Sunday, May 8, 2016

முத்தை வென்ற முறுவலாள்

பாகம் பெண் உருவாய் நின்ற கோலத்தைத் தனது தேவாரத் திருப்பதிகங்களில் ஞானசம்பந்தர் அனேக இடங்களில் போற்றிப் பாடியுள்ளார். அவ்வாறு பாடுகையில் அம்பிகையை அழகிய நாமங்களால் குறிப்பது நாம் அறிந்து மகிழத்தக்கது. " மலைச் செல்வி  பிரியா மேனி"  உடைய எம்பெருமானது பிராட்டியை, "  வேயுறு  தோளி " ,  " பந்து சேர் விரலாள்" , " காவியம்கண் மடவாள்" , " வாள் நுதல் மான் விழி மங்கை" , " பெண்ணின் நல்லாள்" , " வண்டார் குழல்  அரிவை "  " அங்கயற் கண்ணி" போன்ற அருமையான  நாமங்களால் குறிப்பிடுகிறார் அம்பிகையால் சிவ ஞானப்  பால் அருளப்பெற்ற சீகாழிப் பிள்ளையார் .

ஞானப்பால் வழங்கிய அம்பிகையின் மதி முகத்தைப் பார்த்துப் பரவசப்பட்டதால் அவளது பவளத் திருவாய் மலர்ந்து தன்னையே அருட்கண்ணால் நோக்கிப்  புன்னகை செய்ததையும் எண்ணி எண்ணி மகிழ்ந்திருப்பார் அல்லவா? அவ்வாறு புன்னகை செய்தபோது தோன்றிய அம்பிகையின் பற்களை முத்துக்களோடு உவமித்தால் ஓரளவு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது. அவளோ முழுதும் அழகிய பிராட்டி. அபிராமவல்லி என்றும் சர்வாங்க சுந்தரி என்றும் சொல்கிறோம் . அவள் திருவாய் மலர்ந்தாலோ  தேனைக் காட்டிலும் இனிமையான, மதுரமான சொற்கள் வெளிப்படுகின்றன. ( " தேனை வென்ற மொழியாள் ஒரு பாகம்.." - சம். தேவா.சீகாழி)

ஞானப்பாலூட்டிய ஞானாம்பிகை முறுவலித்தால் அவளது பற்கள் முத்தைப் போன்று ஒளி வீசுகின்றன. ( முத்திலங்கு முறுவல் உமை.." -திருக்கருகாவூர்/ சம்.தேவா.) சுவாமியை முத்தாகவும்,மணியாகவும் ,வயிரத் தூணாகவும் , மாணிக்கமாகவும் போற்றுவதுண்டு.                    ( " முத்தினை மாமணி தன்னை வயிரத்தை..." -சுந். தேவா. திருவாரூர்).   சம்பந்தரும், " முத்தினை முழு வயிரத் திரள் மாணிக்கத் தொத்தினை..." என்று திரு வெண்ணியூரில் அருளியுள்ளார்.
ஆனால் இந்த நவமணிகளும் உமையொருபாகனால் தோற்றுவிக்கப்பட்டவை என்னும்போது அவற்றை இறைவனுக்கோ அல்லது இறைவிக்கோ சமமான  உவமையாகக் கூறுவதைக் காட்டிலும்  அவற்றை விட உயர்ந்ததாகப் போற்ற  எண்ணிய திருஞானசம்பந்தப் பெருமான்,        " முத்தை வென்ற முறுவலாள் " என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.

முத்தை அணிந்தவன் என்றோ அணிந்தவள் என்றோ  வருணனைகள் வருவதுண்டு. பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளிய போது சம்பந்தப்பெருமானைப் பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியும் அமைச்சரான குலச்சிறையாரும்  வரவேற்கிறார்கள்.  முத்தாலான மாலையும்,திருநீறும் சந்தனமும் அணிந்த மார்பினள் என்று அரசியாரைப் போற்றுவதை,

" முத்தின் தாழ் வடமும் சந்தனக் குழம்பும் நீறும் தன்  மார்பினில்  முயங்கப் பத்தியார்கின்ற  பாண்டிமாதேவி.."  எனப் பாடுவதால் அறியலாம்.

முத்தை வென்ற பற்களை உடைய உமாதேவியைப் பாகமாக் கொண்டவன் என்று பெருமானைத் தேவர்கள் தோத்திரம் செய்கிறார்கள். அவனோ யாவர்க்கும் அரியவன் . எனவே "அரியாய் " என்று போற்றுகிறார்கள். ஆனால்  பக்தர்களுக்கு எளியவனாகிய அப்பரம்பொருள் , பக்தி செய் அடியரைப்  பரம்பரத்து உய்ப்பவன். அவர்களால் பரம் எனப் பேணப் படுபவன். இப்படி இருக்கும்போது பொய்யான நூல்களைக் கொண்டு பெருமானைச் சமணர்களும் புத்தர்களும் தூற்றுவது விசித்திரமாக இருக்கிறது என்கிறார் சம்பந்தர். இதே கருத்தைத் திருவாவடுதுறையிலும், " புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்  பத்தர்கட்கு  அருள் செய்து பயின்றவனே " எனப் பாடுகிறார்.

விழுப்புரத்திற்கு அருகிலுள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்திலுள்ள ஒரு பாடலின் கருத்தையே இங்கு சிந்திக்கத் திருவருள் கூட்டியது. இப்போது அப்பாடல் முழுதையும் காண்போம்:

"புத்தர் புன்சமண் ஆதர் பொய்ம் மொழி

நூல் பிடித்து அலர்  தூற்ற; நின்னடி
                                                        
பத்தர் பேண நின்ற பரமாய பான்மையது என்

முத்தை வென்ற முறுவலாள் உமை

பங்கன் என்று இமையோர் பரவிடும்

அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே "

என்பது ஆமாத்தூர் மேவிய முத்தாம்பிகை உடனாய அபிராமேசுவரர் மீது பாடியருளிய  அவ்வினிய பாடல்.   

Sunday, February 14, 2016

மாசு நீக்கும் மகா மகம்

மகாமகத் திருக்குளம் 
புண்ணிய தீர்த்தங்களிலும் ,நதிகளிலும், கடலிலும் நீராடுவது புண்ணியச் செயலாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. புண்ணிய மூர்த்தி,புண்ணியத் தலம் , புண்ணிய தீர்த்தம் ஆகிய மூன்றையும்  பிறவி ஈடேறுவதற்காக  தீர்த்த யாத்திரை செய்பவர்கள் அத்தியாவசியமாகக் கருதுவர். காசி- ராமேசுவர யாத்திரை போன்றவை இதில் அடங்கும். புண்ணிய நதிகள் சங்கமம் ஆவதால் கடல் நீராடுதலை விசேஷ நாட்களில் மேற்கொள்வர். மகோதய புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வதும்,பித்ருக்களை வழிபடுவதும் மிகுந்த பலன்களை அளிக்கும்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மாத மகம் கூடிய நன்னாளில் மகா மக விழாவாகக் கொண்டாடப்படுவது எத்தனையோ நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. நதி தேவதைகளும் தங்களிடம் மக்கள் நீராடுவதால் ஏற்பட்ட பாவங்கள்  தீருவதற்காக  இந்த நாளில் கும்பகோணத்திற்கு வந்து இறைவனருளால் புனிதம் பெற்றதாகப் தல புராணம் கூறும். மகா மகக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் இந்நதி தேவதைகளுக்கென்று தனி சன்னதி உள்ளது. எனவே அன்றைய தினத்தில் கங்கை ,யமுனை போன்ற புனித நதிகள் இத் திருக்குளத்தில் வந்தடைவதால் அது மேலும் புனிதம் பெறுகிறது.

..."  தாவி முதல் காவிரி நல்  யமுனை  கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ் குடந்தை .."
என்பது தேவாரம்.

பல நேரங்களில் புனித நீராடுவதன் நோக்கத்தை நாம் மறந்து விடுகிறோம். அது உடல் அழுக்கைக் களைவதற்காக மேற்கொள்வது அல்ல. உள்ளத்து அழுக்கு நீங்குவதே அதன் தனிச் சிறப்பு என்பதை நீராடுபவர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நான் மகாமகத்திற்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் அப்படிச் சென்றதால் ஏற்பட்ட ஆன்மலாப அனுபவத்தையே ஒவ்வொருவரும் சிந்தித்து மகிழ வேண்டும். நாம் அங்கு செல்வது கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்கோ, கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கோ நிச்சயமாக இல்லை.

ஒவ்வொரு நாளும் பாசிக் குளம் போல மீண்டும் மீண்டும் அழுக்குப் படியும் மனம் நமக்கு உண்டு. அப்பாசியை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகற்றினால் போதாது. அன்றாடம் மேற்கொள்ளும் சிவ பூஜை,சிவ சிந்தனை ஆகியவை அவ்வப்போது மனத்தைத் தூய்மைப்  படுத்தி விடும். அப்படியானால் மகா மகம் எந்தவகையில் தூய்மை செய்யும் எனக் கேட்கலாம். அது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேகம் போன்றது. மனமானது  மேன் மேலும் தூய்மை ஆகி இறைவன் அமரும் பெருங்கோயிலாக ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனுதினமும் இறைவனை எண்ணாதும்,மலரிட்டு வணங்காமலும் ஈசன் எங்கும் நிறைந்துள்ள அருமையை உணராமலும் இருந்து விட்டு கங்கை,காவிரி போன்ற நதிகளில் நீராடுவதால் ஏற்படப்போகும் பயன் தான் என்ன  என்று கேட்கிறார் திருநாவுக்கரசர்

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரித் துறை ஆடில் என்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

இதனால்  எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசனை  நாள்தோறும் நினையாமலும்,வழிபடாமலும் நாட்களைக் கழித்து விட்டு, ஏனையோர் சொன்னார்கள், செய்தார்கள் என்பதற்காகப் புனித நீர் ஆடி விட்டு மீண்டும் பழையபடி தெய்வ பக்தி இல்லாமலே காலம் தள்ளுபவர்களுக்கு என்ன சொல்வது?

கும்பேசப்பெருமானைப் பாடும்போது நாவுக்கரசர் அருளிய நற்செய்தி ஒன்றை நாம் இங்கு நினைவு கொள்ளலாம்:

"சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின் ..."
என்பதே அந்த நல்லுபதேசம்.

காசிக்குப் போனால் நமக்குப் பிடித்த காய் கறிகளில் ஒன்றை நீக்க ஆரம்பிக்கும்போது, குடந்தைக்கு மகா மக நீராடச் சென்றால் மன  அழுக்கை நீக்கி நற்குணங்களைப் பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்தான் தீர்த்தமாடியது அர்த்தமுள்ளதாகிறது. அப்போதுதான் அந்த உண்மை இறை அருளால் புரிய வரும்.

Saturday, January 16, 2016

நம்மை ஆளும் பசுபதி

பசு என்ற வடமொழிச் சொல் பொதுச் சொல்லாக மனிதர்களையும் பிராணிகளையும் குறிப்பது. எல்லா உயிர்களையும் பசுக்களாகவும் சிவபெருமானைப் பதியாகவும் கூறுவது வழக்கம். ஆகவே," பசூனாம் பதிம்" என்று இறைவன் புகழப்படுகிறான்.  " அம்பிகாபதயே, உமாபதயே , பசுபதயே" என்று அவனைத் துதிக்கிறோம். அப்படி அப்பெயரிட்டு துதிக்கச் சொல்லித் தருவது வேதம். நான்கு வேதங்களுக்கும் நடுவிலுள்ள ஸ்ரீ ருத்ர மகாமந்திரத்தில் பஞ்சாக்ஷரம் வருகிறது. அதே அனுவாகத்தில் " நம: சங்காய ச பசுபதயே ச "  என்று வருகிறது. ஆகவேதான் சுவாமிக்குப் பல ஊர்களில் பசுபதீசுவரர் என்று பெயர் இருக்கக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக , ஆவூர், கரூர், திருக்கொண்டீசுவரம், பந்தநல்லூர் ஆகிய தலங்களைக் குறிப்பிடலாம். கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பசுபதி கோயில் என்ற ஊரே இருக்கிறது.

பசு என்ற சொல் விசேஷமாகப் பசு மாட்டைக் குறிப்பதாக இருக்கிறது. இதற்கு வடமொழியில் கோ என்ற மற்றொரு சொல்லும் உண்டு. கோகுலம்,கோகுலம்,கோவிந்தன் ஆகியவை அதிலிருந்து வந்தவை தான். அதை அப்படியே தாங்கி நிற்கும் ஊர்ப் பெயர்களும் உண்டு. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோவந்தபுத்தூரில் உள்ள சிவாலயம், தேவாரத்தில்    ,     " கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூர் " என்றே அழைக்கப்படுகிறது. தூய தமிழில் பசுவை " ஆ" என்ற ஒரே எழுத்து குறித்து விடும். வடமொழியில் கோ என்ற ஒரே  எழுத்து குறிப்பது போலத் தமிழிலும் ஆ என்ற ஒரே எழுத்து பசுவைக் குறிக்கும். ஆன்  என்ற ஈரேழுத்தாலும் குறிப்பர். கரூர் சிவாலயம் ஆனிலை என்றும் விழுப்புரத்தருகில் உள்ள சிவாலயம் ஆமாத்தூர் என்றும் வழங்கப்படுகின்றன. பசுக்கூட்டத்தை  " ஆக்கள் " என்றும் ஆநிரைகள் என்றும் கூறுவர்.. பசுக்களிளிருந்து பெருமானுக்கு அபிஷேகத் திரவியங்களாக ஆன்  ஐந்தும்  கிடைக்கின்றன.

அப்பர் தேவாரத்தில் பசுபதித் திருவிருத்தம் என்ற ஒரு பதிகமே இருக்கிறது. இதில் பாடல் தோறும் மகுடமாக "எம்மை ஆளும் பசுபதியே " என்று அமைத்துப் பாடி இருக்கிறார் அவர். அதில் வரும் ஒவ்வொரு பாடலும் பிறவித் துன்பத்திலிருந்து காக்கும்படிப் பெருமானை வேண்டுவதாக அமைவன. பசுக்களுக்கெல்லாம் பதியான பரமேசுவரனிடம் பசுபதியே என்று அவனைப் பெயரிட்டு அழைப்பதால் புகலிடம் வேறு எவரும் இல்லை என்பது உட்குறிப்பு. பிறரைத் தஞ்சம் என அடையாமல் உன் பாதமே மனம் பாவித்த அடியேனை உய்யக்கொள்வாய் என்பது இப்பதிகத்தின் திரண்ட கருத்து.

கடல் நஞ்சு எல்லா உலகங்களையும் அழிக்குமாறு வெளிப்பட்டபோது தஞ்சமென அடைந்த தேவர்களையும் மற்று எல்லா உயிர்களையும் கலங்காமல் காத்தருளி அதனை உண்டருளி நீலகண்டன் ஆன முழுமுதற்கடவுள் தான் தஞ்சம் என அடையத் தக்கவன் என்பதால், அனைவரும் உன் பாதத்தை இறைஞ்சுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களது பந்த பாசங்களை அகற்றிப்  பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையைத்  தருவாயாக என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.

" ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்  "  என்பன அவ்வரிகள்.

கஜ சம்ஹாரர் 
தவவலிமையால் இறைவனைத் துதியாமல் தாங்களே எல்லாம் சாதித்து விட முடியும் என்ற இறுமாப்புடன்  இருந்த தாருகாவத்து முனிவர்களது அறியாமையை அகற்ற வேண்டி பிக்ஷாடனக்  கோலம் பூண்டு எழுந்தருளிய  பரமன் மீது அம்முநிவர்கள் ஆபிசார வேள்வி மூலம் எழுந்த யானையை ஏவினர். தனது கைச்சூலத்தை  அந்த யானையின் மத்தகத்தின் மீது பெருமான் செலுத்தியவுடன் தன்னை ஏவிய முனிவர்கள் மீதே அந்த யானை சீறிப் பாய ஆரம்பித்தது. வேறு புகலிடம் இல்லாததால் முனிவர்கள் பெருமானையே தஞ்சம் என அடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் தந்த இறைவன் , வானளாவிய மலை போல எழுந்த அந்த யானையை உரித்துப் போர்வையாக்கிக் கொண்டான். யானையால் சற்று மறைக்கப்பட்டபோது எல்லா உலகங்களும் இருள் சூழ்ந்தன. காரணம் சூரிய சந்திரர்கள் பெருமானது திருக்கண்களாக விளங்குவதுதான். அப்போது பெருமானைக் காணாமையால் உமாதேவியே அஞ்சினாளாம். அதனைக் கண்டவுடன்  புன்னகைத்தானாம் பரமன்.          " சிரித்து அருள் செய்தார்" என்பது தேவாரம். அதன்  பின்னர் அம்முநிவர்களுக்குக் க்ருத்திவாசனான ஈசுவரன் ஞானோபதேசம் செய்தான். இவ்வாறு அடைக்கலம் என்று அடைந்தோரைக் காக்கும் காரணம் பற்றியே அப்பரும் மேற்கண்டவாறு விண்ணப்பித்தார்.

" அண்டமே அணவும் பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே"

" பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து" என்றது  மலை போல் திரண்டு வந்த யானை ஓலமிட்டுப் பிளிற அதனைப்  பிளந்து என்று  பொருள் படும்.
எம்மை என்றதால் நம் எல்லோரையும் பசுபதி ஒருவனே ஆளுபவன் என்பது தெளிவாகிறது.

சிவ நாமங்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும் நீலகண்டன்,சந்திரசேகரன், கங்காதரன்,பசுபதி போன்றவை தனித்தன்மை வாய்ந்தவை சிவபரத்துவத்தை விளக்குபவை. நிகரற்றவனாகவும் மிக்கார் எவரும் இல்லாதவனாகவும் இறைவன் விளங்குவதைப் பறை சாற்றுபவை. இந்த   நாமங்களால் துதிப்போரை என்றென்றும்  காப்பவை. ஆகவே இறைவனைச் சரணடைந்தபோது அப்பரும் பசுபதியே என்று பெருமானைப் பாடல் தோறும் அழைக்கிறார்.

 " ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப்

பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே.

Monday, January 11, 2016

துறவி வைத்தார்

நல்லூரில் அப்பர் திருவடி தீக்ஷை பெறுதல் 
" ஊனாகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வும் ஆகிப் பிற அனைத்தும் நீயாய் நின்றாய் "  என்று சிவபரம் பொருளைப் பாடுகிறார் திருநாவுக்கரசு நாயனார். அவ்வாறு " ஊன் கருவின் உள் நின்ற சோதி " யாகத் திகழ்பவன் இறைவன். இப்படிப் புலால் உடம்பில் புகுந்து நின்று கருவைத் திருத்திப் பின்னர் நல்லனவும் தீயனவும் காட்டுபவனாகவும் பெருமான் விளங்குகிறான். உயிர்களைப் படைத்து அவைகளின் வினைப்பயனுக்கேற்ப அருள் செய்து நிறைவாக முத்தியும் வழங்குகிறான்.

பிறவிகள் ஏழு என்பர். " ஏழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் " என்பது அப்பர் வாக்கு. பிறப்பே ஒரு பிணி போன்றது. உலகியல் பந்தத்தாலும் ஆசைகளாலும் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்வதால் அதைத் தீராப் பிணி  என்று கூட சொல்லலாம். இதனைப் " பவ ரோகம் " என்று வடமொழியில் கூறுவார். அந்த நோய்க்கு மருத்துவன் ஒருவன் தான். அவன் தான் வைத்தியர்களுக்கெல்லாம் பிரதம வைத்திய நாதனாகிய பரமேசுவரன்.  அவனைச் சரண் அடைந்துவிட்டால் நம்மைப் பாழ் நரகக் குழியில் விழ விடமாட்டான். சிவலோகத்தில் இருத்துவான் என்கிறார் அப்பர் பெருமான்.

அவர் நல்லூரில் அருளிய திருத்தாண்டகத்தில் ,
" உற்றுலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் "  என ஒரு பாடல் துவங்குகிறது. சிவபிரான்  உயிர்களைப் படைப்பதோடு நின்றுவிடாமல் பரம கருணையுடன் அவை கடைத்தேறும் வழிகளையும் அமைத்துத் தந்தார் என்கிறார். வழிகள் அநேகம் இருந்தாலும் மீண்டு வாரா வழி அருள்பவன்  என்றபடி மறுபடியும் உலகில் பிறவாமல் நம்மை இட்டுச் செல்லும் வழியே கதி எனப்படும். நமக்கு ஒரே கதி சிவகதி என்பதால் இவ்விதம் கூறினார்.              " உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் "  என்பது அவரது வாக்கு. கதி என்று கூறாமல் கதிகள் என்று பன்மையில் கூறினாரே என ஐயம் எழலாம். சிவகதி என்ற ஒரே கதியை அடையப் பல மார்க்கங்களை அமைத்துத் தந்தார் என்பதே அதன் உட்பொருள். தேவர்களையும் தெய்வ நான் மறைகளையும் தோற்றுவித்து வேத வேள்விகளால்    தேவர்களையும் தேவ  நாயகனாகிய தன்னையும் ஆராதிப்பதன் மூலம் சிவ கதி அடையச் செய்தார்.  
  "மற்று அமரர் கணம் வைத்தார்  அமரர் காணா  மறை வைத்தார் " என்பதால் தேவர்களுக்கும் அறிய மாட்டாத வேதங்கள் என்பது பொருள்  படும்.
தனது பிறைகள் தக்ஷ சாபத்தினால் தேய்ந்து உடற்பிணியோடு குன்றிய சந்திரனை எல்லாத் தேவர்களும் கைவிட்ட போது கயிலாய நாதனே அவனுக்கு அடைக்கலம் தந்து தனது சடை மேல் ஏற்று சந்திர சேகரன் ஆனான். எல்லா உயிர்களும் தஞ்சம் என அடைய வேண்டுவதும் போற்ற வேண்டியதும்,தியானிக்க வேண்டியதும் சிவபெருமான் ஒருவனே என்பது இதனால் அறியப்படும். "குறை மதியம் வளர வைத்தார் " என்ற அழகான வரிகள் இந்த அருட் செயலைப் புகழ்கின்றன.

காமக் குரோத,லோப மத ஆச்சர்யங்களைக் கடந்தால் ஒழிய பிறவியிலிருந்து விடுதலை பெற முடியாது. காலகாலனாகவும், காம நாசனாகவும் பெருமானே திகழ்கிறான். கோபத்தின் அடையாளமாகத் திகழ்ந்த துருவாச முனிவரும் தனது கோபம் நீங்கும்படித் திருக்களர் என்ற      தலத்தில் சிவ பூஜை செய்ததாகப் புராணம் கூறும். எனவே இக்குற்றங்கள் நீங்கும் வழியையும்  அப்பரமனே அமைத்துத் தருகிறான் என்கிறார் திருநாவுக்கரசர். "செற்ற மலி ஆர்வமொடு காம லோபம் சிறவாத நெறி வைத்தார்" என்பன அவ்வரிகள்.
" துறவி வைத்தார் " என்று அவர் கூறுவது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது துறவறம் என்ற நெறியை அமைத்துத் தந்தார் என்று தோன்றினாலும். அவ்வழிக்கான நன்நெறிகளையும் அமைத்துத் தந்தார் என்றே கொள்ளவேண்டும். விபூதி- ருத்திராக்ஷம் போன்ற  புறச் சாதனங்களை அமைத்துத் தந்ததோடல்லாமல் தானே அவற்றை  ஏற்றது தன்னிகரற்ற சிறப்பாகும். " நீறு தாங்கிய திருநுதலான்" என்று இதைத் தேவாரம் குறிப்பிடுகிறது. துறவிக்கு புறச் சாதனமும் முக்கியம். ருத்ராக்ஷம் அணியாத துறவி சைவராகவோ அல்லது அத்வைதியாகவோ இருந்து என்ன  பயன்?  உலகிற்கு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இவற்றை ஒருபோதும் கை விடலாகாது. புற வேடத்தோடு நின்றுவிடாமல் மேற்கூறியபடி காமக் குரோத,லோப மத ஆச்சர்யங்களைக் கடந்தவராகத் துறவி விளங்கவேண்டும். 

தவம் செய்தவர்கள் சென்று அடையக்கூடிய தனது திருவடிகளை அப்பர் பெருமானது முடியில் நல்லூர்ப் பெருமான் வைத்தருளினார்  என்பதால் " நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே "  என்று அத்தாண்டகப் பாடல் நிறைவு பெறுகிறது. முழுப் பாடலையும் மீண்டும் தருகிறோம்:

உற்றுலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்
உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார்
மற்று அமரர் கணம் வைத்தார்  அமரர் காணா  மறை வைத்தார்
குறை மதியம் வளர வைத்தார்
செற்ற மலி ஆர்வமொடு காம லோபம் சிறவாத நெறி வைத்தார்
துறவி வைத்தார்
 நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே
---- திருநாவுக்கரசர் தேவாரம் ( திருநல்லூர்* )

{* திருநல்லூர் என்ற தலம் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியிலுள்ள சுந்தர பெருமாள் கோயில் என்ற ஊருக்கு அண்மையில் உள்ளது.    அமர்நீதி நாயனார் அருள் பெற்ற தலம். }

Wednesday, October 14, 2015

" இது நம் இல்லம் "


மன்னாதி மன்னர்கள் கட்டிய மாளிகைகள் எல்லாம் பகைவர்களால் தரை மட்டமாக்கப்பட்டு அழிந்து போயிருக்கின்றன. எஞ்சிய சிலவும் இயற்கைச் சீற்றங்களாலும், கவனிப்பாரின்றி மரம் முளைத்துப் போயும் மறைந்து விடுகின்றன. இப்படி இருக்கும் போது நம் போன்ற சாமானியர்கள் வசிக்கும் வீடுகள் நிலைத்து நிற்குமா என்ன? அதிலும் பாமர  ஏழை கட்டிய மண் சுவரும், மேற்கூரையாக வேயப்படும்  மூங்கில்களும் ஓலைகளும் காற்றுக்கும் மழைக்கும் எப்படித் தாங்கும்? அந்த எழையும் தன்னால் முடிந்தவரை மண் சுவற்றைப் பலமாகக் கட்டியிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் இவை எம்மாத்திரம்? அப்படி இருந்தாலும் அக்குடிசைவாசி அந்த வீட்டை எனது இல்லம் என்று தானே சொல்லிக் கொள்கிறான்! அதே போலத்தான் மனித உடலும்! அந்த ஏழை கட்டிய வீட்டைப்போல எளிதாக அழியக் கூடியது.

உடலில் உள்ள எலும்புகள் அந்தக் குடிசையின்  கால்கள் போன்றவை. மாமிசத்தாலான உடலோ மண் சுவற்றுக்கு சமம். இப்படிப்பட்ட புலால் நாறும் உடம்பைத்   தோலாகிய போர்வையால்  மூடிக்கொண்டு, " இது எனது " என்று கூறிக் கொண்டு அதை அழகு படுத்திப் பார்க்கிறோம். வயது ஆக ஆக அழகும் குறைந்து, தோல் சுருங்கி, உடல் தளர ஆரம்பித்து விடுகிறது. ஏழைக் குடிசைக்காவது  வேறு ஓலை வேயலாம். வேறு மூங்கில்களைக் கொண்டு தாங்கச் செய்யலாம். ஆனால் மனித உடலாகிய வீட்டுக்கு என்ன  செய்ய முடியும்?

மனிதக் குடிலுக்கு ஒன்பது வாசல்கள் வேறு. ஐம்புலன்கள் படுத்தும் பாடோ கொஞ்சநஞ்சமல்ல. அவை நம்மைப் பெரும்பாலும் தீய வழிக்கே இழுத்துச் செல்வன. இதிலிருந்து விடுபடும் மார்க்கமோ தெரியவில்லை. " சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய " என்று திருநாவுக்கரசரும் பாடியிருக்கிறார். இப்படி ஐம்புலனாகிய சேற்றில் அழுந்தி ஒரேயடியாக மூழ்குவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

அப்படியானால் இதிலிருந்து விடுபட  வழியே இல்லையா என்று கேட்கத் தோன்றும். இருக்கிறது என்று நமக்கு அபயம் அளிக்கிறார் திருஞானசம்பந்தப்பெருமான். திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டு அருளும் தியாகேச வள்ளலைத் தொழுதால் உய்ந்து விடலாம் , அஞ்ச வேண்டாம் என்று நல்வழி காட்டுகிறார் குருநாதராகிய ஞான சம்பந்தக் குழந்தை. அப்பாடலை இங்கு சிந்திப்பதால் நாமும் உய்ந்து விடலாம்.

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம்                
புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையால் முகடு கொண்டு  

முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையில் மூழ்கிடாதே                                    
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.
                                                                                                                 --- சம்பந்தர் தேவாரம்   

Tuesday, September 29, 2015

பிறவி நோய் நீங்கும் வழி

கல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே  
விபூதி- ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள  வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், " வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது.    " உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா  நமச்சிவாயவே" என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட     உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா?

பெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா? அவனை வாழ்த்துவதற்காகவே  மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம்? இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும்  உறங்குவதும்  தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று  மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் செய்வதில்லையே! எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன  தவறு? " பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் " என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா!

தினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று  அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்? எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.

நாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, "பயிர் காட்டும் புயலாக " விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.
நமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம்  மன அமைதி இழந்து தவிக்கிறோம்.

மொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்                                   
ஒருகாலும் திருக் கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்           

 அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்               
 பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.

பிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.   

Wednesday, July 1, 2015

தோன்றும் துணையாகும் கயிலை நாயகன்

திருக்கயிலாய மலை 
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்மோடு துணையாகக்  கூடவே   இருக்கிறானா என்று சந்தேகம் வரும்போதெல்லாம் ஒரு விஷயத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கனவிலாவது நனவிலாவது நாம் வணங்கும் தெய்வத்தைக் காணும் அளவிற்கு நாம் தகுதி வாய்ந்தவர்களா   என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது நல்லது. " உரியேன் அல்லேன் உனக்கு.." என்று மாணிக்க வாசகர்  கூறியது நமக்கே பொருத்தமாக இருக்கிறது. அப்படி இருந்தும் நமக்குத் தெய்வம் எப்பொழுதும் நாம் கேட்டதை எல்லாம் அருள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. நாம் அனுதினமும் பாவங்களே செய்பவர்களாக இருந்தாலும், தன்னைச் சரண் என்று அடைந்துவிட்டால் குற்றங்களைப் பொறுத்து அருள் செய்வது தெய்வத்தால் மட்டுமே முடியும். திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி என்ற தலத்துக் கோயிலில் சுவாமிக்குச்  சார்ந்தாரைக் காத்த பெருமான் (சரணாகத ரக்ஷகர்) என்று  பெயர்.

சார்தல் என்பது ஒரு நாளோ அல்லது ஒரு குறிப்பிட்ட பலன் கருதியோ சார்தல் அல்ல. "இடையறா  அன்பு எனக்கு உன் ஊடகத்தே நின்று உருகத்தந்து அருள் " என்று திருவாசகம் துதிப்பதால் இறைவனைப் பன்னாள் இடைவிடாது அழைத்தால் ஒருநாள் வெளிப்பட்டு அருளுவான் என்பது கருத்து. அப்படியானால் நம்போன்றவர்கள் அவன் கூட இருப்பதை உணரவாவது முடியுமா என்பது அடுத்த கேள்வி. இதற்குமுன்பு சொன்ன அதே விடையைச் சற்று மாற்றிச் சொல்லி  விளங்க வைக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நமக்கு " இடையறா அன்பு " இல்லாவிட்டாலும்  அன்பாவது இருக்கிறதா என்பது மிகவும் முக்கியம். அப்படி அன்பு செய்யும்போது மனம் உருகி நியமத்துடன் அவனை எண்ணித் துதிக்கிறோமா என்பது அதைவிட முக்கியம். அந்நேரத்தில் பிற எண்ணங்கள் செயலற்றுப் போய் விடுவது சாத்தியம் ஆக வேண்டுமே!!

அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும்போது சிலருக்கு அது விளங்குவதோடு பயன்படவும் செய்யக்கூடும். எத்தனையோ மைல்கள் கடந்து வந்து விட்டு, உன் தரிசனம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் மாலையில் வடக்கு நோக்கியவாறு ஜபம் செய்து கொண்டிருந்தபோது அந்த அற்புதக் காட்சி ஆகாயத்தில் தெரிந்தது. வேகமாகச் சென்று கொண்டிருந்த மேகங்கள் நீல வானப் பின்னணியில் ஓரிடத்தில் நின்று அற்புத வடிவம் பெற்றன. படங்களில் மட்டுமே பார்த்துவிட்டு நமது வாழ்நாளிலும் இத்தரிசனம் கிடைக்குமா என்று ஏங்கச் செய்யும் கயிலாய மலையின் அற்புதக் கோலமே அது!!  மாலைக் கதிரவனின் கதிர்கள் அம்மலை (மேகத்தின்) மீது படவே வெள்ளிப் பனிமலையாக அது தோற்றம் அளித்தது. மயிர்க் கூச்செறியச் செய்த  அக்காட்சியைக் கண்டவுடன் வேறு எதையும் காணும் எண்ணம் இல்லாமல் கண்ணீர் மல்க ஜபத்தைத்  தொடர்ந்து பூர்த்தி செய்யும் வரை அக்காட்சி அங்கேயே நிலைகொண்டு இருந்தது. ஆனால் மற்ற மேகங்கள் அதனை மறைத்துவிடாமல்   சென்றது இன்னமும் பிரமிப்பை அதிகரித்தது. உடனே  சுந்தரர் தேவாரத்திலுள்ள  நொடித்தான் மலைப் பதிகத்தை வாய் முணு முணுத்தது. பதிகம் முடிந்த அதே நேரத்தில் எங்கிருந்தோ வந்த கரு மேகங்கள் கயிலாயக் காட்சியை மறைத்து விட்டன.

ஆனால் அடுத்த நிமிடமே, வானில் அக்காட்சி தெரிந்த இடத்திற்குச் சற்றுக் கீழே மட்டும் மற்றும் ஓர் அற்புதம் தெரிந்தது. சுற்றிலும் கரு மேகக் குவியல்களோடு நடுவில் மட்டும் தெரிந்த  நீல வானம் ஒரு பரந்த ஏரி  போலக் காட்சி அளித்தது. கண்களை நம்பவே முடியவில்லை. சக்தி வடிவான மானச ரோவர்  ஏரி எத்தனை அழகாகத் தோன்றியது என்பதை வருணிக்க வார்த்தைகளே இல்லை. அரை நிமிஷ நேரத்தில் இக்காட்சியும் மறைந்து வேகமாக வந்த  கருமேகங்கள் வானில் நீல நிறமே இல்லாதபடி மழைக்கு ஆயத்தம் செய்து விட்டன. "தவமே புரிந்திலன் தண்  மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்  அவமே பிறந்த அருவினையேன் " என்று மணிவாசகர் கூறியது  நமக்கு மிகவும்  பொருத்தமாக இருந்தும், இறைவன் இவ்வாறு  கருணை செய்வதைக் காணும் போது மனத்தை நெகிழச் செய்தது.
"கருவாகி ஓடு(ம்) முகிலே* போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி"
(*  முகில்= மேகம்) என்ற திரு நாவுக்கரசரது வாக்கு எத்தனை சத்தியமானது என்று அப்போது திருவருள் மூலமாக உணர முடிந்தது.

அப்போது நினைவுக்கு வந்த  சுந்தரர் தேவாரப் பாடல் இதோ:

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து  என்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

எங்கே சென்றால் என்ன ?  சிவ சிந்தனை நீங்காதிருந்தால்  பெருமான் கூடவே இருப்பதை என்றாவது நமக்கு உணர்த்துவான். அதற்கு நாம் பாத்திரர்களாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகச்  சிவனருள் நமக்குக் கூட வேண்டும். நாம் பெற்ற இறை அனுபவம் பிறரும் பெற வேண்டும். அப்போதுதான் நமக்கு இறைவன் தோன்றாத்துணை மட்டுமல்ல , தோன்றும் துணையாகவும் நம்முடன் இருந்து அருள் புரிகிறான் என்பது புரிய வரும்.