Friday, September 10, 2021

கூட்டிப் பொருள் உரைத்தல்

 


“இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு  புத்தி கூர்மை அதிகம்.” என்றார் ஒரு நண்பர். ஒரு விதத்தில் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். அவர்கள் வளரும் சூழ்நிலையும் கல்வி கற்கும் முறையும் காரணம் எனலாம். ஒரு தலைமுறைக்கு முன்பாகப் பள்ளிக் கூடங்களுக்குக் குழந்தைகளை  அனுப்பாததற்கு முக்கிய காரணம் கட்டணம் செலுத்த இயலாமையே. அந்தக் கவலையைப் போக்கி அரசாங்கமே முன்வந்தபோது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர். மதிய உணவுத் திட்டமும் மாணவர் சேர்க்கைக்குத் துணை புரிந்தது. இப்படி மாணவர்களைச்  சேர்த்த பிறகும் ஆங்கிலப் பாடங்கள் ஆறாம் வகுப்பு முதலே துவங்கியது. ஆங்கிலமும் கணிதமும் அக்காலத்தில் வேப்பங்காயாக இருந்தன.

தமிழின் துணை கொண்டே ஆங்கிலப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அப்போதும் மாணவர்களிடையே குழப்பமே மிஞ்சியது. மொழியாக்கம் செய்யும்போதும் தடுமாறினர். இரு மொழிகளையுமே சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை. இந்நிலையில் மாணவர்களிடையே நகைச்சுவை நிரம்பிய மொழியாக்கங்களும் உண்டு. தமிழாசிரியர் கூட்டிப் பொருளுரைத்தலைப் பற்றிப் பாடம் எடுத்துவிட்டுச் சென்றபின் மாணவர்களின் மொழியாக்கம் வகுப்பைக் கலகலக்கச் செய்யும்.

ஒருவன் மற்ற மாணவர்களைப் பார்த்து, “ பிள்ளையார் கோயில் உப்புமா ஊசிப் போச்சு “ என்பதை மொழி பெயர்க்க முடியுமா” என்பான். குறும்புத்தனமான ஒரு பையன் உடனே, “ Sun Who Temple Salt Flour Needle Gone” என்பான். வகுப்பறையே சிரிப்பில் ஆழ்ந்து விடும்.

அதே மாணவன் மீண்டும், “ It, but, what, meaning” ஆகிய சொற்களை வைத்து ஒரு வார்த்தை சொல்ல முடியுமா ? “ எனக் கேட்பான். மீண்டும் அக்குறும்புப் பையன், “ It அது but ஆனால் what என்ன meaning அர்த்தம்” என்று சர வெடியைக் கொளுத்திப் போடுவான். மூன்றாவதாக ஒருவன், “ நமது ஆசிரியர் , வடமொழிக் கீர்த்தனை ஒன்றை சொல்லி அதில் வரும் “ த்யாகராஜ யோக வைபவம்” என்ற வார்த்தையை , ராஜ யோக வைபவம்,

 

யோக வைபவம், வைபவம்,பவம்,வம் என்று சாதுர்யமாகக் கையாண்டு இருப்பதையும் அதை சங்கீத வித்வான்கள் அழகாகப் பாடுவதையும் சுட்டிக் காட்டிவிட்டுக்  கூட்டிப் பொருள் காண்பதைத் தேவார ஒதுவா மூர்த்திகள் பாடுவதைக் கொண்டு விளக்கினார் அல்லவா? அதே போல எதாவது ஒரு வார்த்தையை நாமும் சொல்லிப் பார்க்கலாமா “ என்றான். இது கொஞ்சம் கடினமான சவால் தான். சிறிது நேர மௌனத்திற்குப் பின் ஒருவன் சமாளித்த படியே, “ ஆனந்த விகடன்,னந்த விகடன்,இந்த விகடன், விகடன்,கடன்,டன், ன்” என்றானே பார்க்கலாம். வகுப்பே அதிர்ந்தது. ஆரவாரம் கேட்டபடியே அடுத்த வகுப்பு ஆசிரியர் நுழையவே அனைவரும் பெட்டிப் பாம்பு போல் சுருட்டிக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல் வெகுளியான முகத் தோற்றத்துடன் இருந்தனர்.

மேற்கண்ட நகைச்சுவை நிகழ்சிகள் அக்காலச் சிறுவர்களின் அறிவு கூர்மை எப்படி இருந்தது என்பதன்  எடுத்துக் காட்டுகள்.அவ்வளவே.

சீர்காழியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் பாடிய இளம் பாலகனாகிய திருஞானசம்பந்த மூர்த்திகளோ தமிழும் தமிழிசையும் மேலோங்கவும், சமண் - சாக்கிய ஆதிக்கத்தை அகற்றி சைவத்தை நிலை நாட்டவும் திருவவதாரம் செய்தருளியவர். அந்த ஞானக் குழந்தை அருளிய பனுவல்களில் ஒன்றின் மூலம் பொருள் விளங்கக் கூட்டிப் பாடுவதை அறியலாம்.

சிறையாரும் மடக் கிளியே இங்கேவா தேனொடு பால்

முறையாலே உணத்தருவன் மொய் பவளத்தொடு தரளம்

துறையாரும் கடல் தோணி புரத்தீசன் துளங்கும் இளம்

பிறையாளன் திரு நாமம் எனக்கொருகால் பேசாயே.  

எனவரும் அப்பாடலைப் பாடுகையில் ,

“ முறையாலே, பால் முறையாலே, தேனொடு பால் முறையாலே,இங்கேவா தேனொடு பால் முறையாலே, மடக் கிளியே இங்கே வா தேனொடு பால் முறையாலே , சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால் முறையாலே “  என்று நயம் படப் பாடி அப்பாடலின் அருமையை நமக்கு உணரச் செய்வார்கள் ஒதுவா மூர்த்திகள். இதேபோல், பிறையாளன்,இளம் பிறையாளன், துளங்கும் இளம் பிறையாளன், புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன், கடல் தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் “ என்று பாடி அப்பாடலை நிறைவு செய்வார்கள்.

இதுபோன்ற பாடல்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறுவர்களுக்குப் பயிற்றுவித்தால் நுண்ணறிவு மேம்படும். தமிழார்வமும் இறைவன்பால் பக்தியும் மேலோங்கி உயர் நிலைக்குச் செல்ல வித்திடும்.

Tuesday, July 13, 2021

ஐம்பொறியடக்கம்


 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த சங்கராசார்யர்களுள் செட்டி நாட்டிலுள்ள இளையாத்தங்குடியில் சித்தியான ஆசார்யரும் ஒருவர். அந்த மகான் நாள்தோறும் ஸ்ரீ சந்த்ர மௌலீசுவரருக்கு செய்த வில்வார்ச்சனையை நமது காஞ்சிப்  பெரியவரும் வியந்து போற்றியிருக்கிறார்கள். அர்ச்சிக்கப்படும் வில்வ தளங்கள் ஒவ்வொன்றும் தவறாமல் சுவாமி பாதத்திலேயே சென்று விழுமாம். இது எதைக் காட்டுகிறது என்றால் மனம் ஒரே இடத்தில் லயித்திருந்து பொறிகளைத் தன்  வசப்படுத்தி அவற்றை வென்றதையே குறிக்கும்.

நமக்கோ பொறிகள் நம்  வசம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் செய்யும் வழிபாடோ, ஜபமோ பூஜையோ மனம் லயித்துச்  செய்யப்படுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். குரங்கு கிளைகளில் தாவிக் கொண்டே இருப்பதைப் போல மனமும் அக்கம்பக்கத்துக் காட்சிகளிலும் , மனத்தால் எண்ணப்படும் காட்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது. ஆகவே தியானம், பூஜை போன்றவை பெயரளவுக்கே நடத்தப் பெறுவதால் எண்ணிய பலன்கள் நிறைவேறுவதில்லை. நாமும் நம்  குறையைப் பார்க்காமல் பழியைத் தெய்வத்தின் மீது போடுகிறோம்.

பொறிகளை வெல்வது எப்படி என்று புத்தகத்தைப் படித்தோ, பிறர் சொல்லியோ தெரிந்து கொள்ள முடியாது.இது தனிப்பட்ட ஒவ்வொருவரின் அனுபவம். “ தனித்திரு, பசித்திரு, விழித்திரு” என்ற உபதேசங்கள் உயர்ந்தவைகள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்ட போதிலும், நடைமுறைக்கு வருவதில்லை. வானப் ப்ரஸ்தம்  மேற்கொண்டு வெளியுலகத் தொடர்பைக் குறைத்துக் கொள்ளும் உபாயத்தையும் வகுத்துக் கொடுத்தனர் நமது  முன்னோர்கள். ஆனால் நகர வாழ்க்கையே சுவர்க்கம் என்று நினைத்துக்  கிராமங்களைக் காலி செய்பவர்களே இப்போது பெருகி விட்டார்கள்.

நமக்கு ஒத்து வராது என்று மனத்தைப் பொறிகளின் போக்கிலேயே விட்டு விடலாமா? புகைப்படக்காரர்கள் சில நிகழ்ச்சிகளிலும், ஸ்டூடியோக்களிலும் காமெராவை ஒரு ஸ்டாண்டில் பொருத்தி வைத்து விட்டு யாரது படத்தை எடுக்க விரும்புகிறார்களோ அவர்கள்பால் அதைத் திருப்பி நிலைப்படுத்தி விடுகிறார்கள். படம் எடுத்துக் கொள்பவர் நகர்ந்தாலே ஒழிய காமெரா நகர வாய்ப்பே இல்லை. அதேபோலப் பூஜையின்போது இறைவனது திருவடிகளுக்காகச் செய்யப்படும் அர்ச்சனையை அம்மலரடியின் பால் மட்டுமே நோக்குமாறு நமது கண்களாகிய காமெராவை நிலைப்படுத்தப் பழகிக் கொண்டால் கண்கள் அத்திருவடிகளை மட்டுமே காண இயலும். ரோபோவை ஒரு செயல் செய்யும்படி இயக்கிவிட்டால் அது அந்த இடத்திற்குச் சென்று கைகளால் குறிப்பிட்ட  செய்கையைச் செய்வதைப் போல நமது வலது கரமும் பெருமானது பாதங்களிலே வில்வத்தை அர்ப்பணிக்குமேயன்றி அந்த  வில்வதளம் வேறு இடத்தில் சென்று விழாது.  சிதம்பரத்தில் சுந்தரர் நடராஜப் பெருமானைத் தரிசிக்கையில் அவரது கண்கள் அப்பெருமானை மட்டுமே நோக்கியதை , “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்கிறார் சேக்கிழார்.

மனம் ஒன்றுதலைக் குறிக்குமிடத்து,ஒரு திருவாசகப் பாடலையும் நினைவு கூர்வோம்.

நமது சிந்தனையை இறைவன் பால் செலுத்துதல் இதற்கான முதல் படி. அதுவே நடைபெறாவிடில் எவ்வாறு தவமும்,ஜபமும், பூஜையும் சாத்தியமாகும்? அடுத்தது, புறத்தே நோக்காமல்,  கண்கள் அவன் திருவடிகளைக் காண்பதே கருத்தாகக் கொள்வது அடுத்த படி. இனி வந்திக்கும்போதும் அம்மலரடிகளை எண்ணி வழிபடுவது மூன்றாவது படி. ஐம்புலன்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கரை  சேர்த்த கடவுளை வாயார அர்ச்சிப்பதும் தோத்திரம் செய்வதும் நான்காவது படி. அப்படி வழிபடுவோர் மனத்தில் புகுந்து கருணைக் கடலெனவும், மலை எனவும் நீங்காது இருந்து தன்னையே தருகிறான் பெருமான். இவ்வளவும் , ஒன்றி இருந்த மனத்தின் மூலம் பெறப் படுவது. எனவேதான் அப்பர்பெருமானும், “ ஒன்றி இருந்து நினைமின்கள்” என்று அருளிச் செய்தார். இனி மாணிக்க வாசகரின் அவ்வழகிய பாடலைக் காண்போம்:

சிந்தனை நின்றனக்கு ஆக்கி, நாயினேன் தன் கண்ணிணை

நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி,

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு உன்

மணிவார்த்தைக்கு ஆக்கி , ஐம்புலன்கள் ஆர

வந்தெனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை

மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்

தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித்

தனிச் சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே “  

இமைப்பொழுதும் நெஞ்சை விட்டு நீங்காதபடி புலன்களை வென்றவராய் இறைவனை வழிபட்டதால் மாணிக்கவாசகப் பெருமானுக்கு இறைவன் எளி வந்த பிரான் ஆயினார்.

Friday, June 4, 2021

சார்ந்தாரைக் காப்பவன்


 மனிதனாகப் பிறந்தால் பிறந்தது முதல் இறுதி வரை யாரேனும் ஒருவரையோ பலரையோ சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தாயின் அரவணைப்பும், பாலகனானது முதல் கல்வி கற்கும் வரை தந்தையின் கண்காணிப்பும் கல்வியைப் போதிக்கும் குருவின் கருணையும் , மணம் செய்து கொண்டபின்னர் மனைவியின் துணையுடன் செய்யும் அறமும், முதுமைக் காலத்தில் மக்களும் மனைவியும் ஆற்றும் சேவையும்,  உடலை நீத்தபின்னரும், உறவினர்கள் முறைப்படி இறுதிக் கடன்களை ஆற்றுவதும் போன்ற சேவைகளைப் பலரும் செய்யும்படியாக வாழ்கிறோம்.  

இன்பதுன்பங்கள் இல்லாதவன் ஈசன் ஒருவனே. “ இன்பமும் துன்பமும் இல்லானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இன்பதுன்பங்களை சமமாகப் பாவிப்பது எல்லோருக்கும் எளிய செயல் அல்ல. இன்பம் வந்தால் ஆகாயம் அளாவக் குதிப்பதும் துன்பம் வந்தால் துவண்டு போவதும் மட்டுமே நம்மால் இயலும். அப்படியானால் உலகில் நீடு வாழவும் துன்பம் நீங்கி என்றும் இன்பம் துய்க்கவும் வழி இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவனது மலரடிகளை நம்பி அடைக்கலமாக வாழ்பவர் நிலமிசை நீடு வாழ்வார் என்கிறார் திருவள்ளுவர். இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கும் அவ்வுலகம் பெற்றுப் பிறவாத நிலை பெறுவதற்கும் இறைவனது அருள் வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது.

இறைவன் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? அவனது உருவம் தான் என்ன? அவனை வழிபட்டால் ஈடேற முடியுமா? உலகில் இத்தனை மதங்களும் பல்வேறு கடவுள்களும் இருப்பதன் நோக்கம் என்ன? இறைவனைக் கண்டவர்கள் உண்டா ? பிறப்பும் இறப்பும் எதனால் ஏற்படுகிறது? எல்லோரும் ஒருபோல வாழாததன் காரணம் என்ன? பிணியும் முதுமையும் ஏற்படுவது எதனால்? அவற்றை வெல்ல முடியுமா? நல்லவர்களும் துயரங்களை எதற்காக அனுபவிக்கிறார்கள்? தீயவர்கள் பலர் சுகவாசிகளாகத்  திரிகிறார்களே!  தீயவர்களில் பலர் தண்டிக்கப்படாதபோது தெய்வம் இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படாதா? இதுபோன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயற்கை.

மேற்கண்ட கேள்விகளுக்கு அனுபவத்தால் விடை காண்பது சிறந்தது. அந்த அனுபவம் எவ்வாறு ஏற்படுகிறது என்றால் குருமூலமாகவும் அறவழி நூல்களாலும், அவ்வழியைக் கடைப் பிடிப்பதாலும் ஆலய தரிசனங்களாலும் கைகூடுவது சாத்தியம். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமான அனுபவம் ஏற்படுவதில்லை. பலருக்கு முதுமைக் காலம் வரை அவ்வித எண்ணமே ஏற்படுவதில்லை. சிலருக்குப் பிணி வந்தபோது முதிர்ச்சி ஏற்படும். “ நோயுளார் வாய் உளான்” என்பார் சம்பந்தர். இன்னும் சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே தெய்வ சிந்தனையோ அல்லது தன்னை இறைவனருள் பெறுவதற்கு உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை.

தன்னைத் தயாராக ஆக்கிக் கொள்வதே வாழ்வின் நோக்கம் என்று எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதே விருப்பு வெறுப்பு மெதுவாக நீங்க ஆரம்பிக்கிறது. உடலைப் பற்றிய கவலை நீங்குகிறது. பிணிகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆத்ம ஞானம் பிறக்கிறது.  இவ்வாறு வேதாந்த ஞானம் ஏற்பட்டால் முக்தி வரம் வேண்டும் இயல்பு வந்து விடுகிறது. இறைவன் தனக்குள் இருப்பதை மெல்ல அறியும் நிலையும் கிட்டி விடுகிறது.  

திருவோட்டையும் செம்போன்னையும் எவ்வாறு சமமாகப் பாவிக்க முடியும் என்பதே வினா. அதற்கான ஒரே வழி நம்மை நாம் ஆயத்தப் படுத்திக் கொள்வதேயாகும். தகுதி ஏற்பட்டால் ஒழிய பாசம் களைவது இயலாததொன்று. பாசத்தைப் பிறர் துணை இன்றி நாமே களைந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்கின்றன சித்தாந்த நூல்கள். இறைவனது கருணையாகிய பற்றுக்கோடு இல்லாமல் உயிர்கள் ஞானம் பெற சாத்தியமே இல்லை என்று அந்நூல்கள் கூறுகின்றன. “ பாசமான களைவார்” என்று அதனை இறைவனது தனிப் பெருங் கருணையாகப் புகழ்வார் ஞானசம்பந்தர். நம்மைத் தயார் படுத்திக் கொள்ளும் வழிகளைத் தெளிவாகத்  திருவாவடுதுறை என்ற தலத்தின் மீது அவர் பாடியருளிய பதிகத்தால் அறியலாம். தன்  நெஞ்சுக்குச் சொல்வது போல் நமக்காக  இரங்கி உபதேசம் செய்வதை அப்பதிகம் முழுதும் காணலாம். அவரது நிகரற்ற பக்தியின் வெளிப்பாட்டை அப்பதிகத்தில் நாம் காண முடிகிறது.   “நற் கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்று அவரை சுந்தரர் சிறப்பித்து அருளிச் செய்துள்ள திருத்தொண்டத்தொகை வரிகளும் இக்கருத்துக்கு அணி செய்கின்றன.

“ இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்”

“ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன்”

“ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்”

“ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா “

“கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்”

“ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் எத்தாதென் நா”

“ வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா “

“பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்”

“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர்க்கழலலால் உரையாதென் நா”

“பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியலால் அரற்றாதென் நா”  

என்ற வரிகள்,  நமக்கு  எவ்விதத் துயரத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் கொடுக்க வல்லன. நாள் தோறும் இதனைப் பாராயணம் செய்யச் செய்ய அந்நிலை அடைவதற்காக  அடி எடுத்து வைக்கிறோம் என்பதை நமது  அனுபவத்தால் அறிய முடிகிறது. இந்த ஞான முதிர்ச்சி ஒன்றே நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவித்துப் பேரின்பமாகிய சிவானந்தம் பெற ஆற்றுப் படுத்தும். உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மையும் வெளிப்படுகிறது.

Tuesday, April 13, 2021

 

  பன்னகாபரணர்


பாம்பு என்றால் படையும் அஞ்சும் என்பார்கள். ஒலி எழுப்பிக் கொண்டு சீறுவதால் அதற்கு அரவு என்றும் அரவம் என்றும் பெயர். அரா என்றும் சொல்வது உண்டு. அரனுக்கு ஆபரணமாக விளங்குவதால் அரவம் ஆயிற்றோ என்று கூடக் கற்பனை செய்து பார்க்கலாம். இதன் நஞ்சும் பணமும் ஒருவனை அழிக்க வல்லனவாதலின் பாம்புக்குப் பணம் என்றும் பெயர் உண்டு. சீறும் பாம்பைக்கண்டு அஞ்சாதார் யாரே உளர் ? புற்றுக்குள் அது வாழ்ந்தாலும் அப்புற்றுக்கு அருகே பயந்தே போக வேண்டியிருக்கிறது.

மேட்டுப்பாளையத்திலிருந்து  உதக மண்டலம் செல்லும் வழியில் அரவங்காடு என்ற ஊர் இருக்கிறது.ஒருவேளை அங்கு பாம்புகள் மிகுதியாக இருந்திருந்து  அப்பெயர் வந்திருக்கலாம். இப்போதும் சில கிராமங்களில் ஊரின் புறத்தில் யாருமே அணுக முடியாத அளவுக்குப் புதர்கள் மண்டி இருக்கும் இடங்களில் ஏராளமான பாம்புகள் காணப் படுவதாகக் கூறுகின்றனர். கோயில்களின் பாழடைந்த கோபுரங்களில் இவை தஞ்சம் அடைவதும் உண்டு. இவ்வளவு ஏன்? கிராமங்களிலும், வயல்கள் சூழ்ந்த சிறிய நகரங்களிலும் வீடுகளுக்குள்ளேயே  பாம்புப் பிரவேசம் நடைபெறுவதும் உண்டு. அவ்விடத்தை விட்டு அகலுவதற்கு முன்பாகத் தன் சட்டையை உரித்துவிட்டுச் செல்வதை இன்றும் காணலாம். மழைக் காலங்களில் ஒதுங்குவதற்காக வீடுகளில் தஞ்சம் அடைவதை அதிகமாகப்  பார்க்க முடிகிறது.

விந்தை என்னவென்றால், பாம்பானது சிவலிங்கப் பெருமானைச் சுற்றிக் கொண்டு படம் எடுத்து நிற்பது தான்! சில ஆண்டுகள் முன் குடந்தைக்கு அண்மையில் உள்ள தேப்பெருமானல்லூரில் ஒரு பாம்பு கருவறைக்குள் நுழைந்து சிவலிங்கமூர்த்தியைச் சுற்றிக் கொண்டதைப் படம் எடுத்து அதைச் சமூக வலைத் தளங்கள் வாயிலாகப்  பலரும் கண்டனர்.

பாம்புக்கும் பரமசிவனுக்கும் என்ன தொடர்பு என்று சிலர் சந்தேகிக்கலாம். காளஹஸ்தியில் பாம்பு சிவபிரானைப் பூஜித்ததாகக் கூறுவார்கள். மனிதர்களே மட்டுமல்லாமல் யானை,பாம்பு,சிலந்தி ,ஈ, எறும்பு, காக்கை, அணில், குரங்கு போன்ற எத்தனையோ உயிரினங்களும் இறைவனைப் பூஜித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இருந்தாலும் பாம்பை அதிகமாகவே தொடர்பு படுத்திக் கூறுவதன் காரணம், அதனை சுவாமி, தனது திருமேனியில் விருப்பத்தோடு அணிவதே  ஆகும் . அதனால்  பன்னகாபரணன் என்ற நாமமும் வந்து விட்டது.  திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ளதும், கருவூர்த் தேவரின் திருவிசைப்பா பதிகம் பெற்றதுமான முகத்தலை(பன்னத் தெரு) என்ற தலத்தில் மூலவருக்குப் பன்னகாபரணர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. பாம்பானது வெறுமனே திருமேனியின் மீது ஊரவில்லை. அது வழிபாடும் ஆகும் என்பதை ஞான சம்பந்தர் தனது திருநீற்றுப் பதிகத்தில், “ அரா வணங்கும் திருமேனி ஆலவாயான்” என்று அழகாக எடுத்துரைக்கிறார்.

ஐந்து தலை நாக வடிவில் மூலவருக்குப் பல இடங்களில் கவசம் அணிவிக்கப்படுகிறது. அரச மர மேடைகளில் உள்ள நாகப் பிரதிஷ்டை களில், இரு புறமும் நாகங்கள் நிற்க, நடுவில் சிவலிங்கப்பெருமான் காட்சி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். பல கோயில்களில் சுவாமிக்கு நாக நாதர் என்ற பெயரும் உண்டு. திருநாகேசுவரத்திலும்,குடந்தைக் கீழ்க் கோட்டத்திலும், நாகேச்வரர் என்ற பெயர் உள்ளதைக் காணலாம். நாகை,  நாகூர் ஆகிய சிவத்தலங்களிலும் நாகத்தைத் தொடர்பு படுத்தியே ஊர்ப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருப்பாம்புரத்தை சர்ப்பபுரி என்பதும் நோக்கற்பாலது.

பெருமான் கச்சையாகக் கொண்ட பாம்புக்கு ஐந்து தலைகள் உண்டு என்பதை, “ ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்த வெண் பொடி சங்கரனே”  என்ற ஞானசம்பந்தர் வாக்கால் அறியலாம். இக்கருத்தை, அவர் அருளிய திருவெழு கூற்றிருக்கையிலும், “ ஐந்தலை அரவம் ஏந்தினை” என்றமை காண்க.  பாம்பு கடித்து மாண்ட அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பிக்க அப்பர் சுவாமிகள்  பாடிய பதிகத்தில்,      “ பத்துக்கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் “ என்று சற்று விரிவாகவே குறிப்பிடுகிறார்.

பாம்பானது இறைவனுக்கு ஆபரணமான புராண வரலாற்றையும் இங்கே நினைவு கூற வேண்டும். தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கி அவர்களுக்கு ஞானம் உபதேசிக்கும் பெருங்கருணையுடன் பிக்ஷாடன மூர்த்தியாக எழுந்தருளியதைக் கண்டு பொறாத முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த புலி, நாகம்,முயலகன், யானை ஆகியவற்றைப் பெருமான் மீது ஏவினர். புலியும் யானையும் அவருக்கு ஆடைகள் ஆயின. முயலகனைப் பாதத்தின் கீழ் வைத்தார். நாகமோ அவருக்கு ஆபரணம் ஆயிற்று. “ பூண்பதுவும் பொங்கரவம்” என்பது திருவாசகம்.

பாம்பாகிய இந்த அணிகலனோ பெருமானது சிரத்திலும், கரங்களிலும், மார்பிலும் இடையிலும் தவழ்கிறது. முடிமேலிருக்கும் பாம்பும் சந்திரனும் ஜன்மப் பகைவர்களானாலும் பகையே இல்லாத இடத்தை அல்லவா அடைந்து விட்டார்கள்! “ பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் ” எனப் பாடுகிறார் அப்பர் பெருமான். “ அரவும் பிறையும் பற்றி ஊரும் பவளச் சடையான்” என்பது சுந்தரர் வாக்கு.

அவனணியும் பாம்போ கண்டோரை அஞ்சுவிக்கும் கரு நிறம் கொண்டது போலும்! தில்லையில் நடராஜப் பெருமானைப் பாடும் சுந்தரரும், “கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் பிடித்தாடி” எனப் பாடியருளுவார். இவ்வாறு கையைச் சுற்றியும் பாம்பு விளங்குவதை,” பலிக்கு ஓடித்திரிவார் கைப் பாம்பு கண்டேன் “ என்று தான் கண்ட காட்சியை அற்புதமாகப் பாடி மகிழ்வார் நாவுக்கரசர்.  மலைப்பாம்பையும் பரமன் ஏற்றுக்கொள்வார் என்பதை சம்பந்தப் பெருமான், “ பாலூறும் மலைப் பாம்பும்” என்பார் நாலூர் மயானப் பதிகத்தில்.        

பாம்போ அடிக்கடி இரைக்க (ஒலி  எழுப்ப) வல்லது. சீறும் தன்மையது.  திருப்புகலூர் மீதமைந்த ஓர் பாடலில், “ இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் “ என வரும் தொடர் இதனைச் சுட்டிக் காட்டுகிறது.

மூவேந்தர்களுடன் திருப்பரங்குன்றத்தை அடைந்த சுந்தரர், பரங்குன்ற நாதர் மீது பாடிய தேவாரத் திருப்பதிகம் மிக்க நயம் வாய்ந்தது. அதில் பெருமானது திருமேனியில் பாம்புகளைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்றும் அதன் காரணமாக அவருக்கு ஆட்செய்யவே அஞ்சுகின்றேன் என்றும் பாடியுள்ளார். ( ஆனால் அவரே, திரு நாட்டியத்தான்குடியில் பாடுகையில், “ பூண் நாண் ஆவதோர் அரவம் கண்டு அஞ்சேன்” என்றும் பாடியமை ஒப்புநோக்கற்குரியது). 

“ ஆர்த்திட்டதும் பாம்பு கைக்கொண்டதும் பாம்பு

   அடிகேள் உமக்கு ஆட்செய்ய அஞ்சுதுமே .” என்பது அப்பதிகத்தில் காணப்படும் தொடர். நீலகண்டத்தைச் சுற்றி ஓர் பாம்பு. தோள்களைச் சுற்றிலும் பாம்பு.சிரத்தின் மீதும் , கச்சணிந்த இடையிலும் ,கரங்களிலும் பாம்புகள். இவற்றைத் தொகுத்து நாவலூர் பெருமான் அருளும் பாடலைக் காண்போம்.

பறைக்கண் நெடும் பேய்க்கணம் பாடல் செய்யக்

   குறட்பாரிடங்கள் பறை தாம் முழங்கப்

பிறைக் கொள் சடை தாழப் பெயர்ந்து நட்டம்

    பெருங்காடரங்காக நின்று ஆடல் என்னே

கறைக் கொள் மணிகண்டமும் திண் தோள்களும்

     கரங்கள் சிரம் தன்னிலும் கச்சும் ஆகப்

பொறிக் கொள் அரவம் புனைந்தீர் பலவும்

     பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.

அவன் ஏது உடுத்து, ஏது சூடி, ஏது அமுது செய்தால் என்ன?  அத்தனையும் அழகாகத்தான் இருக்கிறது என்று பரவசப் படுகிறார் அப்பர் பெருமான். அவனது சடை மீது  படமெடுத்து ஆடும் நாகம் இருப்பதும் அவனுக்கு அழகாகத்தான் இருக்கிறது என்பார் அவர்.

கடமணி வண்ணன், கருதிய நான்முகன் தானறியா

விடமணி கண்டம் உடையவன் தானெனை ஆளுடையான்

சுடரணிந்தாடிய சோற்றுத்துறை உறைவார்சடைமேல்

படமணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே.  

என்பது அவ்வினிய பாடல்.    

Wednesday, March 24, 2021

பழியும் பாவமும்


“முன்னம் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை, என்மீது பழி சுமத்துகிறார்கள்” என்று பலர் மிகுந்த மன வேதனையுடன் வருந்துவதைப் பார்க்கிறோம். இதனால், நாம் செய்த வினைக்கு அல்லது பாவத்திற்கு ஈடாகப் பழி வரும் என்பது இதன் கருத்து. பாவம் ஒன்றும் அறியாத அப்பாவிகள் மீதும் பழி வருகிறதே என்று கேட்டால் அவர்களைப் பற்றி நாம் அறிந்தது அவ்வளவு தான் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, அனுபவிக்க வேண்டிய தீவினைப்பயன்களுள் பழியும் ஒன்று என்பது தெளிவாகிறது. கடும் சொற்களால் ஒருவர் மனத்தைக் காயப் படுத்துபவர்களும் இப்பழியை அனுபவிக்க நேரிடும். அவ்வாறு அனுபவித்தாலொழிய  நாவினால் சுட்ட வடு ஒரு நாளும் ஆறாது. ஞானசம்பந்தரும் இதனை, “உரையினால் வந்த பாவம்” என்று அருளிச் செய்தார். மேலும்  அவர்,  “ பழிப்பாய வாழ்க்கை” என்றார்.  

ஒருசிலர் மேல் அபாண்டமாகப் பழி சுமர்த்துவதன் மூலம் தப்பிக்க முயல்பவர்களும் உண்டு. அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கே பாவம் வந்து சேரும் என்ற எச்சரிக்கை தேவையாகிறது. திருவிளையாடற் புராணத்தில் பழியஞ்சிய படலம் என்ற பகுதியை நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.  காட்டில் தனது  மனைவியோடும், கைக்குழந்தையோடும் சென்று கொண்டிருந்த அந்தணன் ஒருவன் அவளை ஓர் மரத்தடியில் இருத்திவிட்டு  நீர் கொண்டு வரச் சென்றபோது அம்மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அம்பு ஒன்று காற்றினால் அலைக்கப்பட்டுக்  கீழே இருந்த அப்பெண்ணின் மீது பாய்ந்ததால் அவள் அக்கணமே இறந்தாள். நீர் எடுத்துக் கொண்டு வந்த அந்தணன் இதனைக் கண்டு அதிர்ச்சியுற்று சுற்றிலும் நோக்கும்போது, ஒரு வேடன் அங்கு வரக் கண்டான். அவனே இச்செயலைச் செய்திருக்க வேண்டும் என்று கருதி, அவ்வேடனைப் பாண்டியனிடம் அழைத்துச் சென்று புகார் செய்தான்.   அந்தணன் கூறியது நடந்திருக்க சாத்தியமே என்று எண்ணிய பாண்டியன் அவ்வேடனைச்  சிறையில் இட்டான். இவ்வாறு அப்பாவி வேடன்மீது வீண் பழி வந்தது.

நீதியே வடிவான சிவபெருமான் இப்பழியிலிருந்து வேடனைக் காத்தருள எண்ணினான் போலும். பாண்டியனும் அவனது மந்திரியும் நகர்வலம் வருகையில் ஓரிடத்தில் எம தூதர்கள் பேசுவதைக் கேட்டனர். அங்கிருந்த வீட்டில் ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு காளை ஓடிவந்து மணமகனைக் குத்தி அவன் மரணிப்பான் என்று இத்தூதர்கள் தமக்குள் பேசிக் கொண்டனர். மரத்தின் மேலிருந்த அம்பை  எப்படி விழவைத்து அந்தணனது  மனைவியின் உயிரைக் கவர்ந்தோமோ அவ்வாறே இதுவும் நடக்கும் என்று இயம தூதர்கள் பேசிக் கொண்டனர். சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு காளை மாடு, மணப் பந்தலில் நுழைந்து மணமகனைக் கொம்பால் குத்தி வீழ்த்தியது. அப்பொழுதுதான் பாண்டியனுக்கு உண்மை விளங்கியது. வேடனுக்குத் தவறாகத் தண்டனை வழங்கியதற்கு வருந்தி உடனடியாக அவனைச் சிறையிலிருந்து விடுவித்தான். அதனால் பெருமானுக்குப் பழி அஞ்சிய சொக்கர் என்று திருநாமம் வழங்கலாயிற்று. “ தேவாரமும் பழிதீர்த்த கடவுள் “ என்று சிவபிரானைப் போற்றுகிறது.

பழியிலிருந்து மீள வழியே  இல்லையா என்று கேட்கலாம். இறைவனிடம் தஞ்சம் அடைவது ஒன்றே வழி என்று தேவாரப் பாடல்கள் நமக்கு உபதேசிக்கின்றன. ஒருசிலவற்றையாவது இங்கு எடுத்துக் காட்டலாம்:

 

1.  பறையும் பழி பாவம் படுதுயரம் பல தீரும்

2. பாசம் தனை அற்றுப் பழியில் புகழாரே.

3. பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே.

4. ஒண்தமிழ் வல்லார்க்கு அறும் பழி பாவம் அவலம் இலரே.

5.கோலக்கா பற்றிப் பரவப் பறையும் பாவமே

திருஞானசம்பந்தரின் திருப்பதிகங்களை ஒதுவதாலும் பழியிலிருந்தும் விடுபடலாம்.அது எவ்வாறு எனில், பாவம் நீங்கி விடுவதாலே என்க.

“ நறும்பொழிற் காழியுள் ஞானசம்பந்தன்

பெறும்பத நல்லூர்ப் பெருமணத்தானை

உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு

அறும் பழி பாவம் அவலம் இலரே.”

என்ற பாடலால் இதனை அறியலாம்.

பழித்தல் என்பதற்கு ஏசுதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஏசுவது போலத் துதிப்பதை நிந்தா ஸ்துதி என்பார்கள். இதனையும் திருமுறைகளில் நாம் காண்கிறோம். பித்தன் என்று ஏசிய போதிலும் அதுவே பெருமானுக்குத் தோத்திரம் ஆயிற்று.

தன்னைக் காக்க முன்வராவிட்டால் பெருமானுக்குப் பழி வந்து சேரும் என்று கூறும் அழகை,  சுந்தரர் வாக்கில், “ நீரே பழிப்பட்டீர் “ என்று வருவதால் அறியலாம். திருவாசகமும் இதைப் போலவே,

“ வேலை நஞ்சுண் மழைதரு கண்டன்

குணமிலி தேய் மதியன் பழைதரு மாபரன்

என்றென்று அறைவன் பழிப்பினையே “

என்றும்,

“ விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் தோலுடைப்பிச்சன்

  நஞ்சூண் பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன் என்று ஏசுவனே.”

என்றும் கூறுவது,  அறிந்து மகிழத்தக்கது.

Wednesday, December 9, 2020

பாதமே துணை

 

                                                       பாதமே துணை             

                                                                           சிவபாதசேகரன்


                                                                                              மாணிக்கவாசகர் 


நாம் யாரைச் சார்ந்து வாழ்கிறோமோ அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை வந்தடைகின்றன. உலகில் நல்லவர்களாக வாழ, நல்லவர்களின் துணையும் வழிகாட்டுதல்களும் தேவைப் படுகின்றன. குடும்பத்திலுள்ள நற்பண்புகளிலிருந்து துவங்கி வெளியில் பழகும் வரை நல்ல பழக்கம் ஏற்பட இது வகை செய்கிறது. அது இல்லாதவனைப் “பழக்க தோஷம்” உள்ளவனாக அடையாளப்  படுத்துகிறோம். ஆணவம்.கன்மம்,மாயை ஆகியவற்றின் வசப்படும் உயிர்கள் தாமே உயர்கதி அடைய சக்தியற்ற தன்மையால் இறைவனது கருணையால் மட்டுமே உய்யப்பெறுகின்றன. பாசத்தோடு கட்டுண்ட பசுக்களாகிய உயிர்கள் பதியின் துணையினால் உய்யப்பெறுவதை சித்தாந்த நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

உலகைப் படைக்கும்போதே உயிர்களின் பக்குவத்திற்கேற்றபடி கருணை பாலிப்பதால் தனிப் பெருந்துணையாக இறைவன் விளங்குவதை ,              “ எனக்கு ஆர் துணை நீ அலதே “ என்ற திருமுறை வாக்கால் அறிகிறோம். உயிர்களுக்கு உருவத்தைத் தந்த ஈசனே அவற்றின் அங்கங்கள் யாவும் அவனை வணங்கிப் போற்றுவதற்காக அமைத்து,  உய்யும் வழியைக் காட்டியுள்ளான். தானும் ஓர் உருவெடுத்து முன்வந்தருளி சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்த்துகிறான். சீவன் சிவனை அடையாளம் கண்டவுடன் சிவ சம்பந்தமாகி, பழக்கமும் அவ்வுயிர்க்கு  ஏற்பட்டுவிடுகிறது. சிவ புண்ணியத்தை ஈட்டிய உயிர்களுக்கு இப்பழக்கம் பணி செய்வதன் மூலம் சித்திக்கிறது. சித்த மலம் அறுபட்டுச்  சிவமாகிறது. இதற்கு எதுவாக அமையும் முதற்கட்ட வழிபாடே உருவ வழிபாடு.

உருவ வழிபாட்டில் முதலிடம் பெறுவது, அவ்வுருவத்தின் பாதமே கதி என்று பணி செய்வதாகும். “ திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் “ என்பது திருவாசகம். பாதாதி கேசமாகத் திருவுவைப் பெரியோர் வணங்குவர். திருவடிகளைக் காண்பதை  ருத்ர பாத தரிசனம் என்று திருவாரூரில் அழைப்பார்கள். “ எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே “ என்பார் அப்பர் சுவாமிகள். ஆலயங்களில் அர்ச்சனைகளும் அப்பொன்னடிக்கே செய்யப்படுகின்றன. பிரார்த்தனையும் பொன்னடிக்குச் செய்யப்படுவதை, “ பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் “ என்ற அப்பர் வாக்கால் அறிகிறோம்.

தீக்ஷா கிரமங்களில் திருவடி தீக்ஷை முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே குருவாக எழுந்தருளித் திருவடியைச் சிரத்தின் மீது வைத்தருளுவது அருளாளர்களுக்கே வாய்க்கும். சுந்தரர் துயின்று கொண்டு இருந்தபோது இறைவன் அவரது முடியில்  திருப்பாதத்தைச் சூட்டி அருளியதும், நல்லூரில் நாவுக்கரசருக்குத் திருவடி சூட்டியதும், பெரிய புராணம் நமக்கு அறிவிக்கும் செய்திகளாகும்.  “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் “ என்ற அப்பரது தேவார வாக்கு இதற்கு அகச் சான்றாக அமைகிறது. வைணவக் கோயில்களில் சடாரி சார்த்தப்படுவது போலவே நல்லூரிலும் சேவார்த்திகளின் சிரத்தில் திருப் பாதம் சார்த்தப்படுகிறது. 

இன்னம்பர்,திருவையாறு ஆகிய தலங்களில் அப்பர் பெருமான் அருளிய பதிகங்கள் பலவற்றுள் திருவடியைப் பாடல் தோறும்  போற்றுவதாக அமைந்துள்ளன. திருவதிகை வீரட்டத்துப் பதிகங்களில் ஒன்று திருவடித் திருத்தாண்டகம் என்பதாகும். அதில் ஒவ்வொரு வரியிலும் அப்பரடிகள்  சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றுவதாக உள்ளது அறிந்து இன்புறத்தக்கது. அதில் ஒரு பாடலை இங்குக் காணலாம்:

“அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி

அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி

சரவணத்தான் கை தொழுது சாரும் அடி

சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி

பரவுவார் பாவம் பறைக்கும் அடி

பதினெண் கணங்களும் பாடும் அடி

திரைவிரவு தென் கெடில நாடன் அடி

திரு வீரட்டானத்து எஞ் செல்வன் அடி. “

{ அரவணையான்- பாம்பணையில் துயிலும் திருமால்; அருமறையான்- பிரமன்; சென்னி-சிரம்; சரவணத்தான்-முருகன்; சார்ந்தார்கட்கு – தன்னைச் சரண் என்று சார்ந்தவர்களை; பரவுவார்-துதிப்பவர்கள்; கெடில நாடன் – கெடில நதி அருகே கோயில் கொண்டுள்ள திருவதிகைப் பதி }

இப்பதிகத்தில் இறைவனது திருவடி, காலனைக் காய்ந்தது, அரக்கனான இராவணனின் ஆற்றலை அழித்தது, கணக்கு வழக்கைக் கடந்தது, அழகு எழுத முடியாத அருட் சேவடி, உரு என்று உணரப்படாத அடி, உரையால் உணரப்படாத அடி, மந்திரமும் தந்திரமும் ஆய அடி, மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி என்றெல்லாம் திருவடியைப் பலவாறு போற்றுகின்றார் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமான்.  

திருவடிகளே ஆதியும் அந்தமும் ஆவன.அவையே பல்லுயிர்களின் தோற்றத்திற்கும், போகத்திற்கும், மறைவுக்கும் கார்ணமாவன. திருமாலும் பிரமனும் காணாத அத்  திருவடிகளே நம்மை ஆட்கொண்டு அருளுவன. இவை அனைத்தையும் ஒரே பாடலில் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்க வழங்குகிறது மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல். அப்பாடலின் மற்றுமோர் அழகாவது அத்திருவடிகளின்  வருணனையே. அதனைப் , பாதமலர், செந்தளிர்கள்,பொற்பாதம், பூங்கழல்கள், இணை அடிகள், புண்டரீகம் ஆகிய சொற்களால் சொற்பதம் கடந்த தொல்லோனுக்குச்  சொன்மாலை அணிவித்து அகமகிழ்கிறார் மாணிக்கவாசகர்:

“போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். “

“ கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் “ என்ற அப்பர் வாக்கும் இங்கு சிந்தித்தற்குரியது.

Wednesday, December 2, 2020

சைவத்திலும் "இராமாநுஜர்கள்" உண்டு


 தமிழ் மொழியை முன்னிறுத்திக் கொண்டு பின்னால் இருந்து குளிர் காயும் கயவர் கூட்டம் பெருகி விட்டது. இக்கூட்டத்தினர்  அப்படி ஒன்றும் தமிழ் மீது ஆறாக்  காதல் கொண்டவர்கள் அல்லர். தமிழின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள். ஏமாந்து போகிறவர்கள் இருக்கும் வரை இவர்களது பிழைப்பு கொடி கட்டிப் பறக்கும். ஏழேழு தலைமுறைக்கும் இவ்வகையில் பணம் சம்பாதித்தும் இவர்களுக்குப்  பண வெறி அடங்கவில்லை. இதில் பலிகடா ஆக்கப்படுவது தமிழ் மொழியும் அதைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் ஆவர்.

தமிழ் மொழி தொன்மையானது என்று இன்று மார் தட்டிக் கொள்வதற்கு மூல காரணமாகவும் ஆதாரமாகவும் விளங்குவன இதிலுள்ள பழம் பெரும் இலக்கியங்கள் என்பதை மறக்கலாகாது. இல்லாவிட்டால் மண்ணைத் தோண்டும் போது கிடைக்கும் பாண்டங்களை மட்டும் பார்த்துக் கொண்டு பண்டைத் தமிழர் நாகரீகம் என்று வேண்டுமானால்  சொல்லிக் கொள்ள  முடியும். அழிந்தவை போக எஞ்சிய இலக்கியங்களை ஊர் ஊராகச் சென்று மீட்டெடுத்து அச்சிலேற்றிக் காப்பாற்றிக் கொடுத்தவருக்குக் கூட நன்றி செலுத்தாத அளவுக்கு சாதி ரீதியில் மக்களைப்  பிரித்துப் பணம் கண்டவர்கள் தங்களைத்  தமிழ்க் காவலர்கள்  என்று கூறிக் கொள்வதையும் அதை நம்பும் மக்களையும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தமிழை முறையாகக் கற்காதவர்களும் , அரை குறையாகப்  படித்தவர்களும் மக்களது அறியாமையைப் பயன் படுத்தி ஏமாற்றுகிறார்கள். இதில் மயங்கிய மக்களோ அவர்களை அறிஞர்கள் என்று போற்றுவதும் சிலை வைப்பதும் பட்டங்களைக் கொடுப்பதுமாகத் தம்மைத் தாமே மேலும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். ழகரமும், லகர ளகரங்களும் பேசத்  தெரியாததோடு மெல்லினத்திற்கும் வல்லினத்திற்கும் வேறுபாடு அறியாதவர்கள் அந்த அறியாமையைச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்துவது நகைப்புக்கு உரியது. 

ஆன்மீக உலகிற்கு வெளியில் அநேகம் நடக்கக் கூடும். அது பற்றி விமர்சிப்பது நமக்கு நோக்கம் அல்ல. அதே நேரத்தில் தமிழ் அறிஞன் என்றும் சொற்பொழிவாளர் என்றும் சொல்லிக் கொண்டு சமயத்தைப் பிளவு படுத்துவதும் மக்களுக்குள் காழ்ப்பு உணர்ச்சிக்கு வித்திட்டு பணம் சம்பாதிப்பவனைக் கண்டிக்காமல் இருப்பது நியாயமாகாது. குற்றமும் ஆகும். அதைக் கடந்து விடுவது அன்னையை இழித்துப் பேசியவனைக் கடந்து போவதற்குச் சமம். 

வழக்கம் போலத்  தன்னை மேதாவியாக நினைத்துக் கொண்டும், தமிழ்க்  காவலன் போல எண்ணிக் கொண்டும் பிறரை இழித்து வருபனை மக்கள் நன்கறிவர். கண்டித்தும் வருகின்றனர். இருப்பினும் இவனுக்குத் துணை போகிறவர்களும் உண்டு. மக்களின் மந்தமான சமய அறிவு இவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.    சமய நாட்டம் என்பது ஓரளவு இரத்தத்தில் ஊறி இருக்கவேண்டும். சமய நூல்களைக் கற்காவிடினும் வேடராகவே இருந்து முக்தி பெற்ற  கண்ணப்பரை விடவா சிறந்த எடுத்துக்காட்டைக் கூற முடியும் ? 

சமீப காலமாகவே நாத்திகர்களும் தமக்கு வேண்டுமென்றால் இராமானுஜரை அரவணைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். நோக்கம் நிறைவேறிவிட்டால் அவரை விலக்கவும் தயங்குவதில்லை. இடத்திற்கு ஏற்பப் பேசுவதில் வல்லவர்கள் அவர்கள். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். சமயச் சொற்பொழிவு செய்பவருமா இரட்டை வேடம் போட வேண்டும் ? அதுவும் தமிழின் பெயரில். பெரிய சீர்திருத்தம் செய்ய வந்தவரைப் போலப்  பேசி மக்கள் மனத்தில் நஞ்சைத் தூவுவதும் ஒரு பிழைப்பா ? 

சைவத்தில் இராமாநுஜரைப் போல எவரும் இல்லையாம். திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோர் செய்த குல நல்லிணக்கம் பற்றி இவர் படித்ததில்லை போலும் !  பாணர் குலத்தில் உதித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரை, சம்பந்தப்பெருமான், தான் செல்லுமிடங்களுக்கெல்லாம் கூட அழைத்துச் சென்றதோடல்லாமல் பேதம் பாராமல் அக்னி ஹோத்ரம் செய்யும் இடத்திலும் கூடவே அமர்த்திக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறும். குலம் பாராது துன்பப்படுபவர்களின் துயரங்களை ஞான சம்பந்தர்  தீர்த்து அருளியதை  இவர் அறியாதது வியப்பினும் வியப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது திருமணம் காண வந்திருந்த அனைவருக்கும் சிவலோக முக்தி வழங்கும் முன்பு நமசிவாயத் திருப் பதிகத்தை அனைவரும் கேட்கும்படி அருளியது, வந்தவர்கள் அனைவருக்கும் பாகுபாடன்றி பஞ்சாக்ஷர மகா  மந்திர உபதேசம் செய்த கருணையேயாகும். இராமானுஜர் திருக் கோஷ்டியூரில் அங்கிருந்தவர்களுக்கு நாராயண மந்திரம் உபதேசம் செய்ததை மட்டும் அறிந்தவர்கள் சம்பந்தரது கருணையை அறியாதது ஏன் ? 

திருநாவுக்கரசரை முன்னர் பார்த்திராத அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் அவர்பால் பக்தி பூண்டு தான் செய்யும் தரும காரியங்களுக்கெல்லாம் அப்பரின் நாமம் சூட்டிய வரலாறு அடியார்கள் சாதிப் பிரிவுகளைக் கடந்து நிற்பதற்கு வழி காட்டியதாக இவருக்குத் தோன்றவில்லையா ? முதலில் இவர் பெரிய புராணம் படித்து விட்டுப் பிறகு சொற்பொழிவு ஆற்ற வர வேண்டும். 

கோயில்கள் என்பவை அடியார்கள் தரிசிக்க ஏற்பட்டவையே ஆகும். வேதங்களால் வழிபடப்பெற்று மூடப் பெற்றிருந்த வேதாரண்யம் கோயிலை அப்பரும் சம்பந்தரும் தங்கள் தமிழ் மாலைகளால் மூடவும் திறக்கவும் செய்தனர் என்றால் வேதத்தையும் ஆகமங்களையும் அருளிய இறைவன் நாளும் தமிழிசை கேட்கும் விருப்போடு இருவரையும் பாடச்  செய்தான் என்று கொள்ள வேண்டுமே தவிர, தமிழ் உயர்ந்ததா அல்லது வடமொழி வேதம் உயர்ந்ததா என்று சர்ச்சை செய்வதை உண்மைச் சைவர்கள் ஒருபோதும் விரும்பார்.  

ஆழ்வாருக்காகச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் பாம்பணையைச்  சுருட்டிக் கொண்டு கோயிலை விட்டுப் போய் விட்டதால் வேதத்தையும் ஆகமங்களையும் விடத்  தமிழையே விரும்பினார் என்று சிண்டு முடியத்  தெரியும் இவருக்கு அதன் தத்துவம் அறியாமல் போனதோடு அவ்வண்ணமே பிறருக்கும் தவறாகவே எடுத்துரைப்பது கண்டிக்கத்தக்கது. ஊருக்கு ஊர் சுவாமிக்குத் தேர் வேண்டாம் என்றும் உண்டியலில் பணம் போடச் சொல்லி  பெருமாள் கேட்டாரா என்றும்  பேசியவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் !

தமிழே உன்னால் வாழ்ந்தேன் என்று சொல்லி விடுவது எளிது. தமிழைச் சரிவரக்  கற்காமலேயே, தமிழைப்போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பீற்றிக் கொள்வது அதை விட எளிது. இன்று தமிழ் மொழியிலுள்ள இலக்கியப்  படைப்புக்கள் அதிக அளவில் சமயத்தைச் சார்ந்தே இருப்பதை மக்களிடம் சேர்க்காதது யார் குற்றம் ? இந்தப் பொறுப்பை ஏற்காமல் பணம் ஈட்டுவதற்காக மக்களை பிரிப்பது மட்டுமே தெரிந்தவர்களின் நாடகம் என்றாவது மக்களுக்குத் தெரிய வரும். அவ்வாறு நடைபெற்றால் மக்கள் இப்படிப் பட்டவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.


அப்பர் பெருமானின் ஒரு பாடலை இங்கே  நினைவ கூர்ந்து இப்பதிவை நிறைவு செய்வோமாக:


" சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து வான் ஆளத் தருவரேனும் 

 மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில் 

 அங்கமெல்லாம் அழுகு  தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் 

 கங்கைவார்சடைக் கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே. "

சங்க பதும நிதிகளைத் தந்து வானுலகையே ஆளத் தந்தாலும் அவர்களது செல்வத்தை மதிக்க மாட்டோம். அதே சமயம், உடல் அழுகித் தொழு நோயால் அவதியுறும் ஒருவன் கங்கையை சடையில் வைத்த சிவபெருமானுக்கு அன்பன் என்றால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பரடிகள்.

புலையனையும் தெய்வமென ஏற்கும் நிலையைச் சைவம் காட்டவில்லையா ? வைணவம் காட்டியது வெளிச்சத்திற்கு வந்தது போல் சைவத்தின் அருமை பெருமைகளைக் வெளிப்படுத்தாதது யாருடைய குற்றம்? பூனை  கண்களை மூடிக் கொண்டால் உலகமே இருண்டது என்று நினைத்ததாம் !. அதே மனநிலைதான் சமயச் சொற்பொழிவாற்றியும் தெளிவு பெறாத சிலரது  பரிதாப நிலை !