Thursday, June 14, 2012

பயமும் அபயமும்


பயம் என்ற சொல்லுக்குத் தமிழில் அச்சம் என்று பொருள் சொல்வார்கள். அபயம் என்றால் அச்சம் இல்லாமல் அது நீக்கப் பெறும் நிலை. நம்மை  அஞ்சேல் என்று அருள வல்ல இறைவனைத் திருவாசகம், "அச்சம் தீர்த்த சேவகன் வாழ்க" என்று போற்றுகிறது. அவ்வாறு அஞ்சேல் என்று அபயம் அளிக்கும் கரத்தை , அபய கரம் என்றும் அபய ஹஸ்தம் என்றும் போற்றுகிறோம். கடவுளர்களின் திருவுருவங்கள் இந்நிலையிலேயே இருக்கக் காண்கிறோம். மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை எனப்படுகிறாள். அஞ்சல் என்று பக்தர்களுக்கு அருள வல்ல நாயகியாதலால் இப்படி அழைக்கப்படுகிறாள்.

பயத்தில் தான் எத்தனை வகை! பிறப்பு முதல் இறுதி வரை ஏதாவது ஒரு காரணத்திற்காக பயப்பட வேண்டியிருக்கிறது. நோய் வாய்ப்படும்போதும், கடைசி காலத்திலும் இந்த பயம் அதிகரிக்கிறது. நாத்திகனும் இறைவனை அப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. இதைத் தான் ஞானசம்பந்தரும், "நோயுளார் வாயுளான்" என்றார். உண்மையில், இதுவும் ஒருவகையில் அருள் என்றே தோன்றுகிறது. " எனது உறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்" என்றார் சம்பந்தப் பெருமான். அந்த உறுதிப்பாடு நமக்கு எந்த காலத்திலும் வருவதில்லையே. "வேண்டாத தெய்வம் இல்லை ; கஷ்டம் இன்னும் தீர்ந்தபாடு இல்லை; தெய்வம் இன்னும் கண் திறக்கவில்லை" என்று சொல்லி, பழியைத் தெய்வத்தின் மீது தானே போடுகிறோம்! "வ்யாதிநீனாம் பதயே நம" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்வதால், நோய் அருளி அதன் தலைவனாகவும் ஆகி அதன் மூலம் நம்மை ஆட்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். இந்த நினைப்பு வந்துவிட்டால் , நம்மை விட்டு மரண பயம் போய் விடும்.

செய்யும் தொழிலிலும் பயம் தேவைப்படுகிறது. அத்தொழில் இறைவனோடு சம்பந்தப்படும் போது பயத்தோடு பக்தியும் இணையவேண்டும். இதைத்தான் பயபக்தி என்றார்கள் போலும். கையில் செல்வமும் பிற பலங்களும் சேர்ந்துவிட்டால் ஆணவம் ஓங்கி, அச்சம் சிறிதும் இல்லாமல் போய்விடுகிறது. இராவணன் கூட இப்படித்தான். கைலை மலையையை அச்சம் இன்றி , ஆணவத்தோடு தூக்கினான். அதற்கான தண்டனையையும் பெற்றான். இதனால் கயிலைமலை சற்று அசையவே, உமா தேவி பயந்தாளாம். அப்போது, கயிலாயநாதன் தன் தேவியை நோக்கி, " காரிகையே, அஞ்சல்" என்று கூறித் தனது விரலால் அம்மலையைச் சற்றுஅழுத்தவே, அரக்கன் நிலைகுலைந்து , தலைகளும்,கைகளும் இழந்து வீழ்ந்தான். இக்காட்சியை அழகாக வருணிப்பார் ஞானசம்பந்தப்பெருமான். அம்பிகை மதுர பாஷனி அல்லவா? அதிலும் யாழை வென்ற மொழியாளும் ஆவாள்.
எனவே,

"பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் ..."
என்ற வரிகள் காட்டுகின்றன.

இப்படிப்பட்ட இறைவன் விரும்பி உறையும் திருவெண்காடு எத்தகையது தெரியுமா?

அருகிலுள்ள கடல் அலைகள் ,முழவோசை போல் முழங்க, மயில்கள் நடமாட, சோலைகளில் வண்டுகளின் ரீங்கார இசை ஒலிப்பச் சிறந்து விளங்குவது அத்தலம்.

திருவையாற்றுப் பதிகத்தில் சம்பந்தர் காட்டும் காட்சியும் இங்கு ஒப்பு நோக்கி மகிழத்தக்கது. நாடகசாலைகளில் மகளிர் நடனம் ஆடும் போது முழவு ஒலிக்கிறது. ( இங்குப் பெண்களாகிய மயில்களின் நடனம். அங்கோ, தோகை விரித்து ஆடும் மயில்களின் நடனம். இங்கு முழவின் ஓசை. அங்கோ, கடல் அலைகளே, முழவோசை என முழங்குகின்றன.) "மடவார்கள் நடமாட,முழவு அதிர" என்பது திருவையாற்றுக் காட்சி. அங்கு முழவோசையை மேகம் இடிப்பதாகக் கருதி, மழை வரும் எனக் கருதித் தோகை விரித்து மயில்கள் ஆடுகின்றன. ஐயாற்றிலோ , அவ்வோசையைகேட்ட சில மந்திகள், மழை வந்துவதாகக் கருதி , அவசரமாக மரத்தில் ஏறி, ஆகாயத்தைப் பார்க்கின்றன என்ற அருமையான வருணனையைப் பார்க்கிறோம்.

முழுப் பாடலையும் இப்போது பாருங்கள்:

பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே.

Sunday, May 13, 2012

சிவனருளும் குருவருளும்


துறவின் நோக்கம் தான் என்ன? வெள்ளை உடைகளைத் துறப்பது மட்டும் தானா? ஆசை உட்பட எல்லாவற்றையும் துறப்பவன் துறவி ஆகிறான். மனத்தை ஒடுக்கித் தவம் செய்கிறான். அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கிறான். வெளி உலகியலில் இருந்து விலகித் தவம் செய்கிறான். அதனால் என்றாவது இறை இன்பத்தை உணருகிறான். தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என விரும்புகிறான். தகுந்த மாணாக்கார்கள் மூலம் உபதேசிக்கிறான். அவனது தவ வலிமை பிறரை வியக்க வைக்கிறது. இப்படிப்பட்டோர்க்கு அல்லவோ இறைவன் முன்னின்று அருளுவான். நம் போன்றோருக்கு எவ்வாறு இறை அருள் கிட்டும் என்று பிறர் நினைக்கின்றனர். இத்தகையோருக்கு ஆறுதல் அளிக்கிறார் ஞானசம்பந்தப்பெருமான்.

பிறவியைப் பிணி என்று சொல்வதால் , அதில் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மிகுந்து இருப்பதைக் காணும் போது சலிப்படையச்செய்கிறது. இதனால் வருவது கேடு அல்லவா? இதைத்தான் , "கேடு உனக்குச், சொல்கின்றேன் பலகாலும்" என்றார் மாணிக்கவாசகரும். சரி; அதைத் தாண்டும் உபாயம்தான் என்ன? இறைவன் கேடு இல்லாதவன் அல்லவா? அவனைத் தஞ்சம் என்று சரணாகதி அடைந்தால் கேடில்லாமல் கரைஎறி விடலாம் அல்லவா? எனவே, "கீழ்வேளூர் ஆளும் கோவினைக், கேடிலியை நாடுமவர் கேடிலாரே" என்றார் அப்பர் பெருமான்.

இப்போது ஞானசம்பந்தப்பெருமான் உபதேசிப்பதைக் கேளுங்கள்: இறைவனை மறவாமல் இருத்தலே அந்த மார்க்கம். அப்படி மறவாத துறவிகளுக்குமட்டுமே அது வாய்க்கும் என்று சலிப்படையாதே. அஞ்சாதே. புண்ணிய நீரான கங்கையைச் சடையில் வைத்தவனும்,தர்ம ஸ்வரூபனுமான பரமேச்வரனின் திருவாரூரைத் தொழுதால் பிறவியையும் அதனால் வரும் கேட்டையும் தாண்டி, பேரின்பம் பெற்று விடலாம் என்கிறார் குருநாதர். அத்தேவாரப் பாடலைப் பார்ப்போமா?

பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்ப(ம்)நீங்காது எனத் தூங்கினாயே
மறவல் நீ ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

இதனால் அறியப்படுவது என்னவென்றால், அவரவர் நிலையில் இருந்து இடையறாப் பேரன்புடன் பக்தி செய்தால் இறை அருளைப் பெறலாம் என்பதே. ஒன்றை மட்டும் இங்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே சிவ ஞானம் சித்திக்கும் என்பதை மறக்கக் கூடாது. "பிரான் அருள் உண்டு எனில் உண்டு நன் ஞானம்" என்றார் திருமூலர். "வாடித் தவம் செய்வதே தவம் " என்றார் பிறிதோர் திருமந்திரத்தில்.

ஆரூர் போன்ற தலங்களை முறையாகத் தரிசிப்போர்க்கு சற்குருவும் வாய்ப்பார். அப்போதும், "கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க" என்று எச்சரிக்கை செய்கிறார் திருமூலர். நல்ல சீடன், சற்குருவின் பாதத்தை நிழல் போல் நீங்காதிருக்க வேண்டும் என்கிறார். அகவிருளை நீக்கும் குருவைக் கொள்ளாது, பெயரளவில் சீடனாகி, "வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து" துறவி என்று கூறிக் கொள்வதால் என்ன பயன்? சிவஞானம் கைவரப் பெறாதவர்க்குப் புற வேடத்தால் ஏதும் பயன் இல்லை. "ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்" என்று இதைத் திருமூலர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, குருவானவர், அரும் தவசி என இருத்தல் அவசியம். அதுவே தூய நெறியும் ஆகும்.அப்படிப்பட்டோர்க்குப் பிறவிப் பெருங்கடல் தாண்டுவது சாத்தியமாகி விடுகிறது.

தவ ஒழுக்கம் மேற்கொண்டோருக்கு இறைவன் நெறியை வகுத்துக் கொடுத்திருக்கிறான். அந்த நெறியிலிருந்து வழுவினால் அவர்கள் மேல் பாய நெருஞ்சில் முள்ளையும் (தண்டனையையும்) உண்டாக்கியிருக்கிறான். இப்படிச் சொல்கிறார் திருமூலர்:

"நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்.."    

இவ்வாறு முள் மீது நடப்பது போன்ற பாதை துறவறம். இவ்வாறு, சைவத் தனி நாயகன் நந்தி , உய்வதற்காக வைத்த நெறி குருநெறி;அதுவே தெய்வச் சிவநெறி; இது எல்லோராலும் எளிதே பின்பற்ற இயலாது ஆதலால், எளிய மார்க்கத்தைக் காட்டி நம்மைச் சிவநெறிப்படுத்துகிறார் ஞாலம் உய்ய வந்த காழிப் பிள்ளையார்.

Sunday, April 15, 2012

"காளத்தியான் என் கண்ணுளான் "


சிவபெருமான் எங்கே இருக்கிறான், அவனைக் கண்டவர்கள் யார், அவன் உருவம் எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் அடுக்கப்படும் கேள்விகளுக்குத் திருமுறைகள் விளக்கம் அளிக்கின்றன. அவன் இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் , புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் அநேகர். சில இடங்களையாவது அவர்களுக்குப் புரியும் வகையில் சுட்டிக்காட்டி, அவரவர் அனுபவத்தால் அவனருளைப் பெறுவதற்கு வழியைக் காட்டுகின்றன  இத் தெய்வப் பனுவல்கள்.

"உள்ளம்  பெருங்கோயில்" என்றார் திருமூலர். மனம் மாசற்றபோது அதில் மாதேவன் கோயில் கொள்கிறான். மெய் அடியார்கள் தம்  மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்வதை, திருநின்றவூர்ப் பூசலார் நாயனார் வரலாற்றால் அறிகிறோம். யார் தன்னை வஞ்சம் இன்றி நினைக்கிறார்களோ அவர்களது மனத்தில் சிவன் வீற்றிருக்கிறான். "நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்" என்றார் அப்பரும்.

அடுத்ததாக, யோக நெறியில் அவனைக் காண்போர்கள், துவாதசாந்தத்தில் காண்பார்கள். தலையின் மேல் அவ்வாறு இருப்பதையும் அந்நெறியில் நிற்போர்கள் உணர முடியும். சீர்காழிப்  பெருமான் தனது உச்சியில் நிற்பார்  என்று ஞானசம்பந்தப் பிள்ளையார்  இதைத்தான் குறிப்பிட்டார். தலங்களுள் துவாதசாந்தத் தலம் என்று மதுரை குறிப்பிடப்படுகிறது.

இனி, அவன் உறைவிடமாக வாய் சொல்லப்படுகிறது. வாயிலிருந்துதானே அவன் புகழ் பேசும் வாக்கு வெளிப்படுகிறது?  அந்த வாக்கு சிவ வாக்காகவே ஆகிவிடுகிறது. "எனது உரை தனது உரை" என்பார் சம்பந்தர்.
இறைவன் எந்த இனத்தோடு ஒட்டி வாழ்பவன் தெரியுமா? தனது தொண்டர்களை இனமாகக் கொண்டு நீங்காது உறைந்து அருள் செய்கிறான். அவன் அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்பவன். யார்க்கும் தெரியாத தத்துவனாய் இருந்தபோதும், அடியார்களுக்கு அணியன்  ஆகி நிற்பவன். அதிலும் தன் அடி ஒன்றையே கதியாகக் கொண்டு தனக்கு முன்னர் பாடும் தொண்டர்க்கு எளியவன். அவர்களைத் துன்பக் கடலிலிருந்து கரை ஏற்றும் தோணி ஆகி விளங்குபவன். மிக்க அன்போடு அழும் தொண்டர்க்கு அமுதாகி அருள்பவன். பக்தர்க்கு என்றும் கண்ணிடை மணியாகி நிற்பவன்.
இமையவர்கள் இன்னமும் துதிக்க  நிற்பவன்  அப்பேரருளாளன் . அத்தேவர்களின் சிரத்தின் மீது இருக்கின்றான். அது மட்டுமா? ஏழு அண்டங்களையும் கடந்த கடவுளாக அவன் ஒருவனே விளங்குகின்றான். நிலங்களாகவும் கொன்றைப்பூவிடமும் மலை,காற்று, நெருப்பு ஆகிய வடிவிலும் விளங்கும் அஷ்ட மூர்த்தியும் அவனே. கயிலாய மலைச் சிகரத்தின் உச்சியிலும் , தக்ஷிண கைலாயமாகிய காளத்தியிலும் கோயில் கொண்டுள்ள இறைவன் என் கண்ணை விட்டு அகலாது விளங்குகின்றான் என்கிறார் அப்பர் பெருமான். இதோ அப்பாடல்:

 மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
    வாயாரத் தன் அடியே பாடும் தொண்டர்
 இனத்தகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
   எழண்டத்தப்பாலான் இப்பால் செம்பொன்
 புனத்தகத்தான் நறும் கொன்றைப் போதினுள்ளான்
   பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்
   காளத்தியான் அவன்  என் கண் உள்ளானே.

"என் கண் " என்பதற்கு " என்னிடத்தில்" என்றும்  "என்  கண்ணின் மணியாகி நீங்காது உறையும்" என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளும்போது தெய்வீக மணம் ,இப்பாடலில் மேலோங்குவதைக் காணலாம்.

Thursday, March 29, 2012

கண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வம்


  பனை மரத்தைத்  தல  விருக்ஷங்களாகக் கொண்ட ஊர்கள் பல உண்டு. திருப்பனையூர், வன்பார்த்தான்  பனங்காட்டூர் , புறவார் பனங் காட்டூர், திருப்பனந்தாள்  ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். செய்யாறு எனப்படும் திருஒத்தூரிலும்  தெய்வப் பனைமரம் ஸ்தல விருக்ஷமாகப் போற்றப்படுகிறது. இவற்றுள் , புறவார் பனங்காட்டூர்  எனும் தலம் , தற்போது பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இத்தலப் பெருமானை, ஞான சம்பந்தர்  பாடிப் பரவிய ஒரு பதிகம் இரண்டாம் திருமுறையுள் உள்ளது. இப்பதிகத்தால் அறியவரும் செய்திகள் சிலவற்றை இங்கு சிந்திக்கலாம்.

"வையகமும் துயர் தீர்கவே" என்று, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெரும் கருணை  உடைய சம்பந்தர் ,  இத்தல இறைவனிடம் நமக்காக வேண்டுகிறார். அதிலும், இறைவனிடம் அன்பு கொண்டவர்களுக்கு  அருள வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். எப்படி அதனை முன்வைக்கிறார்  தெரியுமா?  " நள்ளிருளில் ஆடும் சங்கரனே, நீ நான் மறைகளையும் பாடிக் கொண்டே ஆடுபவன்; மாதொர்  பாகனாகிய பிஞஞகனும் நீயே. கங்கையும் மதியமும் கமழும் சடையில் கொன்றை மலரும் ஊமத்தை மலரும் சூடியவன் நீ. உன் அடியார்கள் உன்னை  எப்படியெல்லாம் துதிக்கிறார்கள் தெரியுமா? நால் வேதங்களையும் பாடி ஆடுபவனே என்று பலமுறை நல்ல மலர்களை உன் பாத கமலங்களில் தூவித் துதிக்கிறார்கள். முழு முதற்கடவுள் நீயே என்று கை கூப்பி நாள்தோறும் வணங்குகிறார்கள். இராவணனை அடர்த்துப் பின் அவன் பாடலுக்கு இரங்கியவனே என்கிறார்கள். திருமால்,பிரமன் எனும் இருவரும் அறிய முடியாத அக்னிப் பிழம்பாக நின்றவனே என்று போற்றுகிறார்கள். பிரம கபாலம் ஏந்தும் பிக்ஷாடன மூர்த்தியே என்று துதிக்கிறார்கள்.இத்தகைய அடியார்களுக்கு அருளுவாயாக."

"நீ விரும்பிக் கோயில் கொண்டிருக்கும் புறவார் பனங்காட்டூரின் அழகே அலாதியானது. அங்கே வண்டுகள் ரீங்காரம் செய்வது, நேரிசைப் பண்ணில் யாழில் எழுப்பும் ஒலியைப்   போல் இருக்கிறது. நீர்வளம் மிக்க இவ்வூரில் வைகறையில் எருமைகள் செந்நெற் கதிர்களை மேய்ந்துவிட்டு குளிர்ந்த நீர் நிலைகளில் குளிக்கின்றன. வய ற்கரைகளில் பாளைகளை உடைய கமுகு மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. தாமரைப் பொய்கைகளில் அன்னங்கள் விளையாடுகின்றன "

" காந்தள் மலர்களின் தோற்றம், பெண்களின் கை விரல்களைப் போலவும் , பாம்பின் படத்தைப் போலவும் தோற்றமளிக்கின்றன. உமா தேவியும் காந்தள் போன்ற விரல்களையும், இயற்கையாகவே  நறுமணம் கமழும் கூந்தலையும் உடையவள் தானே! இப்படிப் பல்வேறாகப் பாடிப் பரவும் மெய்யடியார்களுக்கு நீ அருள்வாயாக" என்று துதிக்கிறார் சம்பந்தப்பெருமான். இதில், அம்பிகையைக் குறிப்பிடும் இடத்தில், "மெய்யரிவை " என்று சொல்வதை, உரை எழுதுபவர்கள் , இறைவனின் மெய்யில் பாகம் கொண்டவள் என்று விளக்கம் தருகிறார்கள். இவ்வூரில் அன்னைக்குப் புறவம்மை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. வடமொழியில் சத்யாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். இத்தேவியின் முன்னர்  பொய் சத்தியம் செய்பவர்கள் பெரும் கேடு அடைகிறார்கள் என்று இவ்வூர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆகவே, சத்தியத்தின்  முழு வடிவமாக அம்பிகை இங்கு கோயில் கொண்டுள்ளாள். இதைத்தான் "மெய் அரிவை " என்று சம்பந்தர் சொன்னாரோ  என்று தோன்றுகிறது. "மெய்" என்பதன் பொருள், சத்தியம் அல்லவா? "அரிவை " என்பது பெண்களின் பல பருவங்களில் ஒன்று. இத்தலத்தில் அரிவை வடிவில் காட்சி அளிக்கிறாள் போலும்! இப்போது பாடலைப் பார்க்கலாம்:

கை அரிவையர் மெல் விரல் அவை  காட்டி அம் மலர்க் காந்தள் அம்குறி
பை அரா விரியும் புறவார் பனங் காட்டூர்
மெய் அரிவை ஓர் பாகமாகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள் தொறும்
பொய் இல்லா அடிமை புரிந்தார்க்கு அருளாயே.

தனது பதிகத்தின் பாடல்களை , தமிழ் மாலை, செந்தமிழ், பாமாலை போன்ற  சொற்களால் குறிப்பிடும் சம்பந்தர், இத்தலப் பதிகத்தில், "செய்யுள்" என்று குறிப்பார். இப்பதிகப் பலன், சிவலோகம் கிட்டும் என்பதே. இதுவே பிறவியை வேர் அறுக்கும் உபாயம் அல்லவா?          "நான்மறை ஞானசம்பந்தன் செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே." என்பது அவரது ஞான வாக்கு.
இப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களோடு, தமிழ் இன்பத்தை வழங்கும் இத்தலப் பதிகம், இதனைப் பாராயணம் செய்வோர்க்கு சிவலோகத்தையும் வழங்கும் ஆற்றல் உடையது. சுயம்பு மூர்த்தியாக ,சத்யாம்பிகையுடன் அருள் வழங்கும் பனங்காட்டீசனின் திருக்கோயில் சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சித்திரையில் சூரியனின் கதிர்கள் இறை வன்- இறைவியின் திருமேனிகளில் தோய்வதைக் காணப் பல ஊர்களிலிருந்து அடியார்கள் வருகிறார்கள். கண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வமாக இறைவனை வழிபடுகிறார்கள்.

Tuesday, February 14, 2012

"இறைவன் நீ"


  உலகத்தில் பிறக்கும் பொழுதே, சில உறவுகள் தாயார் வழியிலும், தகப்பனார் வழியிலும் அமைந்து விடுகின்றன. வயது ஆக ஆக, மேலும் பல உறவுகள் வந்து சேருகின்றன. இப்படிப்பட்டபல  உறவுகளில், அண்ணன்-அண்ணி,மாமன்-மாமி போன்றவை  காலம் காலமாகப் பரிமளித்து வருபவை. இதில் அண்ணன், அருகிலிருந்து அண்ணிப்பவன் . சிவபெருமானும் தனது பக்தனிடம் அணித்து அருள் புரிவதால், "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். மேலும் அவரே, "அண்ணா" என்று பரம்பொருளான பரமசிவனை வாயார அழைக்கிறார். அண்ணனது மனைவியிடம் அம்பிகையைப்போல், அண்ணனது கருணையும் பிற நல்ல குணங்களும்  காணப் படுவதில் ஆச்சர்யம் இல்லை.  மன்னிப்பதிலும் அவள் தாயைப் போன்றவள். அதனால் தானோ என்னவோ  அவளைச்  சிலர் "மன்னி" என்று அழைப்பதும் உண்டு. வட இந்தியாவில் அவளைத் தாயாகவே பாவிப்பார்கள்.

                          தாய் வழி மாமனுக்கும் தனி இடம் உண்டு.   உபநயனத்தில், மாமனின் தோளிலே மருமகன் வருவதையும், அதேபோல் மருமகன்,மருமகள் ஆகியோர் அவ்வாறு தூக்கப்பட்டு திருமணத்தில் வருவதையும் நாம் பார்க்கிறோம். இந்த வைபவங்களில் மாமன்- மாமி அக்குழந்தைகளுக்கு  சீர் வரிசைகள் செய்வார்கள்.  மதுரையில் சிவபெருமான் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் , மாமனாக வந்து வழக்கு உரைத்ததும் ஒன்று. திக்கற்ற தங்கையின் குழந்தைகளை உறவினர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அக்குழந்தைகளின் மாமன் வடிவில் வந்து சோமசுந்தர மூர்த்தியானவர் சாட்சி சொல்வது அந்தத் திருவிளையாடல். அக்குழந்தைகளைத் தழுவிக்கொண்டு,"இப்படி வறியர் ஆகிவிட்டீர்களே" என்று கூறிக் கண்ணீர் விட்டான் இறைவன். மாமன் உறவு அவ்வளவு மகத்தானது.

                           உறவுகளைத் தந்ததோடல்லாமல் ,அந்த உறவுகளாகவே இறைவன் இருந்து அருள் பாலிக்கிறான் என்ற கருத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நல்ல தாயார் - தகப்பனார் வயிற்றில் பிறக்கச் செய்து, நல்ல உடன் பிறந்தோரையும் தந்து அருளுகிறான். " ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் " என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.  குண- வதியான  மனைவியையும் மக்களையும் அமைத்துத் தருகிறான்  பரமன். அது மட்டுமா? நமக்கு வேண்டிய பொன்,பொருள், மணி, முத்து , தங்கும் ஊர் ஆகியவற்றையும் அமைத்துக் கொடுத்து அவற்றை அனுபவிக்கும் வரத்தையும் வழங்குகின்றான். இப்படி இறைவன் தந்த அனைத்தையும் இறைவடிவமாகவே பார்த்துப் பரவசத்துடன் அப்பர் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடலை இங்கு சிந்திப்போமாக:

 அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய  மாமனும் மாமியும் நீ
 ஒப்புடையமாதரும்  ஒண்பொருளும் நீ
    ஒருகுலமும் சுற்றமும் ஒரூரும் நீ
  துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
     துணையாய் என்நெஞ்சம்  துறப்பிப்பாய் நீ
  இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
     இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

"எல்லா உலகமும் ஆனாய் நீயே " என்று பாடிய திருநாவுக்கரசர்  மேற்கண்ட பாடலில் சற்று விளக்கமாகவே நமக்கு உணர்த்துகின்றார். ஆகவே, அவன் தந்த அனைத்தையும் அவனுக்கே சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் அப்பொருள்கள் எதிலும் பற்றில்லாமல் , திருப்புகலூரில் உழவாரத்தொண்டு செய்துகொண்டிருந்த போது பூமியில் கிடைத்த ஒளிவீசும் மணிகளை , வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளியதோடு , பரமேச்வரன் ஒருவனே தனித்துணை , அவன் அருள் பெறுவதே பிறவியின் நோக்கம் என்பதையும் தெளிவாக இப்பாடல் மூலம் உபதேசிக்கிறார்.                          
                                     

Wednesday, December 28, 2011

ஒற்றியூர் உத்தமன்

உலகத்தில் நல்லனவும் கெட்டனவும் கலந்தே இருக்கக் காண்கிறோம். இவ்விரண்டையும் காட்டி அதில் நல்லதைப் பகுத்து அறிந்து எடுத்துக்கொள்ளும் ஆறாவது அறிவை இறைவன் மனித்தப் பிறவிக்கு அருட் கொடையாக வழங்கியிருக்கிறான். " நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்" என்று தேவாரமும் எடுத்துக்காட்டுகிறது. தீய காரியங்களில் ஈடுபடும்போது பாவ வினைகள் வந்து சேர்கின்றன. இப்பாவங்கள், தெரிந்தும்,தெரியாமலும் செய்யப்படுபவையே. கண், காது, மூக்கு,வாய், உடல் ஆகிய பஞ்ச இந்திரியங்களால் செய்யப்படுபவையே. இவை. மனத்தின் ஏவலால் செய்யப்படுவதாகக் கொள்ளலாம். அனுதினமும் இப்பாவ மூட்டையின் பாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்ணால் பார்க்கப் படுவதை எல்லாம் அடைய ஆசைப்படுகிறோம். கேட்கக் கூசுபவைகளைக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். வாயால் கூசாமல், பொய் சொல்கிறோம். பிறர் மீது அபாண்டமாகப் பழி சுமர்த்தத் துணிந்துவிட்டோம். பிறரை எசுகிறோம். இறைவனை வாழ்த்தவேண்டிய வாயால் மனிதர்களை வாழ்த்துகிறோம். இப்படி வாக்கினால் வரும் பாவத்தை, " உரையினால் வந்த பாவம்" என்று சம்பந்தர் தேவாரம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்திரிய வயம் இப்படி நாம் மயங்கிக் கிடப்பதாக மணிவாசகரும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து விடுபட முடியாமல் நாம் தள்ளாடுகிறோம்.மேன்மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம். மீண்டும் பல பிறவிகள் எடுப்பதற்குத் தயாராக்கிக் கொள்கிறோம்.


சிலர் கேட்கலாம். " நாம் அவ்வப்போது செய்யும் பாவங்களை முடிந்தபோது கோவிலுக்குப் போவதாலும், பரிகாரங்கள் செய்து கொள்வதாலும் களைந்து கொள்ள முடியாதா?" என்று. அப்படியே இருந்தாலும் இது பாசிக் குளம் போலத்தான். பாசியை விலக்கி விட்டு ஸ்நானம் செய்தாலும் மீண்டும் தண்ணீரைப் பாசி மூடிவிடுவது போல நம் மனத்தைப் பாவ அழுக்குகள் மூடி விடுகின்றன. குளத்தைப் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொண்டால் எவ்வளவு நல்லதோ , அதே போல் மனத்தையும் பாவ அழுக்கு மூடாமல் தினந்தோறும் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றாவது ஒரு நாள் குளத்திலிருந்து பாசியை நீக்குவதுபோலத்தான், எப்போதாவது கோவிலுக்குப் போவதோ அல்லது, பரிகாரம் செய்து கொள்வதோ ஆகும். அதனால் தான், "நித்தலும் எம்பெருமானுடைய கோயில் புக்கு" என்று பாடினார் அப்பர் சுவாமிகள்.


பாவம் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, தினமும் கோயிலுக்குப் போவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். எங்கும் வியாபித்துள்ள இறைவனை ஏமாற்ற முடியாது. "அடிமையை அளப்பர் போலும்" என்று தேவாரம் சொல்வதைக் கவனிப்போம். பக்த்ர்களது பக்குவத்தை அளந்து அதற்கேற்றபடி அருளுபவன் இறைவன் ஆதலால் வஞ்சனையாலும், பரிகாரமாகக் கடவுளை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைப்பதாலும் ஒருநாளும் தீய எண்ணம் நிறைவேறாது.


ஞானிகளைப் போல் பஞ்ச இந்திரியங்களை முழுவதும் வெல்ல நம்மால் முடியாவிட்டாலும். தெரிந்து (வேண்டுமென்றே) செய்யும் பாவங்களையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு நம்மைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் நடுவில் நாம் இருந்தால் நாமும் நல்லவர்களாக முயற்சிப்போம் அவர்களோடு சேர்ந்து நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே கேட்போம். உடல் பெற்ற பயனாக நல்ல செயல்களையே செய்யத் தொடங்குவோம். "தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று அபிராமிபட்டர் வேண்டுகிறார். ஆலயங்களைத் தரிசிப்பதும், வேள்விகள் நடக்கும் இடங்களுக்குச் செல்வதும் நம்மை நல்ல மார்க்கத்தில் செல்லத் துணை செய்யும். திருவொற்றியூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிருத்ர மகா யக்ஞத்தை தரிசித்தபோது மந்திரங்களின் அதிர்வலைகள் நம்மைப் புனிதப்படுத்துவதை உணர முடிந்தது. காஞ்சி காமகோடி பீடத்தில் ஆயிரத்து எழுநூறுகளில் பீடாதிபதியாக இருந்த மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு இருப்பதால் இதனை இவ்விடத்தில் நடத்துகிறார்கள். காஞ்சிபுரத்திலிருந்து பெரியவர்களும் வந்திருந்து,யாக சாலையையும்,அதிஷ்டானத்தையும் தரிசித்துவிட்டுச் சென்றார்கள்.


நம்முடைய மனம் ஒரு தோணி போன்றது. அதைச் செலுத்துவதற்குப் புத்தியாகிய கோலைப் பயன் படுத்துகிறோம். நம்முடைய கோபமே அதில் ஏற்றப்படும் சரக்கு. இதில் கோப மூட்டையின் பாரம் அதிகரித்தாலோ , தோணி கவிழ்ந்துவிடும் ஆபத்து உண்டு. போதாக் குறைக்கு, மன்மதனாகிய பாறை அத்தோணியைத் தாக்கினாலோ அத்தோணி நடுக கடலில் கவிழ்ந்து விடும். அப்படிப்பட்ட நிலையிலாவது உன்னை நினைக்கும் வரம் எனக்கு அருளுவாயாக என்று அப்பர் பெருமான் திருவொற்றியூரில் இறைவனை வேண்டித் துதிக்கும் பாடல் இதோ:



மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்

சினம் எனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணாது

உ(ன்)னை உ(ன்)னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.



இப்பாடலைப் பலர் நாள் தோறும் பாடி வருவது உண்டு. "துஞ்சும் போதாக வந்து துணை ஆகி அஞ்சல் என்று அருள வல்ல " ஒற்றியூர் உத்தமன் இப்படிப்பட்ட உயர்ந்த பிரார்த்தனைக்குச் செவிசாய்க்காமல் இருப்பானா?

Monday, November 7, 2011

அஞ்சேல் என்று அருள் செய்வான்

அமரர்களும் அறியாத அம்பிகைக்குச் சில சந்தர்ப்பங்களில் அச்சம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அகில அண்டங்களுக்கும் அன்னையாய் அபயம் அளிப்பவளுக்கு அஞ்சல் நாயகி என்றும் அபயாம்பிகை என்றும் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை தலத்தில் நாமங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஞானாம்பிகைக்கே அச்சம் ஏற்பட்டால் அதனை  அவளது பாகம் பிரியாத நாதனாகிய பரமேச்வரனால் மட்டுமே தீர்க்க முடியும். 

தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து அதில் தோன்றிய யானையை சிவபெருமான் மீது ஏவியபோது, தன்னை அணு அளவாக மாற்றிக்கொண்டு அந்த யானையுள் பிரவேசிக்கவே, உலகம் இருள் சூழ்ந்தது. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றும் இறைவனது முக்கண்கள் ஆதலால், அவை மறைக்கப்பட்டதால் இவ்விதம் நிகழ்ந்தது. இதனால் அச்சமடைந்த உமாதேவி அவசரமாக அருகிலிருந்த முருகனை எடுத்துத் தன் இடுப்பில் வைத்துக்கொண்டாளாம். யானையைக் கிழித்துத் தோலாகப் போர்த்திக் கொண்டு வெளியே வந்த இறைவனைத் தனது தாய்க்குக் காட்டினானாம் குமரக் கடவுள். மீண்டும் உலகம் ஒளி பெற்றது. இக்காட்சியைத் திருநாவுக்கரசர் தேவாரம், 
                                      ..... " களியானை கதறக் கையால் உரித்து எடுத்துச் சிவந்த தன் தோல் மேல் பொருந்த மூடி 
                       உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி.." 

என்று நமக்கு முன்னே காட்டுகிறது. 

கம்பை ஆற்றின் அருகில் மணலால் சிவலிங்கம் உண்டாக்கி, நியமத்துடன் வழிபட்ட காமாக்ஷி அன்னையைச் சோதிப்பதுபோலக் கம்பையில் வெள்ளம பெருகி வரவே, தான் பூஜிக்கும் மூர்த்திக்கு ஏதேனும் நேர்ந்துவிடப்போகிறதே என்று அப்பெருமானைத் அச்சத்துடன் தழுவியதும் பெருமான் வெளிப்பட்டு அருளினான் என்று காஞ்சிப் புராணம் கூறும். சுந்தரரும் இதனை, ... "வெள்ளம காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை .." என்று பாடுவார். 

தனது தேரோட்டி தடுத்தும் கேளாத தசமுகன், திருக்கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்டபோது, அம்மலை சிறிது அசையவே, பார்வதி தேவி அச்சமடைந்தாளாம். தனது பலத்தையெல்லாம் பயன்படுத்தி மலையை அரக்கன் தூக்க முற்பட்டதை அப்பர் பெருமான்,

                                                " நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை 
                         உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் .."  

எனக் காட்டுவார்.  இலங்கை வேந்தனுக்கோ இருபது தோள்களும்  பத்துச  சிரங்களும்.. அவை யாவும் பொடிப்பொடியாகும் படியாகத் தன் கால் விரலால் சற்று அழுத்தினான் இறைவன். இவ்வாறு, " பருத்த தோளும் முடியும் பொடிபட"   "தலை அஞ்சும் நான்கும் ஒன்றும் ( 5+ 4+1= 10 தலைகள்) இறுத்தான்" என்று பாடுகிறார். அரக்கனுக்கோ மலைபோன்ற கடினமான தோள்கள். ஊன்றிய இறைவனுக்கோ மலர் போன்ற மெல்லிய பாதங்கள். அதிலும் அப்பாதத்தின் விரல் நுனியாலேயே அழுத்தி, அவன் கண்களில் இரத்தம் பெருக வீழ்ந்தான் ( " கண் வழி குருதி சோரத் திருவிரல் வைத்தவர்" ) . உடனே, தனது தவற்றுக்கு வருந்தி இறைவா என்று புலம்பினானாம். கை நரம்பால் சாம வேதம் பாடி இறைவனைப் பிழை பொறுக்க வேண்டினான் அரக்கன். வேத கீதங்கள் பாடிய அவனுக்கு இரங்கி, இராவணன் என்ற நாமத்தையும் , போர் வாளையும் நீண்ட ஆயுளையும்,தேரையும் இறைவன் அருளினான் . இவ்வாறு தசமுகன் இராவணன் என்ற நாமம் பெற்றதைத் தாண்டக வேந்தரான நாவுக்கரசர் பெருமான்,
  
                         கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான் 
                           கயிலைமலை அதுதன்னைக் கருதாது ஓடி 
                         முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி 
                           முடுகுதலும் திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப
                         பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்  
                           பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் 
                         தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச் 
                           சாராதே சால னாள் போக்கினேனே.  

என்று அற்புதமாகப் பாடுகிறார். 

அப்போது அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அம்பிகையின் கலக்கதைத் தீர்க்கு முகமாக, அரக்கனை அடர்த்து, அவனுக்கு அருளிய பின்னர், அம்பிகையை நோக்கி, 

                                        " ஆயிழையே , அஞ்சல் , அஞ்சல் " என்று கூறியதாக அப்பர் தேவாரம் நயமாக எடுத்துரைக்கிறது. 
                   
இந்த நயம் மிக்க பாடல், மயிலாடுதுறைக்கு அருகில் பொன்னூர் என்று வழங்கப்படும் அன்னியூர் என்ற தலத்துப் பெருமான் மீது பாடப் பெற்றது. இதோ அப்பாடல்: 

                         வஞ்சரக்கன் கரமும் சிரத்தொடும் 
                         அஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் இறப்
                         பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை
                         அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே.  

( இதில் " அஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் " என்றது இருபது கைகளைக் குறிக்கும்.) 

நமது புலன்கள் அலமந்து அறிவு அழிந்திட்ட போது அஞ்சேல் என்று அருளுமாறு இந்த ஆதி தம்பதியர்களை ,"உள்ளத்து உள்கி உகந்து" வேண்டுவோமாக.