Monday, August 24, 2020

ஊரும் பேரும்


 விதையிலிருந்து செடி முளைத்ததா அல்லது செடியிலிருந்து விதை முளைத்ததா என்பதுபோன்ற  சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊரின் பெயரையே தமது பெயராகக் கொண்டவர்கள் இன்றும் பலர் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இப்போதோ அது தலைகீழாக மாறி, நாட்டுத் தலைவர்கள்,கட்சித் தலைவர்கள் முதலியோரது  பெயர்களைக் கொண்டு ஊர்ப் பெயர்களும்,தெருப் பெயர்களும் சூட்டப்படுவதைப்  பார்க்கிறோம். முன்பெல்லாம் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருந்தன. அக்காரணம் தோன்றுவதற்கு முன்பு என்ன பெயரால் அப்பகுதி வழங்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது. 

உதாரணங்களாகச் சிலவற்றைப்பார்ப்போம். உமையம்மை மயிலுருவில் பூஜை செய்த ஊர்களாக மயிலாப்பூர்,மயிலாடுதுறை ஆகிய ஊர்களின் பெயர்கள்  வழங்கப்படுகின்றன. அவ்வாறு பூஜித்தது எந்த யுகத்திலோ  ---, யாமறியோம். அதற்கு முன்னர் அவை எப்பெயர்களால் வழங்கப்பட்டிருக்கக் கூடும் என்பது நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. 

தமிழில் அமைந்துள்ள தலபுராணங்களில் தலச் சிறப்பு என்ற பகுதி இருப்பது சமய அன்பர்கள் அறிந்ததே. அப்பகுதியில் தலத்தின் பெயர்களும் அவற்றின் பெயர்க்காரணங்களும் , அப்பெயர்களை உச்சரிப்பதால் பெறும் பயன்களும், அங்கு செய்யப்படும் தானச்  சிறப்பும், வசிப்போர் பெறும் பேறும் விரித்துக் கூறப்பெறும். 

மதுரை மாநகருக்குஉரிய பலபெயர்களுள் ஆலவாய் என்பதும் ஒன்று. திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களாவன மதுரைக் காண்டம்,கூடற்  காண்டம்,ஆலவாய்க் காண்டம் என்பதாம். அவற்றுள் , மதுரைக் காண்டத்திலுள்ள தலச் சிறப்பில் வரும் பாடல் ஒன்றில் , திருவாலவாய் என்ற பெயரைச் சொல்லக் கேட்டால் அறம் பெறுவர் என்றும்,அப்பெயரை நினைத்த மாத்திரத்தில் செல்வம் பெறுவர் என்றும், கூறப்பட்டுள்ளது:

" திருவாலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர் 

செல்வம் ஓங்கும் 

திருவாலவாய் என்று நினைத்தவரே  பொருள் அடைவர் "

என்பது அவ்வினிய பகுதி. 

திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனது அரசவைக்குச் சென்றபோது, மன்னன் அவரிடம் எந்த ஊரிலிருந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்டவுடன், தனது ஊரின் பன்னிரண்டு பெயர்களையும் அமைத்துப் பதிகங்கள் பாடினார் என்று பெரிய புராணம் காட்டும். எடுத்துக்காட்டாக அவற்றுள் ஒரு பதிகத்தின் முதற்பாடலைக் காண்போம்: 

" பிரமனூர்(1) வேணுபுரம்(2)புகலி(3)வெங்குரு(4)ப் பெருநீர்த் தோணி 

புர(5) மன்னு பூந்தராய் (6) பொன்னஞ் சிரபுரம் (7) புறவம்(8) சண்பை(9)

அரன் மன்னு  தண் காழி(10) கொச்சைவயம் (11) உள்ளிட்டங் காதியாய 

பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமல(12) நாம் பரவுமூரே"  

இப்பாடலில் பன்னிரண்டு பெயர்களும் வருவது போலவே அப்பதிகத்தின் பிற பாடல்களிலும் அப்பெயர்கள் சக்கரம் போன்று சுழன்று வருவது சிந்தையை மகிழ்விப்பதாம். இவை யாவும் காரணப் பெயர்களே. 

இதே போன்று ஊர்களைக் கொண்டே அமைக்கப்பெற்றுள்ள முழுப் பதிகங்களைத் தேவார மூவரும் அருளிச் செய்துள்ளனர். 

தலப்பெயர்களை நாவால் உரைப்போர்க்குக் கிட்டும் பலன்களை நாவுக்கரசர் அருளியவாறு காண்போம்:

 " ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து 

அமர் உலகம் ஆளலாமே "  

" வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் 

வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே." 

நம் இல்லங்களிலும் ஊர்ப்பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுகிறோம். சிதம்பரம் , அண்ணாமலை, பழநி, செந்தில்  திருப்பதி ஆகியவை சில எடுத்துக்காட்டுக்கள்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது தாய் வழிப் பாட்டியார் சொல்லித் தந்ததை நினைவு கூறுகிறேன். இரவு படுக்கப்போகும் முன்பு சில நாமாக்களைச் சொல்லவேண்டும் என்பதே அது. 

அதாவது," சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்" என்பது.

அதனை ஒரு உபதேசமாகக் கருதி இன்றளவும் சொல்லி வருகிறேன். 

இவ்வாறு தலங்களின் பெயர்களைச் சொல்வதில் இன்னும் சில தலங்களையும் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களாவது உறங்கச் செல்லும் முன்பு தியானிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாயிற்று.  அந்த எண்ணத்தின்  விளைவே  பின் வரும் சேர்க்கை. இருமொழிப் பயிற்சி இல்லாதவனின் அறியாமையைப் பொறுத்து பிழை இருப்பின் திருத்தி அருளுமாறு பெரியோர்களை வேண்டுகிறேன்  

                                                          ஜோதிர்மய ஸ்தோத்ரம் 

                                                                     சிவபாதசேகரன் 

" சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்"   

கும்பேசம் தாருகேசம் வீதி விடங்கம் ஜோதிர்மயம் 

விச்வேசம் ராமேசம் அமரேசம் ஜோதிர்மயம் 

ஹாலாஸ்யம் கச்சபேசம் பைரவேசம் ஜோதிர்மயம் 

கடம்பவனேசம் கபாலிம் பஞ்சநதம் ஜோதிர்மயம் 

மல்லிகார்ஜுனம் மதங்கேசம் மாத்ருபூதம் ஜோதிர்மயம் 

நாகேசம் நடனபுரீசம் முக்தீசம் ஜோதிர்மயம் 

பல்லவனீசம் பார்வதீசம் பக்ஷிதீர்த்தம் ஜோதிர்மயம் 

ஜடாயுபுரீசம் ஜம்புகேசம் ஜகதீசம் ஜோதிர்மயம் 

ஸ்வயம்புநாதம் ஸ்வயம்ப்ரகாசம் சுந்தரேசம் ஜோதிர்மயம் 

வதான்யேசம் வைத்யநாதம் வடாரண்யம் ஜோதிர்மயம் 

ஒருமுறை காஞ்சிப் பெரியவர்களிடம் துவாதச லிங்க க்ஷேத்ரங்களை மட்டுமே ஜோதிர்லிங்கம் என்கிறோமே என்று கேட்டதற்கு , " எல்லா லிங்க மூர்த்திகளுமே ஜோதிர்லிங்கங்களாகக் கருதப் பட வேண்டியவைகளே . ஏனென்றால் பிரம விஷ்ணுக்களிடையே அக்னி வடிவில் தோன்றி லிங்கோத்பவம் ஆனதால் அம்மூர்த்தம் ஜோதிர் லிங்கமாக எல்லா ஸ்தலங்களிலும் மூலஸ்தானமாக விளங்குகிறது என்று விளக்கம் தந்தார்கள். 

 



  


Saturday, August 15, 2020

பசுபதி யதன் மிசை வரு பசுபதி


                                                                                                                                                                    

                                                                 சிவபாதசேகரன் 


 பரமேசுவரனின் எத்தனையோ நாமங்களில் பசுபதி என்பதும் ஒன்றாகும். வேதத்தின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்ரீ ருத்ரத்தில் பசுபதயே என்ற மந்த்ரம் வருகிறது. கன  பாராயணம் செய்யும்போது ,"பசுபதயே ச ச பசுபதயே"  என்று வரும்போது மெய்  சிலிர்க்கும். கரூர், ஆவூர் , திருக்கொண்டீசுவரம் ஆகிய இடங்களில் மூலவருக்குப் பசுபதீசுவரர் என்ற பெயர் வழங்கப்படுவதைக் காணலாம். ஆவூர்க் கோயிலைப் பசுபதீச்சரம் என்று குறிப்பிடுகிறார் திரு ஞான சம்பந்தப் பெருமான். " ஆவூர்ப் பசுபதீச்சரம் பாடு நாவே " என்பது அவரது வாக்கு .

உயிர்கள் யாவும் பசுக்கள் எனக் குறிக்கப்படுவன. அவ்வுயிர்கள் யாவற்றையும் படைத்தும்,காத்தும்,அருளியும், தன்னிடமிருந்து மறைத்தும்,நிறைவாக இளைப்பாற்றியும் ஐந்தொழில்களைச் செய்து வருவதால் சிவபெருமான் அவற்றிற்குப் பதியாக ( தலைவனாக)க்  கொள்ளப்படுகிறான் .இதன் காரணமாகவே பெருமானுக்குப் பசுபதி என்ற பெயர் ஏற்பட்டது. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத்திலும் அப்பெயரே நிலவுகிறது. பசுபதித் திருவிருத்தம் என்ற பெயரில் ஒரு திருப்பதிகமே அருளிச் செய்துள்ளார் திருநாவுக்கரசு நாயனார்.  

உலகத்துயிர்களுக்குப் பொதுப் பெயராக பசு என்று வழங்கப்பட்டாலும் சிறப்பாக அது அனைத்துத் தேவர்களும் தங்கி அருள் புரியும் பசுவுக்கு மட்டும் உரியதாக உள்ளது. சிவபிரான் விரும்பி ஏற்கும்  பால் ,தயிர் , நெய், கோமயம், கோசலம் ஆகியவற்றைத் தருவதால் அப்பிராணியை மட்டுமே பசு என்று அழைக்கிறோம். " ஆன் ஐந்தும் ஆடினான் காண் " என்கிறது தேவாரம். பசு நெய்யை  ஏற்கும் பிரான் ஆவதால் நெய்யாடியப்பர் என்ற திரு நாமம் திருநெய்த்தானம் என்ற தலத்தில் வழங்கப்படுகிறது. சண்டேசுவரப் பெருமானால் ஆநிரைகள் பாலை அபிஷேகமாக ஏற்ற பெருமானுக்குப் பால் உகந்த நாதர் என்ற திருநாமம் திரு ஆப்பாடி என்ற தலத்தில் உள்ளது. பசு வடிவம் ஏற்று அம்பிகையே பாலால் அபிஷேகம் செய்த பல தலங்கள் வரிசையில் தனது கால் குளம்பு ( கோகுரம்) இடறியதால் பெருமான் வெளிப்பட்டு அருளிய திருக்கோழம்பமும் அவ்வடிவம் நீங்கப்பெற்ற ஆவடுதுறையும் குறிப்பிடத்தக்கவை. அங்கெல்லாம் முறையே கோகுரேசுவரர் என்றும், கோ முக்தீசுவரர் என்றும் என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. 

இவ்வாறு இருக்கும்போது அவன் ரிஷபாரூடனாக  வெள்ளை விடை ( ரிஷபம்) ஏறி வருகிறான் இதையே சம்பந்தரும் தனது முதல் பதிகத்தில் " விடை ஏறி " என்று பாடுகின்றார். காளையும் பசு வர்க்கத்தைச் சேர்ந்தது. பசுக்களை மேய்க்கும் போது பாலகனான விசார சருமர் ( இவரே பின்னர் சண்டீசர் ஆனார்) ஆனிரைகளைக் கண்டவுடன், அவற்றை " விடைதேவர் குலம் " என்றே கருதினார் என்று பெரிய புராணம் கூறும்.  பசுவின் பெருமையைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் , 

"தங்கும் அகில யோனிகட்கும் 

மேலாம் பெருமைத் தகைமையன 

பொங்கு புனித தீர்த்தங்கள் 

எல்லாம் என்றும் பொருந்துவன 

துங்க அமரர் திருமுனிவர் 

கணங்கள் சூழ்ந்து பிரியாத 

அங்கம் அனைத்தும் தம்முடைய 

அல்லவோ நல் ஆனினங்கள் " 

என்று விளக்கமாக அருளிச் செய்துள்ளார். 

ஒரே வரியில் ரிஷபத்தையும் பசுவையும் நினைவு படுத்தும் ஒரு அரிய சொல்லாட்சியைத் தேவாரப்  பனுவல்கள் காட்டுவது , மிக்க நயம் விளைவிக்குமாறும் , சிந்தைக்கு விருந்தாகவும்  இருப்பதைக் காணலாம்.

திருமறைக்காட்டில் தங்கிய காலத்தில் ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் பலவற்றுள், " சிலைதனை" எனத்  துவங்கும் பதிகமும் ஒன்றாகும். அதில் ஒரு பாடலில் பெருமானை, " உயர் பசுபதியதன் மிசை வரு பசுபதி" எனக் குறிப்பிடுவது நயம் மிக்க பகுதியாம்.  

உலகியலில் நாம் பதி என்றால் பெண்ணின் மணாளனைக் குறிப்பதாகவே பொருள் கொள்கிறோம். தெய்வங்களையும் உமாபதி, லக்ஷ்மி பதி என்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே  இங்குப்  பசுவின் பதியாவது காளை ஆவதைக் கருத வேண்டும். தெய்வத்தன்மை வாய்ந்த பசுவின் மணாளன் தெய்வமே பவனி வரும் காளையின் பதியாதல் காண்க. ஆகவேதான் இப்பாடலில் " பசுபதி அதன் மிசை வரு பசுபதி " என்று மிக அற்புதமாகக் காட்டுவார் நற்றமிழ் ஞானசம்பந்தர்   

இப்பொழுது முழுப் பாடலையும் நோக்குவோம்;

கதி மிகு களிறது  பிளிறிட 

உரிசெய்த அதிகுணன் உயர் பசு 

பதி அதன்மிசை வரு பசுபதி     

பலகலையவை முறைமுறை உணர் 

விதியறி தருநெறி யமர்முனி 

கணமொடு மிகுதவ முயல்தரும் 

அதிநிபுணர்கள் வழிபட வளர் 

மறைவனம் அமர்தரு பரமனே. 

யானையை உரித்துப் போர்த்தவனும்,விடையின் மேல் எழுந்தருளும் பசுபதியும் அதிகுணனும் ஆகிய பரமனின் இடமாவது, பல்வேறு கலைகளை முறையாகக்கற்றவர்களும், விதி வழி நின்று சிவநெறிப்படித்  தவம் செய்யும் முனிவர்களும் நிறைந்து விளங்கும் திருமறைக்காடு ஆகும் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும். சகல புவனாதிபதியான பசுபதியைப் போற்றும் அருமையான பாடல் இது. 



   

Sunday, July 19, 2020

சடைமுடி அழகன்



திருஞான சம்பந்தர் 
எண் சாண் உடலுக்கு சிரசே ( தலையே ) பிரதானம் என்பார்கள். மனித உடலில் பல பாகங்கள் இருந்தபோதிலும் ஐம்புலன்களான மெய்  வாய்,கண் ,மூக்கு,  செவி ஆகியவற்றுள் மெய்யைச் சேர்க்காவிடில் எஞ்சிய நான்கும் தலையைச் சேர்ந்தவைகளே. அதனால் அங்கமாலை பாட வந்த அப்பர் பெருமானும், எடுத்த எடுப்பிலேயே, " தலையே நீ வணங்காய் " எனப் பாடி அருளுகின்றார். பின்னர் அதன் பாகங்களாக, கண்,செவி,மூக்கு,வாய் என ஒவ்வொன்றாகக் குறிப்பிடுகிறார். மெய் என்பதை , ஆக்கை என்கிறார் அவர். இவ்வாறு மனித உடலைக் கேசாதி பாதமாகக் குறிப்பிடுவது ஒரு மரபு போல  தெய்வங்களைப் பாதாதி கேசமாகவும் பாடுவதும்  மரபு. கண்கள்இரண்டும்  பெருமான் கழல்களைக் கண்டு களிப்பதற்காகவே ஏற்பட்டவை என்பது திருவாசகம் நமக்கு காட்டும் நல்லுபதேசம்.

ஒரு முகம் அழகாகத் தோற்றம் அளிக்க வேண்டுமானால், கண்களும், மூக்கும் வாயும் அழகாக அமையப்பெற்று இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அது மட்டும் போதுமா? அழகிய முடி ஆடவர்க்கும், நீண்ட கருங்  கூந்தல் பெண்டிர்க்கும் இருந்தால் அழகுக்கு அழகைச் சேர்க்கும் என்பதில் மாற்றுக்  கருத்து இருக்க முடியுமா ? 

சிவபெருமான் ஞான மயமானவன். அந்த ஞான பரமேசுவரனுக்கு ஞானத்தின் அடையாளமாக இருப்பது சடை முடி ஆகும். சிவ ஞானப் பாலமுதம் பருகப்பெற்றதால் சீர்காழிப் பிள்ளையார் " திருஞான சம்பந்தர் ஆயினார் " என்று பெரிய புராணம் கூறுகிறது. தான் பெற்ற  ஞானத்தை உலகோருக்கு அறிவிக்க வேண்டிய கருத்துடன் ஞானத்தின் அடையாளமான திருச் சடையைத்  தனது பாடல்களில் ஏராளமான இடங்களில் அழகுற  எடுத்துரைக்கக் காணலாம். அவற்றுள் ஒரு சிலவற்றையேனும் இங்கு நோக்கி மகிழ்வோமாக.

அந்த ஞான மயமான சடைக்குத்தான் அக்குழந்தையின்  வாக்கில் எத்தனை வருணனைகள் ! நீண்ட சடையாதலால் " நீள்  சடை " என்றும், நிமிர்ந்து விளங்குவதால் " நிமிர் சடை "  என்றும், பின்னால் தொங்கவிடப்படுவதால்,     " தாழ் சடை " என்றும், செந்நிறம் கொண்டு விளங்குவதால், " செஞ்சடை " என்றும் , இயல்பாகவே மலர்களைப்போல் வாசனை கொண்டு விளங்குவதால் ( " வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே"- அப்பர் தேவாரம்)             " கமழ் சடை " என்றும் மென்மையாக இருப்பதால் " மென் சடை " என்றும் அழகு தமிழால் பாடுகின்றார்.

இனி, அச் சடையில் குடி கொண்டு இருப்பவை யாவை என்னுமிடத்து, முதலாவதாக நினைவுக்கு வருவது இளம்பிறை என்பதால் ( " சடையும் பிறையும்" - சம். தேவா- திருக்கோலக்கா) சூரியனின் ஒளியால் ஒளி பெறும் சந்திரன், சுயம்பிரகாசனாகிய சந்திர சேகரனிடம் தஞ்சம் அடைந்தவுடன் மூன்றாம் பிறைச் சந்திரனாகத் தங்குகிறான்.  அப்பரும் இதனை, " வார் சடை மேல் திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே" எனப் பாடுவார். அச்  சடையில் தங்கியதால் சந்திரனுக்கும் ஞானம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் இறைவனுக்குச்  சந்திரனின் வரவால்  அழகு கூடுவதில்லை. மாறாகப் " பித்தா பிறை சூடி " என்று அருளாளர் வாக்கில் இறைவனைப் பாடும்போது சந்திரனின்  பெயரும் அதில் நிலைக்கும் பேறு கிட்டி விடுகிறது.

அடுத்தபடியாக நமது நினைவில் திகழ்வது கங்கை அப்புனிதமான சடையில் இடம் கொண்டிருப்பது.ஆகும்.  " கங்கை வார் சடையாய் " என்று முழங்குகின்றன திருமுறைகள், கங்காதராய நம: என்ற அர்ச்சனை ஒலியும் கேட்கிறது. பகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகத்தில் பாயுமாறு வேண்டி நிற்க, கங்கை ஆயிரம் முகத்தாளாகிக் கடுமையான வேகத்துடன் பாய்தலால் மண்ணுலகம் மாய்ந்து விடும் அபாயம் ஏற்படவே , ஈசன் தனது சடையை விரித்து அதில் கங்கையை அடக்கியதாக வரலாறு. அதனை சம்பந்தப்பெருமான் கூறும் அழகைப் பாருங்கள். அக்கடுமையான வெள்ளம் சடையில் பாய்ந்த போதும், அதனால்  அச்சடை முடியை அசைக்கக்கூட முடிய வில்லையாம். " கடுத்துவரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே  தடுத்தவர் " என்று பாடுவதால் அதனை அறியலாம்.
 " விரி சடை வெள்ளம் தரித்தான் " என்பது அவரது மற்றொரு  பாடல் தரும் செய்தி.

பிறையையும் கங்கையையும் ஏற்ற கடவுள் மேலும் சிலவற்றை அச் சடையில் ஏற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அச்சடையை அலங்கரிக்கும் மலர்களோ மானுடர்கள் சூட விரும்பாதவை. ஊமத்தை மலரையும், வெள்எருக்கையும் கொன்றையையும் யாரே விரும்புவர்? மணம் மிக்க மலர்களை உலகோருக்கு அருட் கொடையாக அளித்து விட்டுத் தனக்கு மணமற்ற மலர்களை ஏற்கும் தன்மையால் தியாகராஜன் ஆகிறான் அதே சமயம் வாசமில்லா மலர்கள் பெற்ற பேறு  தான் என்னே !  வன்னியும்,மத்தமும்,கூவிளமும் கொன்றையும் சூடியை எத்தனையோ பாடல்கள் நமக்கு காட்டுகின்றன. ஆத்தியும் கொன்றையும் சூடிய சடைமுடிக் கடவுளை நினைந்து, ஆத்தி சூடி என்றும், கொன்றை வேந்தன் என்றும் நூல்களின் பெயர்கள் அப்பெருமையைப் பறை சாற்றுகின்றன.

இதோடு நில்லாமல், பாம்பும், பிரமனது நகு தலையும் அச் சடையில் திகழ்கின்றன. ஒரே வரியில்,  இவை யாவும் திகழ்வதை ஞான சம்பந்தர்,             " அரவும்  அலை புனலும் இள மதியும் நகு தலையும் " என வருணிப்பது  மகிழத்தக்கதொன்றாகும். இவை யாவும் இறைவனுக்கு அழகே ஆகும் என்று திருச்சோற்றுத்துறைத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் அருளுகின்றார்.

எடுத்துக்காட்டாக அது திருப்பதிகத்தில் அமைந்துள்ள ஒரு பாடலை நினைந்து நிறைவு பெறுவோமாக.

" வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவும்

  கொண்டணைந்து ஏறும் முடியுடையான் குரை சேர் கழற்கே

  தொண்டணைந்து ஆடிய சோற்றுத்துறை யுறைவார்சடை மேல்

  வெண்டலை மாலையன்றோ எம்பிரானுக்கு அழகியதே.

ஈசனின் பாகத்தவளான உமையம்மையும் ஜடாமகுட வல்லியாகத்

 திகழ்வதும் நமது சிந்தைக்கு விருந்தாகத்  திகழ்வதாகும்.








 




Monday, July 13, 2020

தமிழ்ச் சொல்லும் பொருளும்




நம்மில் பலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்கு நேரான தமிழ்ச் சொல் இல்லை என்ற எண்ணம். இதையே நாமும் திரும்பிச் சொல்ல முடியும். தமிழில் உள்ள சொற்கள் பலவற்றுக்கு ஆங்கிலத்தில் நேரான சொற்கள் உண்டா என்று. சில வார்த்தைகளும் அப்படித்தான். உதாரணமாக, நீங்கள் உங்கள் தந்தைக்கு எத்தனையாவது மகன் என்பதை ஆங்கிலத்தில் சொல்லக் சொன்னால் தடுமாறுவர். சில சமயங்களில் நமக்குத் தெரியவில்லை என்றால் பழியை மொழியின் மீது போடுவோம்.

முதலில் தமிழ்ச் சொற்களைப்  பிரித்து வாசிப்பதிலேயே நமக்கு அடிக்கடித் தடுமாற்றம் வந்து விடுகிறது. சிலர் தேவை இல்லாதபோதும் எளிதாகப் புரிய வைப்பதாக நினைத்து மொழியைப் பிளந்து காட்டுகிறார்கள். இப்போது வெளியிடப்படும் சமய நூல்கள் பலவும் இந்த கதிக்கு ஆளாகின்றன. தேவை அற்ற இடங்களில் அபத்தமாகப் பிரித்துப் புத்தகம் வெளியிடுகிறார்கள். எதுகை, மோனை ஆகியவற்றோடு பாடப்பெற்ற பாடல்கள் இவ்வாறு சந்தி பிரிக்கத் தெரியாதவர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிறன.

அண்மைக்  காலத்தில் அச்சாகி வெளியிடப்பட்ட திருவாசகப் பிரதி ஒன்றைப்  பார்க்கையில் மேற்கண்ட கருத்து வலுப்பெற்றது. படிப்பவர்கள் அப்படி ஒன்றும் தமிழறிவு சுத்தமாக இல்லாதவர்கள் அல்ல என்பதை இப்பதிப்பாளர்கள் உணர வேண்டும். தாளிணை என்பதை வேண்டுமானால் தாள் இணை என்று பிரித்துக் கொள்ளட்டும். அருளியவாறு என்ற சொல் கூடத்  தெரியாதவர்களா நூலைப் படிக்கப் போகிறார்கள் ? எவ்வாறு பிரித்து அச்சிட்டிருக்கிறார்கள் தெரியுமா ? "அருளிய ஆறு "  என்று. எளிதில் விளங்க  வைப்பதாக நினைத்துக் கொண்டு  குழப்பி விடுகிறார்கள்.. ஆறு என்பது எந்த ஆற்றைக் குறிக்கிறது என்று ஒருவர் கேட்பார். அதற்கு ஒருவர் கங்கை என்றும் மற்றொருவர் காவிரி என்றும் உரை எழுதத் துவங்குவார். " ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் " என்று மணிவாசகர் பாடியுள்ளதை         " அருளிய ஆறு ஆர் பெறுவார் " என்று வெளியிட்டிருப்பது தற்காலத் தமிழ் அறிவு எவ்வாறு உள்ளது என்பதற்கு உதாரணமாக உள்ளது.

பல்லாண்டுகள் முன்னர் திருவாசக முற்றோதுதல் ஒன்று நடைபெற்றது. அதைக் காணச்சென்றிருந்தேன் . ஓதுவா மூர்த்திகள் ஒரு பாடலில் வரும் சொல் ஒன்றைப் பிரித்துப் பாடியபோது குழுமியிருந்தோர் அனைவரும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. " போனகமாக நஞ்சுண்டல் பாடி " என்பதை நஞ்சு உண்டல் பாடி என்று பிரித்துப் பாடியிருக்கலாம். ஆனால் அவரோ, " நம் சுண்டல் பாடி " என்று பாடினார். சிரிக்காமல் என்ன செய்வது !!

நிலைமை இவ்வாறு இருக்கும்போது, தமிழில் நேரான சொல் இல்லை என்ற கருத்தைக் கூற முன்வருவது பரிதாபம்.

குழு வேறு . கூட்டம் வேறு. கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வந்தபடி இருப்பது வேறு.  இதனை ஆங்கிலத்தில் முறையே group , crowd , swarm என்று ஓரளவு பொருள் காணலாம். swarm என்பதற்குக்  கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வருதலைக் குறிப்பதாகப் பொருள் காண்கிறோம். swarm of bees என்ற சொல்லாட்சி பிரபலமானது.  அதனைத் தமிழில் சுருக்கமாகக்  குறிப்பிட  முடியுமா என்று யோசிக்கலாம். பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்று வழங்கப்படுவதை அறிவோம். கூட்டம் கூட்டமாகத் திரண்டு படைகள் போல் வருவதை எப்படிக் குறிப்பது? திருவாசகம் வழி காட்டுவதைப் பார்ப்போம்.

திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாடல். உதயற்காலத்தில் கீழ்த்திசையில் அருணோதயம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சூரியோதயமும் நடைபெறுகிறது.இருள் அகல்கிறது. சிவபெருமானின் மலர்த் திருமுகம் போன்ற சிவந்த நிறத்தில் கதிரவன் உலகம் உய்ய வெளிப்படுகிறான். பெருமானது வலது கண்ணே ஆதித்தன் அல்லவா ? உயிர்கள் உய்யும்  பொருட்டாக மட்டுமல்லாமல், தாவரங்களும் மகிழ்ச்சியுற அவ்வாறு எழுகிறான். தாமரை மலர்ந்து பகலவனை வரவேற்கிறது. அம்மலரைக் கண்டு அதனிடம்  தேன் பருக வரும் ஆறு கால் வண்டினங்கள்  குதூகலிக்கின்றன. வைகறைக்காலத்தில் திருப்பெருந்துறை உறை  சிவபெருமானை அருள் நிதி தர வரும் ஆனந்த மலையாகப் பரவி அலைகடலாக அன்புடன் அழைத்துப் பள்ளியெழுந்தருளுமாறு துதிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான்.

ஆறு கால்களை உடைய வண்டுகள் கூட்டம் கூட்டமாக வந்து மலர்களை மொய்ப்பதைத் திரள் திரளாக வருவன என்பார் வாதவூரர்.எனவே அவற்றை, " திரள் நிரை  அறுபதம் முரல்வன " எனப்பாடியருளுகிறார்.

அப்பாடல் முழுதும் வருமாறு:

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது ; உதயம் நின்  மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள் நிரை  அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்தமலையே

அலைகடலே  பள்ளி யெழுந்தருளாயே .


திரள் என்பது திரண்டு நின்ற தன்மையைக் குறிப்பதாகும். ஞானமே திரண்டு ஏக உருவில் நிற்பதால் அண்ணாமலையானை, " ஞானத் திரளாய் நின்ற பெருமான் "  என்று திருஞானசம்பந்தர் பாடியருளியது இங்கு நினைவு கூறத்தக்கது. 
.
  

Thursday, February 6, 2020

நீங்காத நினைவு

“ கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் “ என்று திருஞான சம்பந்தரை சுந்தரர் குறிப்பிட்டுப் போற்றுகின்றார். “ நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் “ என்று பாடியவர்  சுந்தரர்.  சீர்காழிக்கு எழுந்தருளிய சுந்தரர்,  ஞானசம்பந்தர் அவதரித்தருளிய பதி அதுவாதலால் அதனைக் காலால் மிதிக்க அஞ்சி ஊர்ப் புறத்தே உள்ள திருக்கோலக்காவில் தங்கியிருந்தபடியே சீர்காழியின் மீது பதிகம் பாடினார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இது  சம்பந்தப்பெருமான் மீது  அவருக்கு அவருக்கு இருந்த ஒப்பற்ற பக்தியைக் காட்டுகிறது.

அறுபத்துமூன்று அடியார்களின் திருப்பெயர்களையும் குறிப்பிட்டுத் திருவாரூரில் திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், சம்பந்தரைக் குறிக்கும்போது “ கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் : எனப் பாடுகின்றார். இமைப்பொழுதும் ஈசனை மறவாத சிந்தை உடைய ஞானக் குழந்தையை இதை விட யாராலும் சிறப்பிக்க இயலாது.

“ ஸர்வதா ஸர்வ பாவேன நிச்சிந்திதை: பகவாநேவ பஜனீய “ என்று நாரத பக்தி சூத்திரத்தில் வருகிறது. அதாவது, சிந்தையில் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது சதா காலமும் இறைவனை மட்டுமே தியானிக்கும் நிலை இவ்வாறு விளக்கப்படுகிறது. வேத நெறியும் சைவமும் தழைக்க அவதரித்த சம்பந்தர் இதனைப் பின்பற்றியதோடு தனது பாடல்களில் பலவிடங்களில் அருளிச் செய்துள்ளதால் இத்தன்மையை சுந்தரர் போற்றிப் பாடினார் எனக்கொள்ளலாம்.

ஒருவன் விழித்திருக்கும்போதே இறைவனை நினைப்பது கடினமான இருக்கும்போது,    சம்பந்தரோ உறங்கும்போதும் இறைவனது திருவடிகளை மறவேன் என்கின்றார். உணவு உண்ணும்போதும்,பசித்திருந்தாலும்,உறங்கிக்கொண்டு இருந்தாலும் சிவபிரானை மறவாத அவரது சிந்தை வெளிப்படுவதை,

“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
  ஒண் மலரடி அலால் உரையாது என் நா “  என்று திருவாவடுதுறைப் பதிகத்தில் பாடுவதைக் காணலாம்.

இவ்வாறு இடையறாது நினைப்பதால் சிவதரிசனம் கிடைப்பதோடு இறையருள் கூடவே இருந்து காப்பாற்றும் என்பதை நாம் அறிய முடிகிறது. 

“ நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
  நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் “

என்ற உயர்ந்த சிந்தனை திருக்கருக்குடிப் பதிகப்பாடல் மூலம் நமக்கு உபதேசிக்கப்படுகிறது.
முதலில் நினைத்தலுக்கும் நினைப்பித்தலுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம். நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனாக இறைவனை நினைக்கும் எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் அந்த நினைவு இடையறாது இருப்பது இறைவனது அருளால் மட்டுமே நிகழ வல்லது. அந்த உயர்ந்த நிலை ஏற்பட்டுவிட்டால் தூங்கிக் கொண்டிருந்தாலும் பெருமான் நமக்கு அவனது நினைவு வரச் செய்வான். இதற்கு நினைப்பித்தல் என்று பெயர். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து திருநடனம் கண்ட பதியான திருவாலங்காட்டிற்கு எழுந்தருளிய ஞானசம்பந்தர் அத்  தலத்தைக் கால்களால் மிதிக்க அஞ்சி, புறத்தே தங்கியிருந்து துயில் கொண்ட போது அவரது கனவிடை இறைவன் தோன்றி,  தன்னைப் பாடப் பணித்தான். இதற்கு அகச் சான்றாக சம்பந்தரே, “ துஞ்சும்போது வருவாரும் தொழுவிப்பாரும்” என்று அவ்வூர்ப் பதிகத்தைத் துவக்குகின்றார். 

இதுபோலவே திருமறைக் காட்டில் அப்பர் பெருமானது கனவில் தோன்றிய இறைவன் அவரைத் திருவாய்மூருக்கு வருமாறு பணித்தவுடன், அப்பர் சுவாமிகள், “ உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி என்னை வா என்று போனார் “  எனப்பாடுவார்.   “ உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே “ என்பார் சுந்தரரும்.

மேற்கூரை ஓவியம் - திருவான்மியூர் 
மேற்கண்ட உயர்ந்த நிலை எவ்வாறு பிறருக்கும் ஏற்பட முடியும் ? இறைவனே அடைக்கலமாகவும் , ஆதரவாகவும் இருப்பதால்,  நாமும் அவனை ஆதரித்து வழிபடுவதொன்றே இதற்கு வழி. அவனை அன்றி வேறு எவரையும் ஆதரவாக எண்ணாத சிந்தை நமக்கு ஏற்பட்டுவிட்டால் அது சாத்தியமே. திருவான்மியூரில் அருளிய பதிகமொன்றில் தனக்குச் சொல்வதாக இவ்வுபதேசத்தைச் செய்கின்றார் சம்பந்தர். . 

திருக்குளம்-திருவான்மியூர் 
அதன் முதல் பத்துப் பாடல்களிலும் “ அடையாது எனது ஆதரவே “  என்று வருகிறது. எடுத்துக்காட்டாக முதல் பாடலைக் காண்போம்:

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே

உரையார் தொல்புகழாய்  உமை நங்கையோர் பங்குடையாய்

திரையார் தெண் கடல் சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா உன்னையல்லால் அடையாதென தாதரவே.

என்பதால் சிவ நாமாக்களைச் சொல்லிச் சொல்லி தியானிக்கும்போது இதற்கான தகுதி ஏற்பட்டு விடுவதை அனுபவத்தில் உணரலாம். 
   
ஸ்ரீ மருந்தீசுவரர் ஆலயம்-திருவான்மியூர் 
“ சென்றார் தம் இடர் தீர்க்கும் திருவான்மியூர் “ என்று சம்பந்தரால் பரவப்பெற்ற இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் இவ்வேளையில் உடற் பிணிக்கும் பிறவிப் பிணிக்கும் மருந்தாய் எழுந்தருளியுள்ள மருந்தீசனின் மலரடிகளை வணங்கி உய்வோமாக.

Friday, November 22, 2019

இல்லறமும் துறவறமும்

ஸன்னியாசம் அல்லது துறவறம் என்பதை மனிதனுக்கான நான்கு வரையறைகளுள் ஒன்றாக  வகுத்துக் காட்டினர் நம் பெரியவர்கள். மற்ற மூன்றாவன: பிரம்மச்சர்யம், க்ரஹஸ்தம், வானப்ப்ரஸ்தம் என்பனவாம். கல்வி கற்பதற்கு மட்டுமே அமைந்த பருவம் பிரம்மச்சர்யம் ஆகும். மணம் செய்து கொண்டு, பிரம்மச்சாரிகளுக்கும், ஸந்நியாசிகளுக்கும் ,பிற ஏழை எளியவர்களுக்கும் உணவிடுதல்,  க்ரஹஸ்தாச்ரமத்தில் உள்ள தம்பதியரின் கடமை. ஐம்பது வயது ஆனபிறகு , அத்தம்பதிகள், ஊரின் புறத்தே இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்துதல் வானப்ரஸ்தம் எனப்படும். அதற்குப்பிறகு இல்லறத்தையும் துறந்து வாழ்வதைத் துறவறம் என்பார்கள். இதனை மணம் செய்து கொள்ளாதவர்களும் நேரிடையாக ஏற்பதுண்டு.

துறவு ஏற்பதும் அறத்தைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ அதைத் துறவறம் என்று அழகாகப் பெயரிட்டுள்ளார்கள். இந்த விவேக நிலையை ஏற்றவர்கள் எப்போதும் ஈச்வர த்யானமும் , பூஜையும் , ஆத்மவிசாரமும், பிறர்க்குத் தர்ம உபதேசமும் செய்து கொண்டு இருப்பர். ஒரே இடத்தில் நிலைத்து இராமல், பலவிடங்களுக்கும் கால்நடையாகவே சென்று அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்துவர். யோகிகளுக்கெல்லாம் பரமயோகியாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தி , மௌன குருவாக இருந்ததுபோல, அதிகமாகப் பேசாமல்,  பக்தர்களிடம் தெய்வ நம்பிக்கையும் , தர்மத்தில் ஈடுபாடும் விளைவிக்கும் சம்பாஷனை மட்டுமே மேற்கொண்டவர்களாக சந்நியாசிகள்  காணப்பட வேண்டும். 

மண் ஓட்டையும் செம்பொன்னையும் ஒரே மாதிரி பாவிக்கும் பக்குவம் இவர்களிடம் காணப்பட வேண்டும். தனக்கென்று எந்த வசதியையும் எதிர்பார்க்காமல் துறவறத்தின் நோக்கம் ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும். எல்லோரையும் சமமாக நோக்கவேண்டும். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்களாக இருந்துவிட்டால், உலகமே இவர்களை வணங்கும். உலகம் இவர்களிடம் சில குணாதசியங்களைக்  குறைந்த பட்சமாக எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இவர்கள் பிறருக்கு வழி காட்டவும், தான் முத்தி அடையவும் துறவு மேற்கொண்டவர்களாயிற்றே! எனவேதான் இவர்களது நியமங்கள் கடுமையாகக் காணப்படும்.  

காரில் நேராகக் கோயில் வாயிலில்வந்து இறங்குவதைப் பிறர் போல இவர்களும் மேற்கொள்வதை மக்கள் விரும்புவதில்லை. சாதாரண மனிதர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்கிறார்கள். பண்டைக்கால குருமார்கள் கால்நடையாகவே நாடு முழுதும் பயணம் மேற்கொண்டார்கள். அவ்வளவு ஏன், நாம் செய்த புண்ணியத்தால் அதுபோலவே இறுதிவரை இருந்த காஞ்சி முனிவரைத் தரிசித்திருக்கிறோமே ! சந்நியாசம் மேற்கொண்டவர்களுக்கு அடையாளம் காவி உடை மட்டுமல்ல. விபூதி- ருத்ராக்ஷம் தரிப்பதும்கூடத்தான். பூஜைக் காலங்களில் மட்டும் ருத்ராக்ஷம் அணிந்தால் போதாது. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ருத்ராக்ஷம் கண்டிப்பாக அணிந்து கொண்டு  வர வேண்டும்.  தவ ஒழுக்கம் என்பது சில மகான்களிடம் ஏராளமாகக் காணப்படும். அவர்களது முகத்தில் தவத்தின் வலிமை ஜொலிக்கக் காணலாம். 

சதாசிவப் பிரம்மேந்திரர் போன்ற மகான்கள், மனித சஞ்சாரம் இல்லாத இடங்களிலேயே தவ சீலர்களாக இருந்தது போல இன்றும் எங்கோ ஒரு கோடியில் அத்தகையவர்கள் இருக்கக்கூடும்.
சிலர் நினைக்கலாம், தவச்சீலர்களுக்கு மட்டுமே இறை அருள் எளிதில் கிட்டும் என்று.மற்றவர்கள் உலகியலில் சிக்கி இறைவனை அதிகமாக நினைக்காதது ஒன்றே இவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் பார்த்தால் ஏனையோரும் பக்தி செலுத்தினால் இறையருளைக் கண்டிப்பாகப் பெற முடியும். இப்படி வழி காட்டுகிறார் ஞான சம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில்:

“  பிறவியால் வருவன கேடுள ஆதலால் நாளும்

   துறவியார்க்கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே

   மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி

   அறவன் ஆரூர்  தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் 
   
                                                                                                    நெஞ்சே”

ஏ நெஞ்சமே, பிறந்து விட்டாலே துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. துறவிகள் மட்டுமே துன்பமில்லாமல் இருக்கமுடியும் என்று ஒதுங்கி விட்டாயே! ஆனால் இப்போது நீ நல்ல வழியை நாடி விட்டாய். கங்கை தாங்கிய சடையுடைய திருவாரூர்ப் பெருமானைத் தொழுதுவிட்டால் அத்துன்பவினைகள் நமக்கும் நீங்குவது எளிதே ஆகும் என உணர்வாயாக. என்ன நேருமோ என்று அஞ்சி மயங்க வேண்டாம். இறைவனைத் தொழுது நாமும் உய்யலாம்  என்று இப்பாடல் மூலம் நமக்கு அடைக்கலம் அளிக்கிறார் சண்பை ஞான சம்பந்தர்.

இதிலிருந்து,  உண்மையாகவே துறவறம் பூண்டு, இறைவனை மட்டுமே நாடி இருப்போர்க்கு உய்வு கிடைக்கும் என்பதும், இல்லறத்தாரும் இறைவனை ஒருமுகத்தோடு நெக்குருகி நாள்தோறும் வழிபட்டால் உய்யலாம் என்பதும் ஒரு சேர அறியப்படுகிறது.  

Saturday, October 26, 2019

நடுநிலை ஆன்மீகவாதிகள்



கடவுள் உண்டு எனும் மனிதர்களை ஆன்மீகவாதிகள் என்றும் இல்லை என்பவர்களை நாத்திகர்கள் என்றும் பொதுப்படையாகச் சொல்கிறோம். ஆனால் இவ்விரண்டுக்கும் இடையில் மதில் மேல் பூனையாக இருப்பவர்களை எந்தப்பெயரிட்டு அழைப்பது என்று தெரியவில்லை. அவர்கள் தேவைப்பட்டால் கடவுளை நினைப்பார்கள். மற்ற நேரங்களில் கடவுளைப்பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள் அவர்கள். ஏறத்தாழ நாத்திக வாழ்க்கை மேற்கொண்ட இந்த நடுநிலையாளர்களால் சமயத்திற்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை. ஒரு பிடிப்பும் இல்லாத இவர்களால் சமயத்திற்கு ஏற்படும் அவப்பெயர்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சுயநலவாதிகளான நடுநிலைவாதிகள் பெயரளவிற்கே ஆன்மீகவாதிகள். தானும் தன் குடும்பமும் நன்றாக வாழ மட்டுமே பிரார்த்தனை செய்யும் இவர்களால் ஒருபோதும் சமயம் வளர்ச்சியோ, பலமோ, பாதுகாப்போ  அடையப்போவதில்லை. இவர்களில் சிலர் சுயலாபத்திற்காகச்  சமயத்திற்கு எதிராகப் பேசுவதும் உண்டு. சமயத்தையும் சமயக் கடவுளர்களையும் பிறர் இழிவுபடுத்தினாலும் நமக்கேன் என்று இருப்பவர்களே இன்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். 

அப்படியானால் ஆன்மீகவாதிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கலாம். அப்பர் சுவாமிகள் தில்லையில் பாடியது நினைவு கொள்ளத்தக்கது.
“ ஊனில் ஆவி உயிர்க்கும் போதெல்லாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனை “ என்றார் அவர். இந்த ஊனுடம்புக்குள் துடிப்பு இருந்தால் தான் அந்த ஜீவன் உயிரோடு இருப்பதாகக் கூறுகிறோம். அத்துடிப்பே உயிர் இருப்பதை உறுதி செய்கிறது. அத்துடிப்பு நிற்கும் வரை மறவாது இறைவனை வழிபடுபவரே ஆன்மீகவாதிகள் என்ற உயரிய கருத்தை இதன் மூலம் கற்கிறோம். இதையே ஞானசம்பந்தரும்,
“ ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி “ என்று யோகமார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் ஒருங்கே காட்டுகின்றார்.

என்னால் எதுவும் செய்வதற்கில்லை, கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னால் கொள்கையாவது ஒன்றாவது என்று கடவுளை வேண்டிக்கொள்ளும் நாத்திக வாதிக்கும்,நடுநிலை ஆத்திகருக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு அவர்கள் தரும் விளக்கம் என்ன தெரியுமா? இறை நம்பிக்கை என்பது செய்கைகளால் விளக்கப்பட வேண்டியதில்லை என்றும், மனத்தளவில் இருந்தாலே போதுமானது என்றும் தத்துவம் பேச ஆரம்பித்து விடுகின்றனர். இதை அவர்கள் ஒன்றும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நமது குருநாதர்கள், இறைவனை, “ மனத்தகத்தான், தலைமேலான், வாக்கினுள்ளான் “ என்று அழகாக நமக்குக் காட்டி அருளியுள்ளார்கள்.

கண்ணால் கண்டாலோ ,அல்லது ஆன்மீக அனுபவம் பெற்றாலோ நம்பிக்கையும் பக்தியும் அதிகரிக்கிறது என்றாலும் இவற்றைப் பெறுவதற்கு நமக்குத் தகுதி இருக்க வேண்டுமே! தகுதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இந்த நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில்லையே.
இவர்களுக்குக்  கடவுளைக் காண வேண்டும் என்றும்,பிறவாத நிலை ஏற்பட வேண்டும் என்றும் எண்ணமே ஏற்படாதபோது அதனை அனுபவித்த அருளாளர்களது சொந்த அனுபவத்தையாவது அவர்கள் வாயிலாகவே அறிந்து கொள்ளலாமே. இந்த வகையில் அவர்களது அருள் நூல்கள் நமக்குப் பெரிதும் துணை செய்கின்றன. தாம் பெற்ற அனுபவத்தை அவர்கள் பகிர்வதோடு நாமும் உய்யவேண்டும் என்ற பெரும் கருணையோடு இவ்வாறு அருளியுள்ளார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.

சைவசமயாச்சார்யர்கள் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இந்நிலவுலகில் வாழ்ந்தது பதினெட்டே ஆண்டுகள் தான். இக்குறுகிய காலத்தில் சைவம் தழைக்க அவர் ஆற்றிய பணிகளை இன்றளவும் சைவ சமயம் நினைவு கூர்கிறது. இறைவன் தனக்கிட்ட பணிகளைச் செவ்வனே செய்து முடித்த பின்னர் இனியும் இந்நிலவுலக வாழ்க்கையை நீக்கி இறைவனை அடைய வேண்டும் என்று விழைந்த சுந்தரர், திருவஞ்சைக்களத்து இறைவனாரிடம் விண்ணப்பிக்கவே, அவரது வேண்டுகோளை ஏற்ற பரமன்  அவரைக் கயிலைக்கு அழைத்து வர ஐராவதம் என்ற வெள்ளை யானையை அனுப்பினார். அந்த யானையின் மீது ஏறிக் கயிலைக்குச் செல்கையில் தன்னைத் தேவர்கள் எதிர்கொண்டதையும்  பரமன் தனக்காகப் பரம கருணையோடு அனுப்பிவைத்த யானையின் மீதேறிச் செல்வதையும் அப்பொழுதே ஒரு பதிகமாக அருளிச் செய்தார் சுந்தரர். அப்பதிகத்தில் இடம்பெறும் ஒரு பாடல் உலகத்தவர்களுக்கு உபதேசிக்கும் வகையுள் அமைந்துள்ளது இன்புறத்தக்கது. அதாவது, யாரொருவர் இவ்வுலகில் பிறந்து சிவபெருமானை இடைவிடாது வழிபடுகிறாரோ அவர்கள் பொன்னுலகாகிய சிவலோகத்தை அடைவர் என்பதை இன்று அடியேன் கண்டுகொண்டேன் என்று அகச் சான்றாக அறிவிக்கிறார் நாவலூர் வள்ளல். எனவே இந்நிகழ்ச்சியைப்பற்றி அறிந்தபின்னராவது,  குரு வாக்கியத்தைச் சிரத்தின் மீது கொண்டு பின்பற்றவேண்டியது நமது கடமை அல்லவா ?

“ மண்ணுலகில் பிறந்து நும்மை

 வாழ்த்தும் வழியடியார்

 பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் 

இன்று கண்டொழிந்தேன்

 விண்ணுலகத்தவர்கள்  விரும்ப 

 வெள்ளை யானையின் மேல்

 என்னுடல் காட்டுவித்தான் 

நொடித்தான் மலை உத்தமனே.

என்பது அவ்வுயரிய பாடல்.

வாழையடி வாழையாகச் சிவபெருமானுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் அன்பர்களைப் பிறவிப் பெருங்கடலிலின்றும் கரை ஏற்றித் தன்னடிக்கே புகவைக்கும் இறைவனது கருணைத்திறம் இப்பாடலால் வெளிப்படுகிறது. அத்துடன், ஐந்தொழில்கள் ஆற்றும் இறைவன், அழித்தல் தொழிலால் உயிர்களை மீண்டும் மீண்டும் பிறவாமல் இளைப்பாறச் செய்யும் ஒப்பற்ற கருணையும் செய்வதால் அத்தொழிலை நொடித்தல் என்கிறோம். அதனைச் செய்யும் பெருமானை நொடித்தான் என்றும், அவன் நீங்காது உறையும் கயிலைமலையை ஊழிக்காலத்திற்கப்பாலும் திகழும் நொடித்தான் மலை என்றும் சுந்தரர் தேவாரம் போற்றுகிறது.