதும் அழகுதான். இதற்கிடையில் சீறும் பாம்பையும் தரித்திருக்கிறான். அதுவும் அவனுக்கு ஆபரணமாகத்தான் திகழ்கிறது. அந்தச் செக்கச் சிவந்த மேனிக்கு வேறு நிறங்களும் அலங்காரமாகத்தான் அமைகின்றன. பால் போன்ற தூய வெண்ணீறு உத்தூளித்த மேனியனாகத் தோன்றுகிறான். கொடிய விஷத்தைக் கண்டத்தில் அடக்கியதால் அப்பகுதி நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது. இப்படி வண்ண வண்ண மேனியனாகவும் வண்ண மலைகளைச் சூடியவனாகவும், கங்கையும், பிறையும் பாம்பும் சூடிய செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியாகவும் திகழ்கிறான் பரமன்.

சிவபரம்பொருளின் பெருமைகள்  அளவிடமுடியாதவை. நாம் உய்ய வேண்டும் என்பதற்காகவே புராணங்களும் அருள் நூல்களும் சில பெருமைகளை நமக்கு உணர்த்துகின்றன. இந்த வகையில், தேவார திருவாசகங்கள் மூலம் நாம் அறியக்கூடிய செய்திகள் ஏராளம். கலயநல்லூர் என்ற தலத்தின் மீது அமைந்துள்ள சுந்தரர் தேவாரத்தை எடுத்துக்காட்டாக இங்கு கூறலாம். இத்தலம் கும்பகோணத்திற்கு அண்மையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருக்கிறது. இப்பதிகத்தில் பாடல் தோறும் புராண வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

ஈசனை அடையவேண்டி அம்பிகை தவம் செய்தது ,சலந்தரனை வெல்ல வேண்டித் தன் கண்மலரால் சிவபிரானைப் பூசித்துத் திருமாலானவர் சக்கரம் பெற்றது, மண்ணி  ஆற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் நிறுவிப் பசுக்களின் பாலால் அபிஷேகித்துப் பூஜை செய்த பாலன் மீது அவனது தந்தை வெகுண்டு பால் குடத்தை உதைக்கவே, அவரது கால்களை வெட்டி வீழ்த்திய பாலனுக்கு இறைவன் காட்சி அளித்துச் சண்டீச  பதம் தந்து அருளியது, உமாதேவியார் விளையாட்டாக இறைவனது கண்களை மூடியதால் உலகங்கள் யாவும் இருளவே, மூன்றாவது கண்ணைப் படைத்து ஒளிதந்து அருளியது, தேவர்களுக்காக முப்புரங்களை எரித்தது, தன்னை மதியாத தக்ஷனது யாகத்தைச் சிதைத்து, தேவர்களைத் தண்டித்தது, கயிலையை எடுத்த இராவணனைக் காலால் அழுத்தியது, மாலயனும் காண்பரிய நீண்ட தீச்சுடராய் நின்றது, காமனை நெற்றிக் கண்ணால் எரித்தது, முருகனைத் தோற்றுவித்து அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காத்தது, பிரமன் வழிபட்டது ஆகிய புராண வரலாறுகளை இப்பதிகத்தில் எடுத்துக் காட்டுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவன் எல்லாமாகி நிற்பவன் என்பதைக் கூறுமிடத்து,

“ நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி
  நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன் ஊர் ...”

என்பார் சுந்தரர். பெருமானது பெருமைகளைப் போலவே, அவன் உறையும் தலமும் பெருமை உடையது என்றும் காட்டுவார் அவர். அங்குள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. அழகிய மயில்கள் குதூகலித்து ஆடுகின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் கிரீச்சிடுவதை, “ சொல் துதிக்க” என்று சொல்வது அழகிய வருணனை. இப்படிப்பட்ட தலத்தில் வசிப்போரும் பெருமை உடையவர்களாகத்தானே இருக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அமிர்தகலச நாதரைத் தொழுது , தோத்திரம் சொல்லி, நெக்குருகி நின்று கசிந்த மனத்தவர்களாகத் திகழ்கிறார்களாம் அத்தலத்து அன்பர்கள். இப்படிச் சொல்லும் தேனினும் இனிய தேவாரத்தை இப்போது காண்போம்:

மால் அயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன்
வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் ; மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன் விடை ஊரும்   
விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவக் கோல மயில் ஆலச்
சுரும்பொடு வண்டு இசை முரலப் பசுங்கிளி சொல் துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்து
கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே .


இத்தலத்து இறைவரைத் தரிசித்து, இப்பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போது, குயிலும்,மயிலும்,கிளியும் குலாவிய ஊர் இப்படி நிசப்தமாக இருக்கிறதே என்று ஏங்கியபோது மதிலை ஒட்டிய மரங்களிளிலிருந்து கிளிகள் எழுப்பிய ஓசை கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டது. ஆம்! கிளிகள் இன்னமும் சொல் துதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் கசிந்த மனத்தவர்களாக இல்லை.             

Monday, January 13, 2014

திருவடிப்பெருமை

திருவெம்பாவையின் நிறைவுப்பாடல் சிவபெருமானது திருவடிகளைப் போற்றுவதாக மட்டுமே அமைந்துள்ளது. அப்பாத மலர்களே ஆதியும் அந்தமும் ஆவன. அவையே ஐந்தொழில்களுக்கும் ஆதாரமாக விளங்குவன. அத்திருவடிகளைப் பாதமலர் என்றும், செந்தளிர்கள் என்றும் பொற்பாதம் என்றும் பூங்கழல்கள் என்றும் இணையடிகள் என்றும் புண்டரீகம் என்றும் பொன்மலர்கள் என்றும்  போற்றித் துதிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

இறைவனது திருவடிகளைத் தாமரையாக உருவகிப்பது வழக்கம். இறைவனோ பவளம்போன்றும் செம்பொன் போன்றும் ஒளிருபவன். தாமரையானது கதிரவனைக் கண்டால்தான் மலரும். ஆனால் இப்பாத தாமரையோ எப்போதும் என்றென்றும் மலர்ந்து விளங்குவது. ஆயிரம் தாமரைகள் சேர்ந்தது போல ஒளி வீசுவது. மணமும் வீசுவது. ஆம்! இயற்கையாகவே அவை மணம் வீசுபவை.எல்லா வகை மலர்களுக்கும்  மணம் கொடுப்பவனும்,மலரெனவே நிற்பவனும் அவனே. அதைத்தான் அப்பரும்,   “வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே” என்றும் ,” நறு மலராய் நாறு மலர்ச் சேவடி” என்றும் அருளினார். பெருமானது பாத மலர்களை மட்டும் தாமரையாக உருவகிப்பதில் திருப்தி அடையாத மணிவாசகர் , அவனது திருவுருவம் முழுவதுமே தாமரை போன்றது. அதிலும் தாமரைக் காடு போன்றது என்கிறார்.  “செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே” என்பது திருவாசகம்.

திருநாவுக்கரசரது தேவாரத்திருப்பதிகங்களில் திருவடிச் சிறப்பைப் பேசுபவனவாகத் திருவதிகை, திரு இன்னம்பர், திருவையாறு,திருமாற்பேறு ஆகிய தலங்களின் மீது பாடல்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் ஒப்பற்ற பாடல்கள். நெஞ்சத்தை நெகிழ வைப்பவை. நித்திய பாராயணத்திற்கு உரியவை. அப்பேசற்கு அரிய திருவடிகளிடம் நம்மை ஆட்படுத்துபவை
.
பாம்பணையில் துயிலும் மாலும், நான்முகனும் சிந்திப்பரிய திருவடிகள் அவை. வராக வடிவெடுத்துப் பலகாலம் அகழ்ந்து சென்றும் சிவஜோதியின் பாதமலர்களைக்  காணமாட்டாமல் திருவாரூர்த் தியாகேசப்பெருமானைத் தியானித்தவாறே தமது மார்பில் அவனது அஜபா நடனத்தை ஏற்றுக் களிப்பவர் திருமால். அதோடு அமையாது, அம்மலரடிகளைச் சிந்தித்துப் போற்றுவதை, நாவுக்கரசர்,   “அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி” என்கிறார். போற்றுதல், வணங்குதல் , வழிபடுதல் போன்ற தொடர்களைக் காட்டிலும் சிறந்தது “அரற்றுதல்” என்ற இச்சொல் ஓலமிட்டு அலறுகிறானாம் திருமால். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர்: “மாலும ஓலமிட்டு அலறும் அம்மலர்க்கே மரக்கணேனையும் வந்திடப்பணியாய்”.என்பது அவரது வாக்கு.

அத்திருவடிகள் அண்மையில் உள்ளவை அல்ல. அதே சமயம் தூரத்தே உள்ளனவும் அல்ல. “சேயாய் நணியானே என்று சிவபுராணம் கூறுவதுபோல், அப்பரும், “ அணியனவும் சேயனவும் அல்லா அடி” என்றார். அவற்றை எப்படி வருணிப்பது? எவ்வாறு அளக்கத்தான் முடியும்? அவை ” சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து” நிற்பதோடு, “கணக்கு வழக்கைக் கடந்து” நிற்பவை அல்லவா? ஆகவே, “ அரை மாத்திரையில் அடங்கும் அடி என்ற அப்பர் பெருமான் “ அகலம்  அளக்கிற்பார் இல்லா அடி” என்று அருளினார்.  அப்படிப்பட்ட பாத கமலங்கள் அடியார்களுக்கு அமுதமாக விளங்குபவை. மருந்தாகிப் பிணி தீர்க்க வல்லவை. மந்திரமும் தந்திரமும் ஆனவை. பற்றுக்களை விட்டவர்க்கும் வேறு பற்றுக்கோடு இல்லாதவர்களுக்கும் ஒரே கதி என நிற்பவை. நிந்தனை செய்பவர்களது பொய் உரைகள் சென்று சேராதவை. தன்னைச் சரணம் என்று சார்ந்த மார்க்கண்டேயனைக் காப்பதற்காகக் காலனையும் உதைத்தவை.

அப்படியானால் அச்சேவடிகள் யார்க்கு எளியவை ? அப்பர் இதற்கும் விடை அருளுவார். “ சீலத்தராகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு அணியன” என்பதே அது. அத்தொண்டர்கள் பெறும் பேறு எத்தகையது தெரியுமா? உண்மைத் தொண்டர் வேண்டும் பிறவாமை ஆகிய வரத்தைக் கொடுப்பதேயாகும். இதைத்தான் குருநாதர், “ ஏழேழ் பிறப்பும் அறுத்தன” என்று ஐயாறப்பரின் திருவடிப்பெருமையைப் பேசுகிறார். அதோடு மட்டும் அல்ல. தன்னைப் போற்றும் குருடனையும் பாழ் நரகக் குழியிலிருந்து கை கொடுத்து ஏற்றி உய்விக்கும் பரம கருணாமூர்த்தியாகப் பெருமான் விளங்குவதை,

“குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.”
என்பன இவ்வினிய அடிகள்..

அடியார்களது அர்ச்சனைகள் சென்றடையும் இடம் பெருமானது பாதங்கள் அல்லவா? அப்பாதங்கள், போலிகளது அர்ச்சனைகளையும் கூடத்தான் ஏற்றுக்கொள்கின்றன. அது, அவன் அனைவரையும் மன்னித்து ஏற்கும் பெரும்கருணையை உணர்த்துவதாக உள்ளது. உற்றார் யாரும் இல்லாதவர்க்கும்  உறுதுணையாக இருப்பதும், அற்றார்களுக்கு அரும் பொருளாவதும் சிவபிரானது பாதங்களே என்று அப்பர் சுவாமிகள் நமக்கு உபதேசிக்கிறார். துயரம் வந்து நம்மை வெய்யில் சுடுவதுபோன்று சூழ்ந்துகொண்டால் , நிழலாக வந்து நம்மைக் காப்பன அத்திருவடிகளே. இப்படி எல்லாப்பொருளாக இருந்து திகழும் ஐயாறன் அடித்தலத்தை அப்பரது திருவாக்கால் இங்கே காணலாம்:

இப்பாடல், இறைவனே எல்லாமாகி நிற்பதை அறிவித்து அவனது திருவடிகளே எல்லாவற்றிக்கும் பிறப்பிடம் ஆவதை,

ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதி அம்சுடர் ஞாயிறும் ஒப்பன தூ மதியோடு
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.

என்று போற்றுகின்றார் திருநாவுக்கரசர்.  
    

இத்தனைச் சிறப்பு வாய்ந்த திருவடிகள் தன் சிரத்தில் எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் அப்பரடிகள். வேண்டுவார் வேண்டுவதே ஈயும் வள்ளலான சிவ பெருமான் அவரைத் திருநல்லூருக்கு வரவழைத்துத் தன் பாதமலர் சூட்டினான். உவகை மேலிட்ட நாவுக்கரசு சுவாமிகள், “திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே” எனப் பாடுகிறார். கனவிலும் இந்தப்பேற்றை அடையத் தவம் செய்யாத நாம், நல்லூர் சென்று அக்கோவிலில் நம் சிரத்தில் சார்த்தப்பெறும் திருவடிகளைச் சூடவாவது தவம் செய்ய வேண்டாமா?  

Thursday, December 19, 2013

பாதமலர்

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தைத் தனது திருக்கரத்தால் எழுதிவைத்துக்கொண்ட நடராஜப் பெருமானை  , அதிலுள்ள 51 தலைப்புக்களில் "திருவெம்பாவை" யில் அமைந்த பாடல்கள்   பெரிதும் கவர்ந்தன  போலும். அதனால் தானோ என்னவோ " பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று மணிவாசகருக்குக் கட்டளை இட்டான் பரமன் . " பாவை" என்றது இங்கு திருவெம்பாவையைக் குறிக்கும். அப்படியானால் நாமும் அம்   மணிவாசகத்தின் பெருமையை உணர்ந்து அப்பாடல்களை ஒதிவந்தால், சிவனருளை எளிதாகப் பெறலாம் அல்லவா?

எடுத்துக் காட்டாக ஒரு திருவெம்பாவைப் பாடலை இங்கு சிந்திப்போமாக. பரமேச்வரனது பாத கமலங்கள் திருமாலும் பன்றி வடிவில் அகழ்ந்து சென்றும் காண முடியாதவை. சொல்லால் வருணிக்க முடியாதவை. " எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால் "  என்று மற்றோரிடத்தில் குருநாதர் கூறுவது நினைவுக்கு வருகிறது. அவனது திருமுடியை பிரமனும் காண முடியவில்லை. ஆகவே, "மாலறியா நான்முகனும் காணா மலை" என்றார் . 'வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே..." என்கிறது திருவிசைப்பாவும். எல்லாப் பொருளின் முடிவும் ஆகி நிற்கும் பரம்பொருளுக்கு என்ன வடிவம் சொல்வது? அம்பிகையை இடப்பால் கொண்டவன் என்பதா? ஈருருவும் ஓர் உருவாய் இருக்கும் அர்த்த நாரீச்வர வடிவத்தைப் "பேதை ஒருபால்" என்றார்.

அதே சமயத்தில்  பல்வேறு வடிவும் எடுக்க வல்ல பரமனை எப்படி ஒரே வடிவம் கொண்டவனாகக் கூற முடியும்? அதனால் , " திருமேனி ஒன்றல்லன்" என்பதே அடுத்த வருணனை. விண்ணுலகும் மண்ணுலகும் துதிக்கும் இறைவனை வேதங்களாலும் துதிக்க முடியவில்லை என்றால் அவனது பெருமையை யாரால் பேச முடியும்? "ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்" என்றார். இப்படி "ஆராலும் காண்டற்கு அரியான்" அடியார்க்கு மட்டும் எளியவனாவது அவனது பெரும் கருணையைக் காட்டுகிறது. இப்படி " விண்ணுக்கு ஒரு மருந்து" எனவும் "வேத விழுப்பொருள் " எனவும் இருக்கும் பரம்பொருள் தனது அடியார்களுக்குத் தோழனாகவும் ஆகிறான். சுந்தரர் பெருமானுக்குத்            "தோழனுமாய்",  "வன் தொண்டன்   என்பதோர்  வாழ்வு"ம் தந்த பெருமானை     " ஒரு தோழன்" என்றார்  மாணிக்க வாசகப்பெருமான். அடியார்களுக்கு நடுவில் இறைவனே இருப்பதால், " தொண்டர் உளன்" என்றார். இதே கருத்தை, " ... அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் , அடியேன் உன்  அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்.. " என்று பாடுகிறார்.

எல்லா இடங்களிலும் நீக்கமற நிற்பவனை ஒரு ஊரைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுவதும் முடியாத காரியம்தான்! ஆகவே, " ஏது அவன் ஊர்? " என்பார்.     " ஒற்றியூரேல் உம்மது அன்று .. " என்ற சுந்தரரின் வாக்கும் நினையத்தக்கது. அதேபோல் அவனை எந்தப் பெயருக்கு உரியவனாக ஆக்கமுடியும்? இப்படி ஊரும் பேரும் கடந்த கடவுள் அல்லவா அவன்? ஆனால் நாமோ அவனைப் பல பெயர்களால் துதிக்கிறோம். "பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்", என்று அப்பர்  சுவாமிகள்  பாடியது போல், மணிவாசகரும்,

" .... ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ."  எனப்பாடுகிறார். உருவமும் அருவமும் ஆகிய பெருமானுக்கு எந்த உருவத்தை மட்டும் சொல்லிக் குறிப்பிடமுடியும்?  இதையே காரைக்கால் அம்மையாரும், .. " நின் உருவம் ஏது? " என்று வினவுகிறார் .

இப்படிப்பட்ட பரம்பொருளுக்கு உற்றாரோ , உறவினர்களோ, அயலவர்களோ யார் இருக்கிறார்கள்?  " தாயும் இலி , தந்தை இலி , தான் தனியன்.." என்று கூறியுள்ள திருவாதவூரர் , " ஆர் உற்றார் ; ஆர் அயலார்?' என்கிறார். இருந்தாலும் அவன் அருள் வழங்கும் கோயில்களைச் சென்று வழிபடாமல் இருக்கலாமா? "கண்ணுக்கு இனியானை"க் கண்ணாரக் காண வேண்டாமா? அப்படிக் கண்டபின்னர் அவனைப் " பாடிக்,கசிந்து உள்ளம் நெக்கு உருக வேண்டாமா? சித்தம் அழகிய அடியார்கள் சிவபெருமானைத் துதிக்கக் கண்ட பிறகும் , " சிவனே சிவனே என்று ஓலமிடுவதைக் கண்டும் ,அவமே காலத்தைப் போக்கலாமா? அவனோ நம்மைத் தலை அளித்து ஆட்கொள்பவன். விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதத்தையும் அடியார்களுக்குத் தந்து அருள்பவன். ஊழி முதல்வனாய் நிற்பவன். பிறவித் துயர் கெடும்படி அருள் செய்பவன்.உலகங்களை எல்லாம் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடுபவன்.  எங்கும் இல்லாததோர் இன்பம் நம் பால் வரும்படி அருள் செய்யவல்ல கருணாமூர்த்தி. அப்புண்ணியமூர்த்தியின் பூங்கழல்களே ஆதியும்,அந்தமும், தோற்றமும், போகமும், ஈறும் ஆகி நிற்பவை. மாலும்  நான்முகனும் காணாத அப்பாதமலர்களை நாமும் பரவி, மார்கழி நீர் ஆடுவோம் என்கிறது குரு வாசகம்.

பூதங்கள் தோறும் நிற்கும் பராபரனைக் கீதங்கள் பாடியும் ஆடியும் வழிபட வேண்டும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாடவேண்டும்." ... நின்னையே பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஆட வேண்டும் நான் .. " என்று தனக்காகப் பாடுவதுபோல் நமக்கு உபதேசிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான். நம் கண்கள் அவன் கழல் கண்டு களிக்க வேண்டும். அவன் கழலை வாழ்த்த வைத்த திருவருளை நினைந்து நினைந்து உருக வேண்டும். அப்படி உருகுவதால் ஏற்படும் பலனையும் அடிகளே கூறுவார்: ..." தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் குணங் கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்... " என்பார்.

இத்தனை அருமை-பெருமைகளை நமக்கு வாரி வழங்கும் திருவெம்பாவையின் ஒரு பாடல் இதோ:

" பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திரு மேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ; ஏது அவன் பேர் ; ஆர் உற்றார் ; ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
  

Friday, October 25, 2013

ஏறு ஏற்ற ஈசன்

ரிஷபம் என்பதற்குத் தமிழில் காளை என்றும் , விடை  என்றும், ஏறு என்றும் பலப்பல சொற்கள் உண்டு. அதனை வாகனமாகக் கொள்வதால் பெருமானுக்குக் "காளையார்" என்றும், விடையவன்  என்றும், ஏற்றன்  என்றும் பெயர்கள் வந்தன. ரிஷப வாகனத்தில் ஈசுவரன் ஏறுவதால் அந்த வாகனம் ஏறு எனப்பட்டது. இதையே மாணிக்கவாசகரும்  "ஏறுடை ஈசன் " என்றார் .  இவ்வாறு ஏற்றின் மீது ஏறி வரும் பெருமானை  ஏற்றார்  என்று குறிப்பதோடு மட்டுமல்ல. யாராவது ஒரு பொருளை ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றார் என்றுதானே சொல்வது வழக்கம்! அப்படியானால் அதை சுவாமிக்கும் பொருத்திப் பார்ப்பதில் தான் எத்தனை இன்பம்! ஏற்றின் மேல் ஏறி வரும் பெருமான் எதையெல்லாம் ஏற்றான் என்று குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான் ஒரு அழகிய பாடலில்.

 உலகையே அழித்துவிடும் வேகத்தில் வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற்றான். அதனால் கங்காதரன் ஆனான். கங்கை தங்கிய செஞ்சடையில், பலரது சாபத்தையும் பெற்று அடைக்கலம் வேண்டி வந்த சந்திரனை ஏற்று சந்திரசேகரன் ஆனான். இக்கருணையை, " நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார் " என்றார்  அப்பர். திங்கள் என்றது சந்திரனை.

தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாகப் பிக்ஷாடனக்  கோலத்தில் எழுந்தருளி பிக்ஷை (பலி) ஏற்றான். அது கண்டு கோபம்  கொண்டு ஆபிசார  வேள்வி செய்து முனிவர்கள் ஏவி விட்ட நெருப்பைக் கரத்தில் ஏற்றான். முனி பத்தினிகளின் கற்பை ஏற்றான். " நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார் " என்று வாகீசப் பெருமான் இந்நிகழ்ச்சியைக் காட்டுகிறார்

தாருகாவனம் முழுவதும் சென்று பலி ஏற்றதோடு முனிவர்கள் ஏவிய பாம்பை (அரவத்தை) ஆபரணமாகத் தன் மேனியில் ஏற்றான் . பன்னகாபரணன் ஆனான். இதனை அப்பர்  சுவாமிகள், " ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார் " எனக் குறிப்பிடுகிறார்.

இன்னும் எதையெல்லாம் ஏற்றான் தெரியுமா? அலைகடலிலிருந்து அனைவரையும் அழிப்பதற்காக எழுந்த ஆலகால விஷத்தை உண்டு , தனது கழுத்தில் நிலைபெறச் செய்து நீலகண்டன் ஆனான். இப்படி ஆலந்தான் உகந்துஅமுது செய்தபடியால் விஷத்தையும் ஏற்று அகில உலகையும் காத்து அருளிய செயலை, " ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் " என்றார். மிடறு என்பது கழுத்தைக் குறிப்பது.

தன்னை அடைய வேண்டித் தவம்  செய்த அம்பிகையை இடப்பாகத்தில் ஏற்றான் என்பதை, " வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்." என்றும் ,  முனிவர்கள் ஏவிய மானையும் மழுவையும் தனது கரங்களில் ஏற்றான் என்பதை ,

" மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்."  என்றும் அருளினார்  திருநாவுக்கரசர் .

எல்லாப் புகழும் இறைவனையே சேரும் என்பதை உணத்துவதாக, " பாருலாம் புகழ் ஏற்றார்." ஏற்றார்.

நிறைவாக இறைவன் ஏற்றின் மேல் ஏறி வருவதைக் குறிப்பிடுகையில், அந்த அழகிய மிரண்ட, உருண்டு திரண்ட கண்களை உடைய வெள்ளை விடையாகக் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். "பைங்கண் ஏற்றார்  " என்பது அவ்வுயரிய வரிகள்.  பந்தணை  நல்லூரில் அருளிச் செய்த அத் தேவாரப் பாடலை இப்போது பார்ப்போம்:

    நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்
            நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார்
     ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார்
             ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
    வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்
             மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்
    பாருலாம் புகழ் ஏற்றார்  பைங்கண் ஏற்றார்
             பலி ஏற்றார்  பந்தணை நல்லூராரே .
என்பது இவ்வினிய திருப்பாடல்.